Published:Updated:

‘‘இங்கே வந்து ஜீவிக்க எங்க உயிரைக் கொடுக்கணுமா?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெட்டிமுடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு
பெட்டிமுடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு

நிலச்சரிவால் கலங்கும் தோட்டத் தொழிலாளர்கள்

பிரீமியம் ஸ்டோரி
மண்ணுக்குள் புதைந்துபோன வீடுகளையும் மனிதர்களையும் தேடும் பொக்லைன்கள்... பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் கைகள், தலைகள், கால்கள்... தென்படும் உடல்களின் அடையாளம் கண்டு கதறும் உறவுகள்... எனத் துயரக்கோலத்தில் கிடக்கிறது பெட்டிமுடி !

மூணாறிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெட்டிமுடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு. கடந்த (ஆகஸ்ட்) 6-ம் தேதி இரவு 11:30 மணி. பெய்துகொண்டிருந்த பெருமழை மெள்ள மெள்ள வலுக்கிறது. சிற்றோடை ஒன்று காட்டாற்று வெள்ளமாக மாறி, பெரும் நிலச்சரிவு ஏற்பட, 25 வீடுகள், அவற்றில் களைத்துப்போய் உறங்கிக்கொண்டிருந்த 82 தொழிலாளர்கள் உயிரோடு மண்ணுக்குள் புதையுண்டனர்.

திங்கள் மாலை நிலவரப்படி, 49 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 11 பேர் உயிர் தப்பியுள்ளனர். மீதமுள்ளவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. சம்பவம் நடந்து நான்கு நாள்களுக்கு மேலாகிவிட்டதால், அவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

‘‘பெட்டிமுடி, ராஜமலை, நயமக்காடு, கன்னிமலை, கடலாறு என மூணாறைச் சுத்தி 23 எஸ்டேட்கள் இருக்கு. அதில் வேலை செய்யறவங்க எல்லாரும் வெள்ளைக்காரன் காலத்துல தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள்லருந்து இங்கே வந்தவங்க. இங்கேயே தங்கி, நாலு தலைமுறையா வேலை செஞ்சு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க...’’ என்று பேச ஆரம்பித்தார் பெட்டிமுடி அருகேயுள்ள ராஜமலை எஸ்ட்டேட்டில் வசிக்கும் சாமி.

‘‘அன்னிக்கு ராத்திரி 1:00 மணி இருக்கும். பெட்டிமுடி ஆளு ஒருத்தர்கிட்டேயிருந்து, `மண்ணு சரிஞ்சு வீடுகளை அடிச்சுருச்சு’னு தகவல் வந்துச்சு. உடனே நாங்க இங்கேயிருந்து ஜீப்பை எடுத்துக்கிட்டு வேகமா போனோம். போற பாதையில மண்ணு சரிஞ்சு கிடந்தது. கண்ணு தெரியாத அளவுக்கு மழை அடிச்சுது. எங்களால பெட்டிமுடி போக முடியலை. போராடிப் பார்த்தோம், பிறகு காத்திருந்து காலையில 6 மணிக்கு மூணு மைல் நடந்தே அங்கே போனாம். நாலு லைன் வீடுகள் மண்ணுல புதைஞ்சு கிடந்தது. நாலஞ்சு ஆளுக அடிபட்டிருந்தாங்க. எங்களால முடிஞ்ச மட்டும் துணியால தொட்டி கட்டி அவங்களைத் தூக்கிட்டு வந்து, ராஜமலை ஆஸ்பத்திரியில சேர்த்தோம்.” சொல்லிவிட்டு மௌனமானார்.

நிலச்சரிவுக்குப் பின்...
நிலச்சரிவுக்குப் பின்...

அருகிலிருந்த மணி என்பவர், ‘‘இங்கே எல்லாருக்கும் தேயிலை பறிக்குறதுதான் தொழில். இதுபோக, பக்கத்துல இருக்குற எடமலைக்குடி பழங்குடியினர் குடியிருப்புக்கு ரேஷன் பொருள்களை ஏற்றிச் செல்வோம். இரவிக்குளத்துக்கு வரையாடு பார்க்க சுற்றுலாப் பயணிகளை மூணாறுலருந்து ஜீப்புல அழைச்சுக்கிட்டு வருவோம். இந்த நிலச்சரிவுல ஜீப் ஓட்டுற பெரும்பாலான ஆள்கள் இறந்துட்டாங்க. அவங்களோட 15 ஜீப்புங்களும் மண்ணுல புதைஞ்சுடுச்சு. என்னோட ஃப்ரெண்ட்ஸ் ராஜா, மணி, பன்னீர் எல்லாரும் இறந்துட்டாங்க. சம்பவம் நடந்த அன்னிக்குக் காலையிலதான் அவங்க எல்லாரையும் பார்த்தேன். ஒருநாள் ராத்திரியில இப்படி நடந்துருச்சுங்கிறதை நம்பவே முடியலை’’ என்றார் கண்ணீரோடு.

‘‘என் பெயர் ரெஜிமோன். அதோ அந்த மேட்டுல இருக்குற வீட்டுலதான் இருக்கேன். அன்னிக்கு ராத்திரி சாப்பிட்டுட்டு நான், என் மனைவி, மகள், மகன் எல்லாரும் தூங்கத் தயாரானோம். என் அம்மா வீடு கீழே இருக்கு. அவங்க என் வீட்டுக்கு வந்தாங்க. அவங்க கிளம்பும்போது, ‘நானும் பாட்டி வீட்டுக்குப் போறேன்’னு என் மகன் அவங்களோட கிளம்பிட்டான். ராத்திரி 11:25 மணி இருக்கும். பெரிய நில அதிர்வு ஏற்பட்டுச்சு. கீழேயிருந்து ஒரு ஆள் மேல வந்து, ‘லைன் வீடுகள் மேல மண்ணு விழுந்துடுச்சு’னு சொன்னார். நாங்க லைட் அடிச்சுப் பார்த்தோம். லைன் வீடுகள் இருந்த இடத்துல எதுவும் இல்லை. கொஞ்ச தூரம் தள்ளி சில வீடுகள் இடிஞ்சு கிடந்தது. பெரிய பெரிய பாறைகள் வீடுகளை அடிச்சு, உடைச்சுப் போட்டுருந்துச்சு. என் மகன், என் அம்மா, என் அண்ணன் மகள் மூணு பேரும் இறந்துட்டாங்க. இதோ தோண்டிக்கிட்டு இருக்காங்களே இந்த இடம்தான் அது...” என்றார் கண்களைத் துடைத்துக்கொண்டே.

சற்று நேரத்தில் 14 வயதுடைய ரெஜிமோனின் மகன் சஞ்சய்யின் உடலை மீட்புக்குழுவினர் தூக்கி வந்தனர். அதைப் பார்த்ததும், வெடித்து அழத்தொடங்கினார் ரெஜிமோன்.

நிலச்சரிவுக்கு முன்...
நிலச்சரிவுக்கு முன்...

தேவிக்குளம் எம்.எல்.ஏ-வான ராஜேந்திரன், ‘‘அனைத்துத் துறை அதிகாரிகளும் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மழை குறுக்கிடுவதால், மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. கேரள அரசு இறந்தவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது’’ என்றார்.

‘‘இங்கே வந்து ஜீவிக்க எங்க உயிரைக் கொடுக்கணுமா?”

மத்திய அரசு, ஒரு குடும்பத்துக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் அறிவித்துள்ளது. அதுபோலவே எஸ்டேட் நிர்வாகமும் குடும்பத்துக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

மீட்கப்பட்ட 43 உடல்களில், ஆறு உடல்கள் அருகிலுள்ள ஓடையிலிருந்து மீட்கப்பட்டிருப்பதால், இன்னும் சிலரின் உடல்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். காணாமல்போன தன் உறவைத் தேடிவந்து ஓடைக் கரையோரம் காத்திருந்தார் ஒரு வயதான பெண்மணி. ‘‘எங்கேயோ பிறந்து, இங்கே வந்து ஜீவிக்க எங்க உயிரைக் கொடுக்கணுமா?’’ என்றார் உடைந்த குரலில்! அவரது கேள்விக்கு நம்மிடம் விடை இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘தாவரங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்!’’

‘‘இங்கே வந்து ஜீவிக்க எங்க உயிரைக் கொடுக்கணுமா?”

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்படும் நிலச்சரிவுக்கு என்ன காரணம்? ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். ‘‘மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்த சோலைக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து, தேயிலைத் தோட்டங்கள், சாலைகள், நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்துவதால், மலையின் தன்மை மாறி, இதுபோன்ற நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. மீண்டும் அந்த மலைக்கான தாவரங்களை மீட்டுருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மேற்குத்தொடர்ச்சி மலையை நாம் பாதுகாக்காவிட்டால், தென்னிந்தியாவில் உயிர்களே வாழ முடியாத நிலை உருவாகிவிடும். தொடர்ந்து இதுபோன்ற துயரங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்’’ என்றார்.

‘‘படிக்கிற குழந்தைகளையும் பறிகொடுத்துட்டோம்!’’

பெட்டிமுடி நிலச்சரிவில் உயிரிழந்த தொழிலாளர்களில் 55 பேர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார், பாரதிநகரைச் சேர்ந்தவர்கள். தற்போது அந்தக் கிராமமெங்கும் மரண ஓலம் கேட்கிறது. மூணாறு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து, ஓய்வு பெற்று கயத்தாரில் வசித்துவரும் ஆறுமுகம் தன் இழப்பைப் பகிர்ந்தார்...

‘‘இங்கே வந்து ஜீவிக்க எங்க உயிரைக் கொடுக்கணுமா?”

‘‘எங்க ஊர்லயே என் அப்பா வேலுதான் முதல்முதலா மூணாறுக்கு வேலைக்குப் போனாங்க. நான் பிறந்து வளர்ந்ததும் அங்கேதான். 15 வயசுல தொழிலாளியா வேலைக்குச் சேர்ந்து, கங்காணியா இருந்து ஓய்வு பெற்றேன்.எனக்கு வயசானதால சொந்த ஊருக்கே வந்துட்டேன். என் மகன் பன்னீர்செல்வமும், மருமகள் தவசியம்மாளும் அங்கே தங்கியிருந்து வேலை பார்த்துட்டு வந்தாங்க. புருஷன், பொஞ்சாதி ரெண்டு பேருமே வேலைக்குப் போயிடுறதுனால பேத்திகள் மவுனிகா, கெளசல்யா ரெண்டு பேரையும் என் பொறுப்புலதான் விட்டிருந்தாங்க. அவங்க எங்க ஊருல இருக்குற பள்ளிக்கூடத்துலதான் படிச்சுட்டு இருந்தாங்க. இந்தப் பாழாப்போன கொரோனாவால பள்ளிக்கூடமும் பூட்டிக்கிடக்கு. அதனால, `பிள்ளைங்க பெத்தவங்களோட இருக்கட்டுமே’னு பையன் வந்து கூட்டிட்டுப் போனான். பிள்ளைகளையும் சேர்த்து எங்க குடும்பத்துல நாலு பேரையுமே நிலச்சரிவுக்குக் காவு கொடுத்துட்டோம்.

மூணாறுல வேலை பார்க்குற எல்லாருமே படிப்புக்காகப் பிள்ளைகளைச் சொந்த ஊர்கள்ல விட்டுட்டுப் போவாங்க. ஆனா, இந்த லீவுல அம்மா, அப்பாவைப் பார்க்கப்போன குழந்தைகளும் சேர்ந்து நிலச்சரிவுல சிக்கி இறந்துடுச்சுங்க... மனசு தாங்கலைய்யா...”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு