Published:Updated:

கொரோனா முதல் அலை... கற்றுக்கொண்டதும் தவறியதும்!

கொரோனா பரிசோதனை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பரிசோதனை

வரலாறு நெடுகிலும் வந்துள்ள கொள்ளை நோய்கள்போல இதுவும் பல அடுக்குகளாகப் பரவும் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறோம்.

கொரோனா முதல் அலை... கற்றுக்கொண்டதும் தவறியதும்!

வரலாறு நெடுகிலும் வந்துள்ள கொள்ளை நோய்கள்போல இதுவும் பல அடுக்குகளாகப் பரவும் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறோம்.

Published:Updated:
கொரோனா பரிசோதனை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பரிசோதனை

‘‘கொரோனா தொற்றின் முதல் அலையின் தாக்கம் குறைவதற்கு முன்பே ‘உறுதியாக இரண்டாவது அலை வரும். அது, முதல் அலையைவிட மிக வேகமாகப் பரவுவதோடு, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என உலக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. அதை நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாததால்தான் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது’’ என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்!

கொரோனா முதல் அலை... கற்றுக்கொண்டதும் தவறியதும்!

கொரோனா முதல் அலையில் பல இன்னல்களைச் சந்தித்த பிறகும், இரண்டாவது அலையை எதிர்கொள்ளத் தடுமாறிவருகின்றன மத்திய, மாநில அரசுகள். முதல் அலையிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்னென்ன... கற்றுக்கொள்ளத் தவறியது என்னென்ன? சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரனிடம் பேசினோம்...

‘‘முதல் அலையின்போது கொரோனா தொற்று பரவும்விதம் மற்றும் அதை எதிர்கொள்ளும்விதம் குறித்து குழப்பங்கள் இருந்தன. தற்போது நமக்குத் தெளிவான பார்வை கிடைத்திருக்கிறது. வரலாறு நெடுகிலும் வந்துள்ள கொள்ளை நோய்கள்போல இதுவும் பல அடுக்குகளாகப் பரவும் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். இது இரண்டாவது அலையோடு நின்று விடாது. அதனால்தான், பல நாடுகளும் அதற்குத் தயாராக இருந்தன. நம் நாட்டில் முதல் அலையும், அதைத் தொடர்ந்து இரண்டாவது அலையும், பிற நாடுகளைவிட தாமதமாகவே வந்தன. என்றாலும், முறையான வழிகாட்டுதல்கள் இல்லாதது அல்லது அரசின் அலட்சியம் காரணமாக அதைக் கையாளுவதில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துவருகிறோம்.

கொரோனா முதல் அலை... கற்றுக்கொண்டதும் தவறியதும்!
கொரோனா முதல் அலை... கற்றுக்கொண்டதும் தவறியதும்!

முதல் அலையின்போது பல்வேறு நாடுகளைப்போலவே நாமும் பரீட்சார்த்த முறையில் கொரோனா பரவலுக்கு எதிராகப் பல மருந்துகளைப் பயன்படுத்தி, ஆக்ஸிஜன், ரத்தக்கட்டுகளைத் தடுக்கும் மருந்துகள், ரெம்டெசிவிர், பிளாஸ்மா போன்றவைதான் பலனளிக்கின்றன என்பதைத் தற்போது கண்டறிந்துள்ளோம்.

நோய்ப்பரவலின் சங்கிலித்தொடரை அறுக்க, பொதுமுடக்கம் பயன்பட்டிருந்தாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது மிகப்பெரிய பொருளாதாரத் தீமையை விளைவித்திருக்கிறது. அதனால், நினைத்த நேரத்திலெல்லாம் பொதுமுடக்கம் போட முடியாது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். இந்தியாவில் இரண்டு அலைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தாலும், அதை முறையாகக் கையாளாமல், இப்போது பகுதி பகுதியாக பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

கொரோனா முதல் அலை... கற்றுக்கொண்டதும் தவறியதும்!

கொரோனாவைத் தடுப்பதற்கு தற்போது நமக்கிருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசிதான். மற்ற கொள்ளை நோய்களைவிட, இதற்கான தடுப்பூசியை நாம் விரைவாகக் கண்டுபிடித்து விட்டோம். ஆனால், அவை போதுமான அளவு உற்பத்திசெய்யப்பட்டு, பொதுமக்களுக்குக் கிடைக்கும்படிச் செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. எனவே, இருக்கும் தடுப்பூசிகளைப் போர்க்கால அடிப்படையில் தயாரித்து, மக்களுக்குக் கொடுத்தாக வேண்டும். இந்நேரத்துக்கெல்லாம் 60 முதல் 70 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் மூன்றாவது அலை ஏற்படுவதிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். மருந்து தயாரிக்கும் வசதியோடு இருக்கும் பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்களுக்கான நிதியை ஒதுக்கி தடுப்பூசித் தயாரிப்பை துரிதப்படுத்த அரசு தவறிவிட்டதால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் உயிர்காக்கும் மருந்துகளான ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் போன்றவற்றின் உற்பத்தியையும் துரிதப்படுத்தியிருக்க வேண்டும். நம்முடைய தேவையை உணர்ந்து அதிக அளவில் உற்பத்தி செய்யாமல்விட்டதும், உற்பத்தி செய்த மருந்துகளையும் ஏப்ரல் முதல் வாரம் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததும், அரசு செய்த மிகப்பெரிய தவறு.

உலக அளவில் பொது சுகாதாரத்துறை பலமாக இருந்த நாடுகளில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நன்றாக எதிர்கொள்ளப் பட்டிருக்கிறது. அங்கெல்லாம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல், அதற்குத் தேவையான மனிதவளத்தை அதிகப்படுத்தாமல் அரசு அலட்சியமாக இருந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் அரசு பயன்படுத்தத் தவறிவிட்டது.

சாந்தி ரவீந்திரன்
சாந்தி ரவீந்திரன்

மத்திய, மாநில அரசுகள் ஒற்றுமையாக இருந்துதான் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் முதல் அலையிலிருந்து நாம் முக்கியமாகக் கற்றுக்கொண்டிருக்க வேண்டிய பாடம். ஆனால், மத்திய அரசும், மாநில அரசுகளும் பரஸ்பரம் குறை கூறிக்கொண்டிருப்பது மிகப்பெரிய அவலம். அதுமட்டுமல்ல... கும்பமேளா, தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் போன்ற அதிவேகமாக கொரோனா பரவலுக்கு ஏற்ற சூழலையும் மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்கள். ஆரம்பத்திலிருந்து அறிவியல்பூர்வமாக மக்களை வழிநடத்தாமல், பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களே மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் பரவவிட்டது, நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கையில் தற்போது மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் குறித்து அரசு வெளியிடும் தரவுகளிலும் மிகப்பெரிய குளறுபடிகள் இருக்கின்றன. இதனால், மக்கள் இன்னும் கொரோனாவின் தீவிரத்தை உணராமல் இருக்கிறார்கள்.

முதல் அலையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளத் தவறியவையாக இப்படி ஓராயிரம் விஷயங்களைச் சொல்லலாம். மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்று பரவல் தொடர்பாகத் தொலைநோக்குப் பார்வையும், திட்டமிடலும் இல்லாமல் செயல்பட்டன... செயல்பட்டுவருகின்றன’’ என்றார் விரிவாக.