லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஆன்லைன் வகுப்புகள் பற்றி அறிந்துகொள்வோம்!

ஆன்லைன் வகுப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் வகுப்புகள்

அம்மா அப்பா கவனத்துக்கு...

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் குழந்தைகளை வெளியில் அனுப்ப இயலாத நிலை உருவாகியுள்ளது.

பள்ளிகளும் இப்போது திறக்கும் சூழல் இல்லாததால், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே பாடங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதோடு, இப்போதைய அசாதாரண சூழலை சமாளிக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு வீட்டிலேயே பாடங்கள் கற்பிக்கும் பெற்றோர்கள் செய்ய வேண்டியவையும், தவிர்க்க வேண்டியவற்றையும், ஆன்லைன் வகுப்புகள் அவசியமா என்பது பற்றியும் பற்றி நிபுணர்களிடம் பேசினோம்.

ஆன்லைன் வகுப்புகள் பற்றி 
அறிந்துகொள்வோம்!

எவற்றையெல்லாம் கற்றுக்கொடுக்கலாம்

கேட்ஜெட்கள் இல்லாமல் குழந்தைகளுக்கு வீட்டில் கற்றுக்கொடுக்க வேண்டியவை பற்றி விளக்குகிறார் திருப்பூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் கல்பனா.

ஆன்லைன் வகுப்புகள் பற்றி 
அறிந்துகொள்வோம்!

``குழந்தைகள் விடுமுறையில் இருக்கிறார்கள் என்பதற்காக இப்போதே அவர்களுக்கு அடுத்த வகுப்புக்கான புத்தகத்தை அறிமுகப்படுத்தாதீர்கள். அதற்குப் பதில் உங்கள் குழந்தை எந்தப் பாடத்தை கற்கச் சிரமப்படுகிறார்களோ, அதன் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கலாம். உதாரணமாக, கணக்குப் பாடம் என்றால் எளிய முறையில் வாய்ப்பாடுகளைக் கற்றுக்கொடுக்கலாம். மொழிப்பாடங்கள் என்றால் அடிப்படை இலக்கணங்களை. அறிவியல் எனில் செய்முறைப் பயிற்சி வாயிலாக சிலவற்றை கற்றுக்கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு அந்தந்தப் பாடத்தின் மீது ஈர்ப்புகூட ஏற்படும்.

குழந்தைகள் பாடப் புத்தகங்களின் வாயிலாகத்தான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கிடையாது. புத்தகங்கள் தாண்டி கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய செயல்பாடுகள் இருக்கிறது. பெரியவர்களை மதித்தல், சேமிப்பு, இயற்கை, வீட்டு வேலைகளுக்குப் பழக்கப்படுத்துதல் என வாழ்வியல் சார்ந்தவற்றை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம்.

இப்போது குழந்தைகள் விடுமுறையில் இருப்பதால் அவர்கள் விரும்பும் கூடுதல் திறனை அவர்களுக்குக் கற்றுத்தரும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கலாம்.

குழந்தைகளின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும் வகையில் கிராஃப்ட், வித்தியாசமான ஓவியங்கள் வரைதல், கதைகள் சொல்லுதல், வாசிக்கும் பழக்கம் போன்றவற்றைக் கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு ஏற்படுத்தலாம்.

கற்றலுக்கு வயதில்லை என்றாலும், குழந்தைகள் அந்தந்த வயதில் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டியவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். உதாரணமாக மூன்று வயதுக் குழந்தை என்றால் நிறங்கள், நான்கு வயதுக் குழந்தை என்றால் ஆரம்ப எழுத்துகள்... இப்படி வயதுக்கு அடிப்படையானவற்றை விளையாட்டாக அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கலாம்” என்கிற ஆசிரியர் கல்பனாவைத் தொடர்ந்து, கல்வியாளர் டாக்டர் வசந்தி தேவியிடம் பேசினோம்.

ஆன்லைன் வகுப்புகள் பற்றி 
அறிந்துகொள்வோம்!

ஆன்லைன் வகுப்புகள் அவசியமா?

``ஆன்லைன் வகுப்புகள் உண்மையில் குழந்தைகளுக்கு பயனளிக்கக்கூடிய ஒன்று தான். ஆனால், எல்லோருக்கும் ஆன்லைன் வகுப்புகள் சாத்தியம் கிடையாது. எல்லா அரசுப்பள்ளிகளிலும் இதற்கான வசதிகள் இல்லை என்பதே இதில் உள்ள சிக்கல். தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் ஆன்லைன் வகுப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பள்ளிகள் திறக்கத் தாமதமாகும் சூழலில் அடுத்த ஆண்டுக்கான பாடங்களை தனியார் பள்ளிகள் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அரசுப்பள்ளியில் பள்ளிகள் திறந்த பிறகுதான் அத்தனை பாடங்களையும் நடத்த வேண்டும். பத்து மாத பாடத்திட்டத்தை ஏழு மாதங்களில் படித்து தயாராக வேண்டிய சூழல்தான் இருக்கும். இது குழந்தைகளுக்கு மன அழுத்தைத்தைத் தரும். இந்தச் சூழலில் அரசு பாடத்திட்ட முறையை மாற்றி அமைப்பதோ, பாடத்திட்டத்தைக் குறைப்பதோ அவசியமான ஒன்று. அது செயல்படுத்தப்படாத சூழலில் சிரமப்படப்போவது அரசுப்பள்ளி மாணவர்கள் தான். எல்லா அரசுப்பள்ளிகளிலும் உரிய உபகரணங்களைக் கொடுத்து மாணவர்களை வழிநடத்தினால் நிச்சயம் ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்குப் பயனளிக்கும் ஒரு கல்வி முறையாக மாறும். பாடம் சார்ந்த செயல்பாடுகள் இல்லாமல் வசதி வாய்ப்பு இருக்கின்ற பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் கதைகள், பாடல்கள், குழந்தைகளின் கூடுதல் திறன்கள் போன்றவற்றை எந்தவித வற்புறுத்தலும் இல்லாமல் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கலாம்'' என்கிறார் வசந்தி தேவி.

ஆன்லைன் வகுப்பு உளவியல் சார்ந்த சாதக பாதகங்கள்

ஆன்லைன் வகுப்பின் உளவியல் சார்ந்த சாதகங்கள் பாதகங்கள் பற்றி குழந்தைகள் உளவியல் நிபுணர் உமாதேவியிடம் கேட்டோம்.

``ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்ளும்போது கற்றல் மிக விரைவாக நடைபெறும். ஆனால், குழந்தைகளை அதற்கான சூழலுக்குள் கொண்டுவருவது சிரமமான ஒன்று. வீட்டில் இருக்கும்போது குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடவே எண்ணுவார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளின் மனநிலையை மாற்றி புதிதாக ஒன்றைக் கற்கவைப்பது பெற்றோர்களுக்கான சவாலாகவே இருக்கும்.

ஆன்லைன் வகுப்புகள் பற்றி 
அறிந்துகொள்வோம்!

குழந்தைகளிடம் மொபைலே கொடுக்க கூடாது என்று இவ்வளவு நாள் பேசியவர்களே இப்போது ஆன்லைன் வகுப்புகளை ஆதரிக்கிறார்களே என பெற்றோர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். குழந்தைகள் யூடியூபில் வீடியோக்கள் பார்க்கும் அது ஒரு வழிச் செயல்பாடாகவே இருக்கும். குழந்தைகள் கேள்வி கேட்க வாய்ப்புகள் இல்லை. ஆன்லைன் வகுப்புகள் என்றாகும்போது ஆசிரியர்களும் இருப்பார்கள் என்பதால் குழந்தைகள் தங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முடியும். அதனால் இப்போது இருக்கும் சூழலுக்கு ஆன்லைன் வகுப்புகள் போன்றவை சிறப்பான ஒரு தேர்வு முறையே.

