Published:Updated:

உயில் எழுதுவது ஏன் அவசியம்..? அடிப்படை உண்மைகள்! - விளக்குகிறார் வழக்கறிஞர்

உயில்
பிரீமியம் ஸ்டோரி
உயில்

18 வயது நிரம்பப்பெற்ற எந்தவொரு நபரும் தனது பெயரில் உள்ள சொத்தை உயில் எழுத முடியும்!

உயில் எழுதுவது ஏன் அவசியம்..? அடிப்படை உண்மைகள்! - விளக்குகிறார் வழக்கறிஞர்

18 வயது நிரம்பப்பெற்ற எந்தவொரு நபரும் தனது பெயரில் உள்ள சொத்தை உயில் எழுத முடியும்!

Published:Updated:
உயில்
பிரீமியம் ஸ்டோரி
உயில்
பெரும்பாலான குடும்பங்களில் சொத்துப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு, குடும்பத் தலைவர் / தலைவி உயில் எழுதி வைக்காமல் இறந்துவிடுவது ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உயில் எழுதுவதன் அவசியத்தை வாசகர்களுக்கு விளக்க நாணயம் விகடன் `உயில் எழுதுவது ஏன் அவசியம்?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது...

‘‘குடும்பத்தின் தலைவர் / தலைவி உயிருடன் இருப்பது வரை சொத்து தொடர்பான எந்தவிதப் பிரச்னைகளும் குடும்பங்களில் பெரும்பாலும் ஏற்படுவதில்லை. அவருடைய மறைவுக்குப் பின் சொத்து தொடர்பான பிரச்னைகள் பலவிதங்களில் ஏற்படத் தொடங்கும். இதையடுத்து, அந்தக் குடும்பங்களின் வாழ்க்கை முறை என்பதே நீதிமன்றம், வழக்கு என்றொரு நிம்மதியற்ற பாதைக்குச் சென்றுவிடும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில்தான் உயில் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

will
will

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயில் என்றால் என்ன?

`உயில்’ என்பதற்கு ஆங்கிலத்தில் `Will’ என்று பொருள். `Will’ என்றால் விருப்பம். ஒருவரின் இறப்புக்குப் பின் அவர் சம்பாதித்த சொத்தை சகல உரிமையுடன் யார் அனுபவிக்கலாம் என்ற தனது விருப்பத்தை எழுத்து வடிவில் தெரிவிப்பதே உயில். உயில் எழுதிய உடனே அது நடைமுறைக்கு வருவதில்லை. எழுதிய நபரின் இறப்புக்குப் பின்னரே அந்த உயில் நடைமுறைக்கு வரும்.

ஒரு நபர் சுயமாகச் சம்பாதித்த சொத்துகள், கூட்டுக் குடும்பங்களிலிருந்து பாகப்பிரிவினை மூலமாகக் கிடைத்த சொத்துகள், தானமாகக் கிடைத்த சொத்துகள், தந்தை இறந்த பிறகு, மற்ற வாரிசுகள் இல்லாதபட்சத்தில் நேரடியாக ஒருவருக்கு கிடைத்த சொத்துகள் மற்றும் பதிவு பெற்ற ஆவணங்கள் மூலமாகப் பெறும் எந்தச் சொத்தையும் ஒருவர் உயிலாக எழுத முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறக்காத குழந்தைக்கும் உயில் எழுதலாம்!

18 வயது நிரம்பப்பெற்ற எந்தவொரு நபரும் தனது பெயரில் உள்ள சொத்தை உயில் எழுத முடியும். சில சூழ்நிலைகளில் மட்டும் 21 வயது நிரம்பியவர்தான் (நீதிமன்றத்தின் மூலம் காப்பாளர் நியமிக்கப்பட்டிருக்கும்பட்சத்தில்) உயில் எழுதி வைக்க முடியும். உயில் எழுதுபவர், தான் என்ன எழுதுகிறோம் என்ற சுய நினைவுடன் உணர்ந்துகொள்ளக்கூடிய ஒரு நபராக இருப்பது மிகவும் அவசியம். போதைப் பொருள்களை உட்கொண்டோ, தான் செய்யும் செயலை அறிந்துகொள்ளும் நிலையில் இல்லாத ஒருவர், அந்த நேரத்தில் உயில் எழுதக் கூடாது. ஒருவர் விருப்பப்படக்கூடிய யாருக்கு வேண்டுமானாலும் இந்த உயிலை எழுதி வைக்க முடியும். பிறக்கப்போகும் பேரக் குழந்தைகளுக்குக்கூட உயிலை எழுதி வைக்கலாம். வேறு எந்தப் பத்திரங்களிலும் இதைச் செய்ய முடியாது. அதுதான் உயிலின் சிறப்பு.

