Published:Updated:

நிலத்தை அபகரிக்க முயல்கிறாரா அமைச்சரின் மகன்? - போராடும் 100 வயது தியாகி!

தியாகி கோவிந்தன்
பிரீமியம் ஸ்டோரி
தியாகி கோவிந்தன்

இவ்வளவு மக்கள் பணிகள் செய்தும், எனக்குச் சொந்தமாக ஒரு வீடு இல்லை. அதனால், 1978-ல் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் எனக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தது.

நிலத்தை அபகரிக்க முயல்கிறாரா அமைச்சரின் மகன்? - போராடும் 100 வயது தியாகி!

இவ்வளவு மக்கள் பணிகள் செய்தும், எனக்குச் சொந்தமாக ஒரு வீடு இல்லை. அதனால், 1978-ல் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் எனக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தது.

Published:Updated:
தியாகி கோவிந்தன்
பிரீமியம் ஸ்டோரி
தியாகி கோவிந்தன்

‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நிலஅபகரிப்பு குற்றங்கள் அதிகரிக்கும்’ என்பது எதிர்க்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டு. அதனாலேயே, தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு `இது போன்ற குற்றங்களை யார் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில்தான், கொடைக்கானலைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிக்கு அரசு வழங்கிய நிலத்தை தி.மு.க-வினர் அபகரிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வசிக்கும் ஆர்.டி.கோவிந்தன் எனும் சுதந்திரப் போராட்ட தியாகி நமது அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தில்தான் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். இதையடுத்து, கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் வசிக்கும் கோவிந்தனை நேரில் சென்று சந்தித்தோம். 100 வயதைத் தொட்டிருக்கும் பெரியவரைச் சுற்றி ஏகப்பட்ட பத்திரிகைகள் குவிந்திருந்தன. மெல்லிய குரலில், “நிறைய வாசிப்பேன் தம்பி... நாட்டு நடப்புகள் மேல் ஆர்வம் அதிகம்” என்றபடியே தனது பிரச்னையை விவரிக்க ஆரம்பித்தார்...

நிலத்தை அபகரிக்க முயல்கிறாரா அமைச்சரின் மகன்? - போராடும் 100 வயது தியாகி!

“சிறு வயதிலேயே நாட்டுப்பற்று அதிகம். 13 வயதில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றேன். 19 வயதில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று, திருச்சி சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டேன். காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் கொடைக்கானலுக்கு வந்தபோது அவர்களிடம் பாராட்டு பெற்றிருக்கிறேன். கொடைக்கானல் டவுன்ஷிப் கமிட்டியில் கவுன்சிலராக மூன்றாண்டுகள் இருந்திருக்கிறேன். ஐந்து கூட்டுறவு சங்கங்களில் தலைவராகப் பணியாற்றியுள்ளேன்.

இவ்வளவு மக்கள் பணிகள் செய்தும், எனக்குச் சொந்தமாக ஒரு வீடு இல்லை. அதனால், 1978-ல் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் எனக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தது. அதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு, முதல் நபராக 10 ஆயிரம் ரூபாய் நிதி அளித்தார் நடிகர் சிவாஜி கணேசன். அவரைத் தொடர்ந்து பலரும் நிதியளித்தனர். தொடர்ந்து கொடைக்கானல் ஆர்.சி.பள்ளி அருகே ‘காந்தி, காமராஜர், இந்திரா பவனம்’ என்று பெயரிட்டு வீட்டுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால், கமிட்டியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ஐ.பி.செந்தில்குமார்
ஐ.பி.செந்தில்குமார்

இதற்கிடையே, கொடைக்கானல் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளுக்காகப் போராடினேன். அப்போது, ‘கொடைக்கானலில் பலருக்கும் வீடு கிடைக்கக் காரணமாக இருந்த உங்களுக்கு வீடு இல்லை. உங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்டலாம்’ என்று சிலர் கூறினர். அப்போதுதான் அந்த இடத்துக்குப் பட்டா இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, 2013-ல் எனக்கு வீட்டுமனை கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடினேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலம் வழங்க உத்தரவிட்டும், பல ஆண்டுகள் அலைக்கழித்து, 2019-ம் ஆண்டு பழைய இடத்துக்கு பதிலாக கொடைக்கானல் அண்ணாசாலையில் இரண்டரை சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தைப் பட்டா போட்டுக் கொடுத்தனர்.