கிடைக்கும் சில மணி நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக ஓர் ஆசிரியரால் புத்தகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்துவிட முடியாது. ஒரு கருத்தை பல உதாரணங்கள் சொல்லி விளக்குவதிலும், கற்றல் உபகரணங்கள் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்கும்போது, மாணவர்களுக்கு அதிக அளவு கவனச் சிதறல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இந்தச் சூழலில் குழந்தைகளை வழிநடத்துவது பெற்றோர் கையில்தான் இருக்கிறது. ஆசிரியர்களின் அனுமதியோடு பெற்றோர்களும் ஆன்லைன் வகுப்பில் இணையலாம். அதன் மூலம் ஆசிரியர் சொல்லும் அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொண்டு அவற்றைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு முறைகளில் விளக்கப் பெற்றோர்கள் முயற்சி செய்யலாம்.

அரை மணிநேரம் ஆன்லைன் வகுப்பில் அமரவைத்துவிட்டு ஐந்து மணிநேரம் வீட்டுப்பாடங்கள் எழுதச்சொல்லும் பழக்கம் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது. இது குழந்தைகளின் மனநிலையை நிச்சயம் பாதிக்கும். ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளை என்கேஜ்டு செய்யும் விதமாக அமைவது அவசியம். குழந்தைகளின் கவனிப்புத் திறன் 20 நிமிடங்களுக்குத்தான் இருக்கும் என்பதால் முதல் 20 நிமிடங்களுக்கு ஆசிரியர் கற்பிப்பது போன்றும், அடுத்த

20 நிமிடங்கள் குழந்தைகளிடம் இன்ட்ராக்டீவ் செய்வது போன்றும் இருக்க ஆசிரியர்களுக்குக் கோரிக்கைகள் வைக்கலாம்.''

பெற்றோர்கள் கவனத்துக்கு...

ஆன்லைன் வகுப்பில் குழந்தைகளை அமர வைக்கும் போது பெற்றோர்கள் மனத்தில் கொள்ளவேண்டிய தகவல் களை வழங்குகிறார் ஆன்லைன் மூலம் கூடுதல் திறன்களுக்குப் பயிற்சியளிக்கும் ஶ்ரீநிதி.

``ஆசிரியர் என்ன கற்றுத்தரப் போகிறார் என்பதை முன்பே கேட்டு தெரிந்துகொண்டு, அது பற்றிய தகவல்களைக் கதைகளாகவோ, அது சம்பந்தப்பட்ட பொருள்கள் மூலமாகவோ நேரடியாக விளக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு அந்தக் கருத்து இன்னும் ஆழமாகப் பதிய வாய்ப்பிருக்கிறது. வீட்டுப்பாடங்களைக் குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்து அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக்கொடுப்பது அவசியம்.

ஆன்லைன் வகுப்புகள் பற்றி 
அறிந்துகொள்வோம்!

ஆன்லைன் வாயிலாக கற்றல் நடைபெற்றாலும் குழந்தைகளின் வயதுக்கு மீறிய இணையதளங்களைத் தடை செய்த பின்னர்தான் லேப்டாப்பையோ, மொபைலையோ குழந்தைகளிடம் கொடுக்க வேண்டும். கூடுதல் திறன்களுக்காகக் குழந்தை களை ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்கும் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பயிற்றுநரின் கல்வித்தகுதி, அனுபவம் போன்றவற்றை கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்.

சில குழந்தைகள் சிலவற்றைக் கற்க முதலில் ஆர்வம்காட்டுவார்கள். ஆனால், கற்றுக்கொள்ள ஆரம்பித்த சில தினங்களில் அதன் மீதான ஆர்வம் குறைந்து வகுப்புகளுக்குச் செல்ல மறுப்பார்கள். இதனால் கட்டணம் தான் வீணாகும். இதைத் தடுக்க முதல் மூன்று வகுப்புகளை சோதனை வகுப்புகளாகக் கேட்டுப்பார்க்கலாம். இதன்மூலம் குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதுடன், அந்தப் பயிற்சி வகுப்பு உண்மையில் குழந்தைகளின் வயதுக்கு ஏற்றதா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.''