உயில்
உயில்

பிறக்கப்போகும் பேரக் குழந்தைக்கு உயில் எழுதி வைத்தபின், அந்தக் குழந்தை பிறக்கவில்லை எனில், அந்த உயிலானது, செயல்படாத உயிலாக இருக்கும். அத்தகைய நிலையில், வாரிசு உரிமைப்படி சொத்து உரிமை வரும்.

கையால் எழுதுவதே ஆவணம்தான்!

உயிலை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் எனச் சட்ட நிபந்தனைகள் எதுவும் இல்லை. கையால்கூட எழுதி வைக்கலாம். அது உரிய ஆவணமாகவே கருதப்படும். நீதிமன்றங்களும் அந்த ஆவணங்களை ஒப்புக்கொள்ளும். ஆனால், அதில் அவசியமாக இரண்டு சாட்சிக் கையொப்பம் இருக்க வேண்டும். உயில் எழுதுபவரின் முன்பாக கையொப்பம் போடுவதும் முக்கியம். உயிலை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால் சாட்சிகளின் எவிடென்ஸ் அங்கு தேவைப்படும். உயில் மூலமாகப் பயன்பெறும் நபர் அந்த உயில் ஆவணத்தில் சாட்சியாகக் கையொப்பம் இடமுடியாது. அப்படிச் செய்யும் பட்சத்தில் அந்த உயில் பயனளிக்காமல் போகும். சாட்சி கையொப்பம் இடுபவர்கள் பொதுவாக, தகுதியான ஒரு நபராக இருப்பது நல்லது. வயதான நபர்களை சாட்சியாக வைப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. உயிலைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகளைப் பொறுத்தவரை மிகவும் எளிதானது. தேவையில்லாமல் வரும் பிரச்னைகளைத் தவிர்க்கவே இந்த எளிதான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பதிவு செய்த உயிலை இரண்டு நகல்கள் எடுத்து ஒன்றை ரெஜிஸ்டர் அலுவலகத்திலும் மற்றொன்றை நீங்களும் வைத்துக்கொள்ளலாம். மாவட்ட பதிவாளரிடம் டெபாசிட் செய்தும் வைக்கலாம். உயிலை நிறைவேற்றுபவரையும் உங்கள் உயிலின் மூலமாகவே நீங்கள் நியமனம் செய்யலாம்.

பிறக்கப்போகும் பேரக் குழந்தைகளுக்குக்கூட உயிலை எழுதி வைக்கலாம். வேறு எந்த பத்திரங்களிலும் இதைச் செய்ய முடியாது. அதுதான் உயிலின் சிறப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயிலை மெய்ப்பித்தல்!

பெருநகரங்களில் எழுதப்படும் உயில்கள் அனைத்தும் அந்த நபர் இறந்த பின் உயர் நீதிமன்றத்தில் மெய்ப்பிக்கப் பட வேண்டும். நிறைவேற்றுபவர் இல்லாதபட்சத்தில், அந்த உயிலை நடைமுறைப்படுத்தும்போது நீதிமன்றத்தில் கொடுத்து அதன் பயனாளரே மெய்ப்பிக்கலாம். நிறைவேற்றுபவர் இருந்தால் அவரே நீதிமன்றத்துக்கு அதை எடுத்துச் செல்லலாம். நீதிமன்றத்தில் உயில் தொடர்பான விளக்கங்களை அளித்து உயிலை மெய்ப்பித்து அதை நடைமுறைக்குக் கொண்டு வர வழிவகை செய்யலாம்.

அழகுராமன்
அழகுராமன்

உயிலை ரத்து செய்ய முடியுமா?

ஒரு நபர் ஒருமுறைதான் உயில் எழுத முடியும் என்று கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். பல உயில்களை எழுதும்போது இறுதியில் எழுதிய உயில் எது என்பதில் குழப்பம் ஏற்படும். அதை நீதிமன்றங்களில் நிரூபிப்பது ஒரு சவாலான விஷயம். எத்தனை உயில் எழுதியிருந்தாலும், இறுதி உயில்தான் நடைமுறைக்கு வரும். எனவே, உயிலை ரத்து செய்வது பெரிய விஷயம் இல்லை. உயில் எழுதிய பின்னர், சொத்தை விற்கக்கூட முடியும். அவர் காலத்தில் அந்தச் சொத்தை எப்படி வேண்டுமானாலும் அனுபவித்துக்கொள்ளலாம். அவர் இறந்த பின் பயனாளிக்கு உயில் வரும்போது சொத்து இல்லையென்றால், அந்த உயில் செல்லாத ஓர் உயிலாகவே கருத்தப்படும். அதாவது, உயிலில் மகனுக்கு சொத்தை எழுதிவிட்டு பின்னர் விற்றுவிடுகிறார். அவர் மறைந்த பின் அவருடைய மகன், சொத்தை வாங்கிய நபரிடம் சென்று சொத்து குறித்து உயிலின் அடிப்படையில் கேட்க முடியாது.

எப்போது, ஏன் உயில் எழுத வேண்டும்?

உயிலின் அவசியத்தையும் எப்போது எழுதலாம் என்பதையும் எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம். உலகமே கொண்டாடிய மைக்கேல் ஜாக்சன் அதிகளவில் வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தவர். 150 வருடங்கள் வாழ வேண்டும் என ஆசைப்பட்டார். தினமும் அவரை கவனித்துக்கொள்ள 12 மருத்துவர்கள் அவருடைய அரண்மனை போன்ற வீட்டிலேயே தங்கியிருந்தனர். பல பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு, அவருக்கு தினசரி உணவு வழங்கப்படும். அவ்வளவு கவனமாக வாழ்ந்தார். ஆனால், 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி இறந்தார். இறப்பைத் தோற்கடிக்க நினைத்த மனிதனை இறப்பு தோற்கடித்தது. இங்கேதான் நாம் அவருடைய புத்திசாலித்தனத்தைக் கவனிக்க வேண்டும். அவர் இறப்பதற்கு சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பே உயில் எழுதி வைத்திருந்தார்.

உயில் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவாக மைக்கேல் ஜாக்சன் குறிப்பிட்டு வைத்துள்ளார். மேலும், அவர் தொடங்கியிருந்த அறக்கட்டளையின் நிர்வாகம், வரி யார் செலுத்த வேண்டும், குழந்தைகளை யார் பாராமரிக்க வேண்டும், அவருடைய தாய் என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் விளக்கமாக எழுதி கையொப்பம் இட்டு வைத்துள்ளார். நிறைவேற்ற வேண்டிய நபர்களையும் அவர் குறிப்பிட்டு வைத்துள்ளார். அவர் இறந்து ஒரு வாரத்திலேயே நீதிமன்றத்துக்கு அவருடைய உயில் மெய்ப்பிக்கப்பட்டது. உயில் என்ற கான்செப்ட்டைச் சரியாகப் புரிந்து, தனக்கு பின்னர் தனது சொத்துகளுக்கும் வேறு யாருக்கும் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு செயல் பட்டுள்ளார் மைக்கேல் ஜாக்சன். வாழ்க்கையின் தத்துவத்தைப் (Rule of Life) புரிந்துகொண்டு செயல்படக்கூடியதுதான் இந்த உயில் எழுதுதல்.

ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்து தனது இறப்புக்குப் பிறகு யார் யார் என்னென்ன சொத்துகளை எப்படி அனுபவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு ஆவணம் ஒன்றை ஏற்படுத்தினால் வருங்காலத்தில் உறவுகளுக்கு இடையே எந்தவிதமான சண்டை சச்சரவுகளும் தேவையில்லாமல் ஏற்படாது. இந்த இடத்தில் தான் அதனுடைய அவசியத்தை நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியதாக உள்ளது’’ என்றவர், உயில் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்தார்.

உயில் தொடர்பாக வழக்கறிஞர் அழகுராமன் பேசிய வீடியோவைப் பார்க்க: https://bit.ly/3nn5ncu

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism