Published:Updated:

ஒவ்வொரு ராத்திரியும் எனக்கு நரகம்தான்!

லட்சுமி பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி பாட்டி

- மூன்றடி கழிவறைக்குள் வாழ்க்கை நடத்தும் லட்சுமி பாட்டியின் கண்ணீர்க் கதை!

ஒவ்வொரு ராத்திரியும் எனக்கு நரகம்தான்!

- மூன்றடி கழிவறைக்குள் வாழ்க்கை நடத்தும் லட்சுமி பாட்டியின் கண்ணீர்க் கதை!

Published:Updated:
லட்சுமி பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
லட்சுமி பாட்டி

“நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகிலிருக்கிறது அவ்வூர் என்கிற கிராமம். அங்கு யாருடைய ஆதரவுமின்றி மிக மோசமான நிலையில், மூன்றடிக் கழிவறைக்குள் வசித்துவருகிறார் ஒரு பாட்டி” என்று வாசகர் ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். கீழ் கோத்தகிரிக்குக் கிளம்பினோம். அங்கு காத்திருந்த வாசகர், நம்மை அந்தப் பாட்டியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

கீழ் கோத்தகிரியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிருக்கும், ஒரு சிறிய மேட்டில் அமைந்திருக்கும் ‘அவ்வூர்’ படுகர் ஹட்டி அருகிலிருக்கிறது தமிழர் குடியிருப்பு. சுமார் 20 வீடுகள் மட்டுமேகொண்ட சின்ன கிராமத்தின் எல்லையிலிருக்கும் தேயிலைத் தோட்டத்தை அடைந்தோம். கருங்கற்களுக்கு இடையில், மண், சேறு குழைத்துக் கட்டப்பட்ட பழைய வீடு ஒன்று இடிந்த நிலையில் இருக்க... மீதமிருக்கும் சுவர்களும் அடுத்த மழைக்குத் தாங்காது என்பது பார்த்ததுமே புரிந்தது.

அந்த வீட்டைக் காண்பித்து, “இதுதான் அந்தப் பாட்டி வாழ்ந்த வீடு. போன வருஷம் பேஞ்ச மழையில இடிஞ்சு விழுந்துடுச்சு. நல்லவேளையா பாட்டி தப்பிச்சுட்டாங்க‌. இப்போ, இதோ இந்த டாய்லெட்லதான் சமைச்சு, சாப்பிட்டு இதுக்குள்ளயே வாழ்க்கை நடத்துறாங்க” எனச் சிறிய கழிவறை ஒன்றைக் காண்பித்தார். அதிர்ச்சியில் உறைந்துபோனோம்!

ஹாலோபிளாக் கற்களில், சுமார் 7 அடி உயரத்தில் 3 அடி நீள அகலத்தில், அவசரகதியில் கட்டிமுடிக்கப்பட்டிருந்த அந்தக் கழிவறைச் சுவரில், பூச்சுவேலைகள்கூட செய்யப்படவில்லை. துருப்பிடித்து தரையிலிருந்து பாதி சிதைந்துபோன தகரக் கதவுக்கு அட்டையால் ஒட்டுப் போடப்பட்டிருந்தது. ‘பாட்டி, இலவச வேட்டி சேலை வாங்க ரேஷன் கடைக்குச் சென்றிருப்பதாக’ கூறினர் அக்கம் பக்கத்தினர்.

ஒவ்வொரு ராத்திரியும் எனக்கு நரகம்தான்!

சிறிது நேரம் காத்திருந்தோம். ஒரு பையைத் தலையில் சுமந்தபடி, உச்சி வெயிலில் களைப்புடன் வந்துசேர்ந்தார் பாட்டி. நம்மைப் பார்த்ததும், விசாரித்துவிட்டு அருகில் கிடந்த கல் ஒன்றில் சோர்வாக அமர்ந்து பேசத் தொடங்கினார், “என்னோட பேர் லட்சுமி. 70 வயசு நடக்குது. வீட்டுக்காரர் அந்தோணி, 15 வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டார். கல்யாணம் பண்ணி இந்த வீட்டுலதான் எங்க வாழ்க்கையைத் தொடங்குனோம். மொத்தம் அஞ்சு புள்ளைகளைப் பெத்தேன். அதுல சின்னதுலேயே மூணு பிள்ளைக தவறிடுச்சுங்க. இப்போ ரெண்டு பேர்தான் இருக்காங்க. ஒரு பையன், ஒரு பொண்ணு. தோட்ட வேலை செஞ்சுதான் புள்ளைங்களைப் படிக்கவெச்சேன். மேல படிக்கவெக்க வருமானம் இல்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் வேலைக்குப் போயிட்டாங்க.

போன வருஷம் ஒருநாள், கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தப்போ, மழையில வீடு இடிஞ்சு கெடந்தது. வாயிலயும் வயித்துலயும் அடிச்சுக்கிட்டு அழுது உருண்டேன். வீட்டுக்குள்ள இருந்த ட்ரங்கு பெட்டிக்கு மட்டும் ஒண்ணும் ஆகலை. அதுக்குள்ளதான் வீட்டுக்காரர் போட்டோ, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எல்லாமே இருந்துச்சு. எடுக்க முடிஞ்ச பொருளை மட்டும் எடுத்து இந்த பாத்ரூம்ல வெச்சேன். பொழுதுபோனதும் எங்க படுக்குறதுன்னு தெரியலை. அக்கம் பக்கத்துல ஆதரவு தர்றேன்னாங்க. எத்தனை நாளைக்கு அடுத்தவுங்க வீட்ல போய் தங்குறதுன்னு யோசிச்சு, பேசாம இந்த பாத்ரூம்லயே படுத்துக்கலாம்னு கை கால முடக்கிச் சுருண்டுக்கிட்டேன். அன்னைக்கு நைட் பூராவும் தூக்கமே வரலை. சொல்ல முடியாத அளவுக்கு மன வேதனையா இருந்துச்சு.

விடிஞ்சதும், மலக்கோப்பைக்குள்ள பழைய சேலையைத் திணிச்சு மூடுனேன். உள்ளேயே சின்னதா ஒரு கல் அடுப்பு மூட்டி சமைச்சுச் சாப்பிட்டேன். வயசாச்சு, ஓடியாடி இனி வேலை செய்ய முடியாது. மாசம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் வருது. அதுல உப்பு, புளி, மிளகாய் வாங்கி சமாளிச்சுக்கிட்டு, இப்படியேதான் ஒரு வருசமா காலந்தள்ளுறேன். ஒரு ஆள் நல்லா உட்காரக்கூட முடியாத இடம்தான். ஆனா, இதுலதான் என் வாழ்க்கை ஓடுது” என்றபடியே மெள்ள எழுந்து, கதவைத் திறந்து காண்பித்தார்.

ஒவ்வொரு ராத்திரியும் எனக்கு நரகம்தான்!

சுவர் முழுக்க புகை படிந்திருக்கிறது. மூச்சுமுட்டும் அந்தச் சிறிய கழிவறைக்குள் ஒரு தகரப் பெட்டி, கொஞ்சம் துணிமணிகள், மூடி வைக்கப்பட்டிருக்கும் மலக்கோப்பையின் மேல் சில பிளாஸ்டிக் டப்பாக்களில் பருப்பு, சர்க்கரை போன்ற மளிகைப் பொருள்கள்... ஒரு மண்ணெண்ணெய் விளக்கும், அடுப்பும் இருக்கின்றன. ஒருவர் அமரக்கூட முடியாத இடத்தைக் காண்பித்து, “இங்கதான் படுத்துக்குவேன். கொஞ்ச நேரத்துல கால் வலிக்க ஆரம்பிக்கும். கதவு மேல ரெண்டு காலையும் தூக்கிக் கொஞ்ச நேரம்வெப்பேன். மறுபடியும் கால் வலிக்கும். கீழ எடுத்து வெச்சுக்குவேன். வலி அதிகமானா எழுந்து உடம்பைக் குறுக்கி கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்குவேன். கொஞ்ச நேரம் நிம்மதியா கண் மூட முடியாது. பகல்ல ஒண்ணும் தெரியாது. வெளிய உக்காந்துக்குவேன். ராத்திரிதான் நரக வேதனையா இருக்கும். ராத்திரி வெளிய படுக்க முடியாது. மழை, பனிக்குத் தாக்குப்பிடிக்க முடியாது. சிறுத்தை, கரடி, காட்டுமாடு எல்லாமே வரும். எனக்கு ஒண்டிக்கிடக்க ஒரு வீடு கேட்டு... போகாத கவுர்மென்ட் ஆபீஸே இல்லை. பார்க்காத அதிகாரிங்க இல்லை... எதுவுமே நடக்கல. எனக்குக் காசு பணமெல்லாம் வேணாம். இந்தப் பகுதியில ஒரு வீடு மட்டும் அரசாங்கம் கட்டிக் கொடுத்தா போதும். கண்ண மூடுற வரைக்கும் காலத்தைத் தள்ளிடுவேன்” என்றார் பாட்டி, குரல் தழுதழுத்தது.

அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், “இந்தப் பாட்டி இருக்குற இடமும் சொந்த இடம் கெடையாது. அவங்க தோட்ட முதலாளி தங்கிக்கச் சொல்லிக் குடுத்துருக்கார். எங்க வீட்டுல வந்து நைட்டு தங்கச் சொல்லி நாங்களும் எவ்வளவோ சொல்லிட்டோம். கேட்டபாடில்லை” என்றார் வேதனையுடன்.

லட்சுமி பாட்டியின் நரக வேதனை குறித்து, நீலகிரி மாவட்டப் பொறுப்பு ஆட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினியின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். உடனடியாகப் பாட்டியின் வசிப்பிடத்துக்கு அரசுப் பணியாளர்களையும், ஆதரவற்றோரை அரவணைக்கும் தனியார் தொண்டு நிறுவனத்தாரையும் அனுப்பிவைத்தார். பாட்டிக்கு ஆறுதல் சொல்லி, ஊட்டியிலிருக்கும் காப்பகத்துக்கு காரில் அழைத்துச் சென்று கவனித்துவருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய கீர்த்தி பிரியதர்ஷினி, “காப்பகத்துக்கு முதலில் வர மறுத்தார். அவரைச் சமாதானம் செய்து அழைத்து வந்தோம். ‘அரசின் பசுமை வீடு வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். அரசு மூலம் அவரது கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுக்கப்படும். தேர்தல் முடிந்ததும், அவருக்கு உரிய வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

‘இந்த ஏரியாவிலேயே ஒரு இடம் பார்த்து, சிறிய வீடு ஒன்று கட்டிக்கொடுத்தால் போதும். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்கிறார்கள் அவ்வூர் கிராம மக்கள். லட்சுமி பாட்டியின் விருப்பமும் அதுவே. அதையே நமது விருப்பமாகவும் சொன்னோம். விரைவில் பாட்டிக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism