Published:Updated:

கடையம்: கணவரின் சந்தேகம்; குடும்பத் தகராறு! - இரு குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த தாய்

தீக்குளிப்பு
தீக்குளிப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தன் இரு குழந்தைகளுடன் தீக்குளிப்பு. மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செக்கடியூரை சேர்ந்தவர் சரவணன் என்ற சுரேஷ். 32 வயது நிரம்பிய அவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். சரவணனின் மனைவி கௌரி என்ற கனகா (26). இந்தத் தம்பதிக்கு கீர்த்தனு என்ற 5 வயது மகனும் இலக்கியா என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்.... நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு..! இன்றைய நிலை என்ன?

வேலை காரணமாக கேரளாவுக்குச் செல்லும் சரவணனுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சரவணனின் தொல்லை தாங்க முடியாமல் கௌரி ஏற்கெனவே ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீஸார் சரவணனை அழைத்து விசாரணை நடத்திய பின்னர் எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

கேரளாவில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சரவணனுக்கும் கௌரிக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டதால், கௌரி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தென்காசியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

தீக்குளித்து உயிரிழந்த கௌரி என்ற கனகா
தீக்குளித்து உயிரிழந்த கௌரி என்ற கனகா

பின்னர் சரவணன் அங்கு சென்று சமாதானம் செய்து மனைவியை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின்னரும் கணவன் மனைவிக்கு இடையே தகறாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இன்று மதியம் தனியாக இருந்த கௌரி வீட்டைப் பூட்டிக் கொண்டு தன் மீதும் குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

தாயின் தீக்குளிப்பு என்னும் கொடூர முடிவால் தீயில் கருகிய குழந்தைகளின் மரண ஓலம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து வீட்டை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ மளமளவென பற்றி எரிந்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

தீக்குளிப்பு சம்பவத்தில் கருகிய மூவரின் உடல்கள்
தீக்குளிப்பு சம்பவத்தில் கருகிய மூவரின் உடல்கள்

தீக்குளிப்பு சம்பவம் பற்றி அறிந்த கடையம் போலீஸார், விரைந்து வந்து மூவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக தென்காசி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு