Published:Updated:

கொரோனா நேரம்... சிரமப்படும் கர்ப்பிணிகளுக்கு கைகொடுக்கும் ஆகாஷ்!

கொரோனா நேரத்தில் செக் அப் மற்றும் பிரசவத்துக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் கர்ப்பிணிகளைத் தனது சொந்த வாகனத்தில் ஏற்றிச்சென்று அழைத்து வருகிறார் ஆகாஷ்.

``நாங்க உயிரைப் பணயம் வெச்சுதான் உதவி செய்ய களத்துக்கு வந்தோம். ஒவ்வொரு நிமிஷமும் பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால், மருத்துவமனையில் சேர்த்தவங்களுக்கு ஆரோக்கியமா குழந்தை பொறந்துருக்குங்கிற செய்தியைக் கேட்கும்போது மனசு உற்சாகமாயிடும்."

- உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த லியோ ஆகாஷ். மனிதர்களை மனிதர்கள் நெருங்க அஞ்சும் கொரோனா சூழலில், தமிழ்நாடு முழுவதும் 183 கர்ப்பிணிகளை பிரசவத்திற்காகவும், சிகிச்சைக்காகவும் தங்களின் சொந்த வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஆகாஷ்.

கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள்

சென்னையில் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வரும் ஆகாஷ், கடந்த நான்காண்டுகளாக ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். ஆதரவற்ற, ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்வதோடு, சத்தான உணவுகள் வாங்கிக் கொடுப்பதையும் பணியாகச் செய்து வருகிறார்.

இது குறித்து லியோ ஆகாஷிடம் பேசினோம்.

``நான் சென்னைக்காரன்தான். தெருவோரத்துல இருக்கிற ஆதரவற்ற மக்களின் பசியைப் போக்க நண்பர்களுடன் சேர்ந்து எங்களால் முடிஞ்ச உதவிகளை செஞ்சுட்டு இருந்தேன். சமூக ஊடகங்கள் மூலம் நாங்க செய்யிற வேலைகளைப் பாத்துட்டு நிறைய பேர் `நாங்களும் உதவிக்கு வாரோம்’ன்னு வந்தாங்க.

உதவி தேவைப்படுவோரையும், உதவுபவர்களையும் ஒன்னா இணைச்சு அதன் மூலம் நிறைய பேருடைய வாழ்க்கையில் என்னால் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்ய முடிஞ்சுது. மூணு வருஷத்துக்கு முன்னாடி, ஆந்திராவிலிருந்து ப்ளெஸ்ஸிங்கிற 12 வயதுக் குழந்தையின் அம்மா, அப்பா என்கிட்ட உதவிக் கேட்டு வந்தாங்க.

Corona-வில் இருந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பது எப்படி? | #CoronaAlert

குழந்தை மெலிஞ்சு முடியெல்லாம் கொட்டி, உடல் வெளுத்து நெஞ்சைப் பதறவைக்கிற கோலத்தில் இருந்தா. `பாப்பாக்கு என்னாச்சு’ன்னு கேட்டதும், `கேன்சர்'னு சொல்லி அழுதாங்க. அந்த நிமிஷம் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டிருச்சு. ப்ளெஸ்ஸியை எப்படியாவது காப்பாத்தணும்னு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனோம். ஆனா கேன்சர் பரவல் தீவிரமா இருந்ததால, `குழந்தையைக் காப்பாத்த வாய்ப்பு குறைவு'னு டாக்டர் சொல்லிட்டாங்க. ரெண்டு நாள் என்னால் எதைப் பத்தியும் யோசிக்க முடியல. திரும்பும் பக்கமெல்லாம் அந்தக் குழந்தை நிக்கிற மாதிரி ஒரு உணர்வு. அதிலிருந்து மீள அந்தக் குழந்தை பூமியில் வாழப்போற கொஞ்சநாள் சந்தோஷமா வெச்சுக்கணும்னு நினைச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளுடைய உலகம் ரொம்ப சின்னதுங்க. அதிகபட்சமாக அந்தக் குழந்தைக்கு இருந்த ஆசை, `ஏரோப்பிளேன்ல போகணும்’, `பிஃங்க் கலர் டிரஸ் போடணும்’, `சாக்லெட், ஐஸ்கிரீம், சாப்பிடணும்’கிறது தான். எப்பவுமே ரொம்ப களைப்பா இருப்பா. ஆனா அவளோட முகத்தில் சின்ன புன்னகை இருந்துட்டே இருக்கும். ஒவ்வொரு நாள் விடியும்போதும் அந்தக் குழந்தையுடைய இன்றைய பொழுது நல்லபடியா கடக்கணும்னு வேண்டிப்பேன். ஆனா நாங்க யாருமே எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் இந்த உலகத்தை விட்டுப் போயிட்டா. குழந்தைகள் வலியில் துடிதுடிச்சு சாகிறதெல்லாம் ரொம்பக் கொடுமை" - ஆகாஷின் குரல் உடைக்கிறது.

``ப்ளெஸ்ஸி மரணத்திலிருந்து இப்போ கூட என்னால் மீள முடியல. அவளோட மரணம்தான் அடுத்தகட்டம் பத்தி சிந்திக்க வெச்சுது.

இந்தியாவில் அதிகமான குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்குறதுக்கு கர்ப்ப காலத்தில் தாய் சரிவிகித உணவு சாப்பிடாததும் ஒரு காரணம்'னு மருத்துவர்கள் சொல்றாங்க. அதனால் வசதி வாய்ப்பற்ற பெண்களுக்குச் சத்தான உணவு, தடுப்பூசி, மருந்து, மாத்திரை வாங்க உதவணும்னு முடிவு எடுத்தேன். படிச்சவங்க, நம் வீடுகளில் இருக்க கர்ப்பிணிகளை பார்த்துப் பார்த்து கவனிக்கிறோம். நிறைய பேர் அப்படியில்ல. அவர்களைப் பொறுத்தவரை கர்ப்பிணியுடைய ஆரோக்கியம்ங்கிறது மூணு நேரமும் பழைய சோறாவது சாப்பிடணுங்கிறதுதான். சத்தான உணவு சாப்பிடுங்கனு சொன்னா, `அந்தக் காலத்தில் ஆப்பிளும், பழமுமா சாப்பிட்டாங்க'னு கேட்பாங்க. ஆனா நம்முடைய பழக்க வழக்கங்களும், உணவும் முன்பு மாதிரி இல்லைங்கிறதைப் புரிய வைக்குறது சிரமம். இப்போ அந்த வேலையைத்தான் நாங்க செஞ்சுக்கிட்டிருக்கோம்.

முதல்கட்டமா, ஆதரவற்ற, ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு உதவலாம்னு முடிவெடுத்தோம். காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னைன்னு 26 கர்ப்பிணிப் பெண்களுக்கு அவங்களோட கர்ப்ப காலத்தின் முதல் மாதம் தொடங்கி குழந்தை பிறக்கும் வரை மருத்துவ செலவுக்கும், உணவுக்கும், நானும் என் நண்பர்களும் பொறுப்பெடுத்துக்கிட்டோம். தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு கொடுத்து, நாங்களே அழைச்சுட்டு போயிருக்கோம். நட்ஸ், பழங்கள், காய்கறிகள்ன்னு ஆரோக்கியமான உணவுகளை நாங்களே அவங்க வீட்டுக்குப்போய் ஒவ்வொரு மாதமும் கொடுத்துருவோம். ஒருத்தருக்கு 15,000 வரை செலவாகும். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ஷேர் பண்ணிப்போம் " என்றவரிடம் கொரோனா நேர செயல்பாடுகள் பற்றிக்கேட்டோம்.

+91 96004 32255
கர்ப்பிணிகள் மருத்துவமனை செல்ல வாகன உதவிக்கு இந்த எண்ணை அழைக்கலாம்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள்

``கொரோனா ஊரடங்கு அறிவித்ததும் கர்ப்பிணிகளுடைய நிலைதான் முதல்ல மனசுக்குள்ள ஓடுச்சு. போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டதால ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல சாதாரண மனிதர்களே நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கு. கர்ப்பிணிகளுக்கு கூடுதல் பிரச்னை. பிரசவ வலி வந்தபிறகு போக்குவரத்து வசதி கிடைக்காட்டி என்ன செய்யிறதுன்னு யோசிச்சு பிரசவத்திற்கு சில நாள்களுக்கு முன்னாடியே ஆஸ்பத்திரிக்குப் போறாங்க. ஆஸ்பத்திரியில கொரோனா தொற்று பற்றின பயம் ஒரு புறம், பிரசவம் குறித்த பதற்றம் ஒரு புறம்னு நிறைய பிரச்னைகள். அப்போதான், வாகன உதவி செய்யலாம்ங்கிற ஐடியா ஸ்பார்க் ஆச்சு. சிலர், `தேவையில்லாத வேலை. உனக்கும் கொரோனா வரப்போகுது'னு பயமுறுத்தினாங்க. அதையெல்லாம் பெருசா எடுத்துக்காம வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

சென்னை மட்டுமல்லாம எல்லா ஊர்களுக்குமான பொதுப்பிரச்னைங்கிறதால, வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் என் நண்பர்களிடம் உதவிகேட்டேன். யாருமே தயக்கம் காட்டல. எல்லோரும் அவங்க சொந்த வண்டியை கொடுக்கத் தயாராக இருந்தாங்க. இந்த தகவலை சமூக ஊடகங்கள்ல பதிவிட்டோம். தினமும் போன் கால்கள் வரத்தொடங்குச்சு. சென்னையிலருந்து யார் தொடர்புகொண்டாலும், நானே நேரடியாக பிக் அப், டிராப் பண்ணிருவேன். மற்ற ஊர்கள்ல அங்கு இருக்கும் நண்பர்கள் மூலமாகப் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்துருவோம். கார்ல போகும்போது சில பெண்கள் சீமந்தம் செய்ய ஆசைப்படுறதா சொன்னாங்க. அப்படி ஆசைப்பட்ட சில சகோதரிகளுக்கு அவங்க குடும்பத்தோடு சேர்ந்து நாங்களே சீமந்தமும் பண்ணி வெச்சோம்" என்கிறார் ஆகாஷ்.

உதவிய கர்ப்பிணி பெண்
உதவிய கர்ப்பிணி பெண்

முதல் கட்ட ஊரடங்கு நேரத்துல நிறைய சிக்கல்கள் இருந்துச்சு. இப்போ இ - பாஸ் வந்துட்டதால பிரச்னை இல்ல. கர்ப்பிணிகள் பயணம் செய்ற வண்டிங்கிறதால ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் வாட்டர் வாஷ் கொடுத்து வாங்குறோம். பயணம் செய்ய வரும் ஒவ்வொருத்தருக்கும் நாங்களே சானிடைஸர், மாஸ்க் கொடுத்து அவங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்றோம்.

எங்களால் எல்லாருக்கும் பணம் காசு கொடுத்து உதவ முடியாது. ஆனால் உழைத்து உதவ முடியும். நாங்க மருத்துவமனையில் சேர்க்கும் சகோதரிகளுக்கு ஆரோக்கியமான குழந்தை பொறந்துருச்சுங்கிற தகவலைத் தவிர நாங்க வேற எதையுமே அவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல" என்ற ஆகாஷ், நெகிழ்ச்சியான அனுபவம் ஒன்றையும் பகிர்ந்து கொள்கிறார்.

``போனவாரம் சென்னையிலருந்து ஒரு நிறை மாத கர்ப்பிணி போன் பண்ணாங்க. `ஒன்பதாவது மாத செக் அப்புக்கு போகணும், உதவ முடியுமா'னு கேட்டாங்க. நான் என்னோட காரில் கூட்டிட்டுப் போனேன். உள்ளே போனவங்களுக்காக நானும் அஞ்சு மணிநேரம் வெயிட் பண்ணேன். போன் பண்ணினா போனையும் எடுக்கல. கடைசில வீட்டுக்கு வந்துட்டேன்.

உதவிய கர்ப்பிணி பெண்
உதவிய கர்ப்பிணி பெண்

அன்னைக்கு நைட் அந்த சகோதரி போன் பண்ணி, `அண்ணா, பொண்ணு பொறந்திருக்கு. செக்- அப்புக்கு தான் வந்தேன். செக் பண்ணும்போது பாப்பாவுக்கு இதயத்துடிப்பு குறைவா இருக்குதுனு தெரிஞ்சுது, அதான் உடனே ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க. இருந்த பதற்றத்தில உங்களுக்குப் போன் பண்ண முடியல. நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு உதவலேனா ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்பேன்'னு சொன்னாங்க. இதுமாதிரி வார்த்தைகள்தான் அடுத்தடுத்த பயணங்களைத் தேடி ஓட வைக்கிறது. பணத்தைத் தாண்டி எத்தனையோ உதவிகள் மக்களுக்குத் தேவைப்படுது. நம்மால் முடிந்ததைச் செய்வோம்...’’ - உற்சாகமாகச் சொல்கிறார் ஆகாஷ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு