Published:Updated:

நெல்லை: தேர்தல் முன் விரோதத்தால் தாக்குதல்! - 4 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்!

தேர்தலில் வாக்களிக்காததால் தன் கணவனைத் தாக்கிய நபர்கள்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், பெண் ஒருவர் அதிருப்தி அடைந்தார். அதனால் தன் குழந்தைகளுடன் தீக்குளிக்க அவர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம், இடிந்தகரையை சேர்ந்தவர் ராஜன். இவரின் மனைவி சுமதி. இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகளும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். ராஜன் கூலி வேலை செய்துவருகிறார். சுமதி மீன் விற்பனை செய்யும் தொழில் செய்து குடும்பத்தை நடத்திவருகிறார்.

தாய் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்த சுமதி
தாய் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்த சுமதி

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜயாபதி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சகாயராஜ் என்பவர் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் தேர்தலில் நின்றபோது அவருக்கு ஆதரவாக வாக்களிக்காத ராஜன், சுமதி ஆகியோர் எதிர்த்தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகத் தெரிகிறது.

தேர்தலில் தனக்கு எதிராகச் செயல்பட்ட ராஜனை சகாயராஜ் ஆதரவாளர்கள் சிலர் தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த ராஜன் சிகிச்சைக்காக குமரி மாவட்டம், ஆசாரிபள்ளத்திலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மண்ணெண்ணெய் பாட்டிலைக் கைப்பற்றிய போலீஸார்
மண்ணெண்ணெய் பாட்டிலைக் கைப்பற்றிய போலீஸார்

இதில், ராஜன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சகாயராஜ்மீதும் அவரின் ஆதரவாளர்கள்மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்து அவர்கள் சுமதிக்குத் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. மேலும் அவரை மீன் வியாபாரம் செய்யவிடாமல் தடுத்ததாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த சுமதி, இன்று தனது தாய், நான்கு குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றார். அவர் கையோடு மண்ணெண்ணெயைக் கொண்டு வந்திருந்திருந்தார். அதைக் கேள்விப்பட்ட போலீஸார் அவர் கொண்டுவந்திருந்த பையைச் சோதனையிட்டபோது அதில் மண்ணெண்ணெய் பாட்டில் இருப்பது தெரியவந்தது.

தீக்குளிக்க முயற்சி
தீக்குளிக்க முயற்சி

உடனடியாக அந்த பாட்டிலை பறிமுதல் செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க வைத்தனர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறிய போலீஸார், அவரை இடிந்தகரை செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பிவைத்த பின்னரே நிம்மதியடைந்தனர்.

சில வருடங்களுக்கு முன்பு நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரு குழந்தைகளுடன் தம்பதியர் தீக்குளித்து இறந்த சம்பவத்தின் சுவடு மறையாமல் இருக்கும் நிலையில், இன்று நான்கு குழந்தைுகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு