Published:Updated:

`இங்கு சரியான சிகிச்சை இல்லை’ - ஹைதராபாத் பத்திரிகையாளரின் இறுதி குறுஞ்செய்தி #Corona

கொரோனா
கொரோனா

ஹைதராபாத் காந்தி மருத்துவமனையிலிருந்து, `தயவு செய்து என்னை வேறு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள். பலமுறை கேட்டும் இங்கு யாரும் என்னை சரியாக கவனித்து சிகிச்சை அளிக்கவில்லை" என கொரோனாவோடு போராடி உயிரிழந்த பத்திரிகையாளர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் 33 வயதான பத்திரிகையாளர், அங்கிருக்கும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இந்த ஜூன் மாதம் 4-ம் தேதி கொரோனா நோய்த்தொற்று பரிசோதனையின்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 நாள்கள் ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பத்திரிகையாளர், கடந்த ஜூன் 7-ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார். உயிரிழந்த பத்திரிகையாளர் தன் சகோதரனுக்கு ஜூன் 6-ம் தேதி மாலை 3:46 மணியளவில் அனுப்பிய குறுஞ்செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ``தயவுசெய்து என்னை வேறு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள். பலமுறை கேட்டும் இங்கு ஐ.சி.யூவில் யாரும் என்னை சரியாக கவனித்து சிகிச்சை அளிக்கவில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

குறுஞ்செய்தி அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் அவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைமுறை சரியில்லை என பத்திரிகையாளரின் சகோதரர் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலியில், "நாங்கள் இருவரும் ஜூன் 3-ம் தேதி அறிகுறி தென்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தோம். நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு நாங்கள் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.

மருத்துவமனையில் போதிய படுக்கை வசதியில்லை என்றனர். பின்னர் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். காந்தி மருத்துவமனயில் நோயாளிகளுக்கு யாரும் சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை. சிகிச்சையும் பெரிதாக அளிக்கப்படவில்லை. அன்று இரவே என் சகோதரருக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. மருத்துவமனையில் அப்போது துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர். மருத்துவர்கள் நாளை மாலைதான் வருவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த அந்த நான்கு நாள்களும் என் சகோதரர் தனது சக பத்திரிகை நண்பர்களுக்கு அந்த மருத்துவமனையின் சிகிச்சை முறை சரியில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே இருந்துள்ளார். அவரின் சக பத்திரிகை நண்பர்கள் தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டனர். தெலங்கானா அமைச்சர், எட்டெலா ராஜேந்தர், காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் (Superindent) டாக்டர்.ராஜா ராவைத் தொடர்புகொண்டு சிகிச்சை பற்றி விசாரித்தார். அதன் பின்னர் கூட அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை. அவருக்கு நோய் எதிர்ப்பு உணவுகளையும், போதிய மருத்துவ வசதிகளையும் அளிக்கவில்லை" என்கிறார்

கொரோனா தொற்றுப் பரவல்
கொரோனா தொற்றுப் பரவல்

இச்செய்தியை ஹைதராபாத் காந்தி மருத்துவமனை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. மேலும், தெலங்கானா காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர். ராஜாராம், ``ஏற்கெனவே நீண்ட நாள்களாக அவர் நரம்புத்தசை நோயான மையஸ்தீனியா க்ரேவிசால் (Myasthenia Gravis) அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பத்திரிகையாளருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி அவரின் மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு