Published:Updated:

கரைபுரளும் லஞ்சம்... கண்டுகொள்ளப்படாத ‘மாஸ்டர் பிளான்’ சட்டம்!

நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

நீலகிரியை சூழும் நிலச்சரிவு அபாயம்!

கரைபுரளும் லஞ்சம்... கண்டுகொள்ளப்படாத ‘மாஸ்டர் பிளான்’ சட்டம்!

நீலகிரியை சூழும் நிலச்சரிவு அபாயம்!

Published:Updated:
நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

`தென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி’ என வர்ணிக்கப்படும் நீலகிரியில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக 150-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து இறந்தனர். இதனால்தான் நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக நீலகிரியைக் கருதி, அங்கு மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உயிரிழப்புகளும் அபாயங்களும் காலப்போக்கில் மறந்துவிட்டனவோ என்னவோ, நீலகிரியின் கட்டுமான உத்தரவுகள் காற்றில் பறக்கின்றன.

கரைபுரளும் லஞ்சம்... கண்டுகொள்ளப்படாத ‘மாஸ்டர் பிளான்’ சட்டம்!

நீலகிரியின் அழகையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதற்காக, கடந்த 1993-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ‘மாஸ்டர் பிளான்’ சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில், மலைப்பகுதிகளில் ஏழு மீட்டர் உயரத்துக்குமேல் கட்டடங்கள் கட்டக் கூடாது. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் 1,500 சதுர அடிக்குள் கட்டடம் கட்டுவதற்குத்தான் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்க வேண்டும். காப்புக் காடுகளிலிருந்து 150 மீட்டருக்குள் அனுமதி வழங்கக் கூடாது. 30 டிகிரிக்கும் அதிகமான சாய்மானம் கொண்ட பகுதிகளில் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கக் கூடாது. கட்டடங்கள் கட்டுவதற்கு வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் புவியியல் துறைகளில் தடையில்லாச் சான்று பெறவேண்டும். மேற்சொன்ன விதிகள் மீறப்பட்டால் அனுமதி வழங்கக் கூடாது. ஆனால், பேராசை பிடித்த சில அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தக் கட்டுமான விதிகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. விதிகளை மீறி மலைகள் குடையப்பட்டு நீலகிரியில் கட்டுமானங்கள் நடக்கின்றன.

இந்த விதிமீறல்கள் குறித்து குன்னூர் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் மனோகரன், ‘‘நிலச்சரிவு அபாயம் உள்ள நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் பேரிடர் பகுதிகளாகக் கண்டறியப் பட்டுள்ளன. இதில் 60 இடங்கள் மிகவும் பாதிப்பு ஏற்படக்கூடியவை. ஆனால், ஓரிடத்தில்கூட அதற்கான அறிவிப்புப் பலகை இல்லை. கறுப்புப் பணம் வைத்துள்ள பெருமுதலாளிகள் நீலகிரியைத்தான் குறிவைக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு இரண்டு கோடி ரூபாயிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளனர்‌. மலைச்சரிவுப் பகுதியும் மலை உச்சியும்தான் அவர்களின் டார்கெட். அப்படி அதிக விலை கொடுத்து இடம் வாங்குபவர்கள், அங்கு ஆடம்பர மாளிகையைக் கட்டுகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‌குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 1,330-க்கும் அதிகமான கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன. பேரிடர் பகுதிகளான கோடேரி, சேலாஸ், பாரதி நகர், காட்டேரி, காந்திப்பேட்டை, காத்தாடிமட்டம், அதிகரட்டி போன்ற பகுதிகளில் மிக ஆபத்தான செங்குத்தான இடங்களில்கூட ஏராளமான கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்படுகின்றன. நிலம் தேர்வுசெய்வதிலிருந்து அனுமதி பெறுவது வரை அத்தனைக்கும் அதிகாரிகள் மட்டத்தில் லஞ்சம் புரள்கிறது. இதையெல்லாம் தடுக்கவில்லையெனில், பிற்காலத்தில் ஏற்படப்போகும் பேராபத்தை யாராலும் தடுக்க முடியாது’’ என்றார்.

கரைபுரளும் லஞ்சம்... கண்டுகொள்ளப்படாத ‘மாஸ்டர் பிளான்’ சட்டம்!

உதகை நகர விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன், ‘‘கடந்த 20 ஆண்டுகளில் தேயிலையின் விலை தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. அதனால், நூற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்கள் விற்கப்பட்டு சொகுசுவிடுதிகளாக மாற்றப்பட்டுவிட்டன. தேயிலைத் தோட்டங்கள் அமைந்திருந்த சரிவான பகுதிகளில்கூட கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அனுமதியில்லாமல் கிணறு தோண்டுவது, ஆழ்துளைக் கிணறு அமைப்பது என இயற்கைக்கு எதிரான வேலைகளெல்லாம் சத்தமில்லாமல் நடக்கின்றன’’ என்றார்.

‘கூடுகள்’ அமைப்பின் நிறுவனர் சிவதாஸ் கூறுகையில், ‘‘இனிவரும் காலங்களில் ஒரு மாதத்தில் பொழிய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும். நீலகிரி மலைத்தொடர்கள் மிகவும் மென்மையானவை. நூற்றுக்கணக்கான வாகனங்களில் கட்டுமானப் பொருள்கள் நாள்தோறும் கொண்டுவரப்பட்டு, மலைச்சரிவுகளிலும் மலை உச்சிகளிலும் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதனால், மலைப்பகுதியில் பாரம் அதிகரிக்கிறது. சரளைக்கற்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் கனரக இயந்திரங்களைக்கொண்டு குடைவதால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த விதிமீறல்களால் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு அப்பாவி மக்களின் உயிர்களை இழக்க நேரிடும். எனவே, இப்போதே அரசு விழித்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

மனோகரன், ஜனார்த்தனன், சிவதாஸ்
மனோகரன், ஜனார்த்தனன், சிவதாஸ்

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்டபோது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டுவரும் கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறோம். உரிய அனுமதி பெறாமல் எந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றாலும் தடைசெய்யப்படும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சொன்னதைச் செய்தால் மகிழ்ச்சி!