மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெருமழை பெய்துகொண்டிருந்தாலும், தமிழகத்தில் தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்தபாடில்லை. நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. கிணறுகளும் தூர்ந்த நிலையில் உள்ளன. தண்ணீரைத் தேடி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வீதிகளில் அலைவதை அனைத்து நகரங்களிலும் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில், ‘அனைத்துக்கும் அரசை நம்பிக்கொண்டிருக்காமல், நாமே களத்தில் இறங்கி நீர்நிலைகளைத் தூர் வாருவோம்’ என, சொந்த செலவிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பிலும் ஐந்து ஏரிகளைத் தூர்வாரியுள்ளார் ஓய்வுபெற்ற ஆசிரியர் தியாகராஜன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள விளாங்குடியைச் சேர்ந்த தியாகராஜன், நல்லாசிரியர் விருது பெற்றவர். இவரின் தூர்வாரும் செயல்பாடுகளைக் கேள்விப்பட்டு, அரியலூர் மாவட்ட எஸ்.பி-யான சீனிவாசன் அவரைத் தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மாவட்ட மக்களும் அவரைக் கொண்டாடுகின்றனர்.

தியாகராஜனைச் சந்திக்க விளாங்குடி கிராமத்துக்குச் சென்றபோது, அந்த ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘அரியலூர் என்றாலே வறட்சியான மாவட்டம், மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயருண்டு. ஆனால், ஒரு காலத்தில் இது செல்வச் செழிப்பாக இருந்த பகுதி. ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன், அரியலூர் மாவட்டத்தைத் தலைமை யிடமாகக்கொண்டு ஆட்சி செய்தார். ஓர் அரசன், நீர்வளமும் நிலவளம் சிறப்பாக இருக்கும் பகுதியைத்தான் மையமாக வைத்து ஆட்சிசெய்வான். அந்த வகையில், இந்தப் பகுதி மருதையாறு, கொள்ளிடம், புள்ளம்பாடி வாய்க்கால் என மூன்று பக்கங்களும் நீரால் சூழப்பட்ட பகுதி. இதுமட்டுமல்லாமல், இந்த மாவட்டத்தில் 110 ஏரி, குளங்களுக்குமேல் இருந்துள்ளன. ஆனால், இன்று பல ஏரி, குளங்கள் தூர்ந்துபோய், மோசமான நிலைக்குச் சென்றுள்ளன என்றால், சிமென்ட் ஆலைகளும் அரசு அதிகாரிகளின் மோசமான நிர்வாகமும்தான் அதற்குக் காரணம்.

காட்டாமணக்கு, சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் பல ஏரிகள் தடம் தெரியாமலேயே போயிருக்கின்றன. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் செய்ய வேண்டியதை, தனியோர் ஆளாக ஆசிரியர் தியாகராஜன் செய்துள்ளார். விளாங்குடி பெரிய ஏரி, வீரப்பிள்ளை குட்டை, பிள்ளையார் குளம், தொண்டனேரி, வடுகனேரி என, இதுவரை ஐந்து ஏரிகளை 15 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய விஷயம்! தூர்வாரும் பணியில் அவருக்கு ஆதரவு தராமல், அதிகாரிகள் இடைஞ்சல் கொடுப்பது தான் வேதனையாக இருக்கிறது’’ என்று வருத்தப்பட்டார்.

தியாகராஜனிடம் பேசியபோது, ‘‘தமிழகத்தில் ஒரு பக்கம் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இன்னொரு பக்கம், நீர்நிலைகளின் நிலை நாளுக்கு நாள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. மனிதர்கள் நாம், எப்படியாவது தண்ணீர்ப் பிரச்னையைச் சமாளித்து விடுகிறோம். ஆனால், ஐந்தறிவுகொண்ட விலங்குகள், பறவைகள் என்ன செய்யும்? அதற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டாமா என யோசித்தேன். நம்மால் முடிந்த அளவில் குளம், கண்மாயைத் தூர்வாரலாம் என்று முடிவுசெய்தேன்.

என் மகள் ஆனந்தவல்லி, அமெரிக்காவில் பணிபுரிகிறார். இதுதொடர்பாக அவரிடம் பேசியபோது, என் கருத்துக்கு உடன்பட்டு ஊக்கமளித்தார். முதலில், 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட எங்கள் கிராமத்து விளாங்குடி பெரிய ஏரியைத் தூர்வார முடிவுசெய்தேன். ஆனால், அதற்கான அனுமதி அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடவில்லை. 2017-ம் ஆண்டுதான் இந்த முயற்சியைத் தொடங்கினேன். அனுமதிக்காக பொதுப்பணித் துறை அதிகாரிகளை பலமுறை தொடர்புகொண்டும் அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. பிறகு, அப்போதைய கலெக்டர் சரவண வேல்ராஜிடம் விவரத்தைச் சொன்னதும், அனுமதி கொடுத்தார். தூர்வாரியபோது எடுக்கப்பட்ட மண்ணை, அரசு அலுவலகம், கால்நடை மருத்துவமனை, பள்ளிக்கூடம் ஆகியவற்றுக்கும், குளத்துக் கரைகளைப் பலப்படுத்தவும் பயன் படுத்தினோம். அத்துடன், மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் ஏரிகளைச் சுற்றி சுமார் மூவாயிரம் பனை விதைகளை நட்டோம். கிராமத் தெருக்களில் சுற்றி இரும்புக் கூண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகளையும் நட்டோம்.

அமெரிக்காவில் உள்ள மகளின் பங்களிப்பு மற்றும் எனது சேமிப்புத்தொகை என இரண்டரை லட்சம் ரூபாயை வைத்துதான் தூர்வாரும் பணியைத் தொடங்கினேன். அதற்குப் பிறகு, என் மகள் ஆனந்தவல்லி, அவரின் நண்பர்களின் பங்களிப்புத் தொகை 10 லட்சம் ரூபாயை அனுப்பிவைத்தார். தொடர்ந்து, ‘எய்ம்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் ஆஃப் அமெரிக்கா அமைப்பினர், 1,80,500 ரூபாயை திருவாரூர், நாம்கோ தொண்டு நிறுவனம் மூலம் அனுப்பிவைத்தனர். கோவை மக்கள் அறக்கட்டளை, தங்கள் பங்களிப்புத் தொகையான 2,30,000 ரூபாயை அனுப்பிவைத்தது. அந்தப் பணத்தை வைத்து அடுத்தடுத்து தூர்வாரும் பணிகளைச் செய்துமுடித்தோம். இதுவரையிலும், 80.77 ஏக்கர் பரப்பளவுள்ள ஐந்து ஏரிகள், கண்மாய்கள் தூர்வாரப் பட்டுள்ளன. இந்த நல்ல காரியம் நடப்பதற் கெல்லாம் இந்த அமைப்புகளின் பங்களிப்பும் முக்கியக் காரணம்” என்றார்.

மாணவர்களுக்கு பாடம் போதித்த தியாகராஜன், தன் செயல்கள் மூலம் இப்போது சமுதாயத்துக்கே பாடம் போதித்துக் கொண்டிருக்கிறார்!