இந்த நிலையில்தான் 2021, அக்டோபர் மாதம் எனது இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த கொடைக்கானல் தி.மு.க நகரச் செயலாளர் முகமது இப்ராஹிம், ‘இது எங்களுடைய இடம்’ என்று கூறி தகராறு செய்தார். நான் பட்டாவைக் காட்டியபோது அதை அவரது ஆட்கள் பறித்துக்கொண்டதுடன் என்னை நெஞ்சில் அடித்து கீழே தள்ளினார்கள். இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கச் சென்றபோது டி.எஸ்.பி சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தி, ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன். அதுவரை அந்த இடத்தில் வேலை செய்ய வேண்டாம்’ என்று கூறி அனுப்பிவிட்டார். இதற்கிடையே மேல்மலை பிர்கா தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுரேஷ் என்பவர் ஐ.பி.செந்தில்குமார் அனுப்பியதாகக் கூறி, ‘பூம்பாறையில் மூன்று வீடுகள் கட்டித் தருகிறோம்; 20 சென்ட் நிலம் தருகிறோம்’ என்று சமாதானம் பேசினார். அதை நான் ஏற்கவில்லை...” என்று சொல்லி முடித்தார்.

நிலத்தை அபகரிக்க முயல்கிறாரா அமைச்சரின் மகன்? - போராடும் 100 வயது தியாகி!

தியாகியைத் தாக்கிய ஆளுங்கட்சியினர்மீது நடவடிக்கை எடுக்காமல் தியாகியிடம் ‘பேச்சுவார்த்தை’ நடத்திய கொடைக்கானல் டி.எஸ்.பி சீனிவாசனிடம் பேசினோம்... “தியாகியின் ஒரிஜினல் பட்டாவை ஒருவர் பறித்துச் சென்றதாகக் கூறப்பட்டது. அதை யார் பறித்தார்கள் என்று தெரியவில்லை. அதனால் தியாகியிடம் ‘பட்டாவை அரசு அலுவலகத்தில் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்’ என்று கூறி அனுப்பினேன்’’ என்றார்.

தியாகியின் வழக்கறிஞர் வெங்கடேஷ் நம்மிடம், “தாசில்தாரே நேரடியாக தியாகியைச் தேடிச் சென்று கொடுத்த பட்டா அது. அந்த இடத்தை உரிமை கொண்டாட தி.மு.க-வினரிடம் எந்த ஆவணமும் இல்லை. ஆனாலும், தியாகிக்கு நூறு வயதாவதால், அவருக்குப் பிறகு அந்த இடத்தை அபகரித்துக்கொள்ளலாம் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்’’ என்றார்.

சீனிவாசன், முகமது இப்ராஹிம், வெங்கடேஷ்
சீனிவாசன், முகமது இப்ராஹிம், வெங்கடேஷ்

கொடைக்கானல் தி.மு.க நகரச் செயலாளர் முகமது இப்ராஹிமிடம் பேசினோம். “இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்துக் கேட்க வேண்டுமென்றால், மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரிடம் கேளுங்கள். தியாகியை நாங்கள் தாக்கவில்லை” என்றார். அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், பழநி எம்.எல்.ஏ-வுமான ஐ.பி.செந்தில்குமாரிடம் பேசினோம். “தியாகியை நான் பார்த்ததுகூடக் கிடையாது. யாரைவிட்டும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சம்பந்தப்பட்ட இடத்துக்குக் கடந்த 30 ஆண்டுகளாக தி.மு.க சார்பில் வரி கட்டிவருகிறோம். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது” என்றார்.

சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகி ஒருவர் தனது உரிமைக்காகப் போராடுவது வேதனைக்குரியது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, தியாகியின் உரிமையை நிலைநாட்டுவதுடன், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.