Published:Updated:

முடங்கிய காலம் கற்றுத்தரும் பணப் பாடங்கள்!

பணப் பாடங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பணப் பாடங்கள்

அவசியம் கற்க வேண்டியவை

மாதாந்தர ஊதியத்துக்கு வேலைக்குச் செல்வோர், சுயதொழில் செய்வோர், சிறு, குறு தொழில்புரிவோர், தொழில் முனைவோர் எனப் பல தரப்பினரின் வாழ்க்கையையும் இந்த 21 நாள் ஊரடங்கு தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது.

கடந்த காலத்தில் நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுத்துச் செலவு செய்து, இன்றைய நிலைமையைச் சமாளிக்கிறார்கள். ஆனால், ஏழை மக்களுக்கோ ஒரு நாளைக் கடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. எதிர்காலத்துக்கென எந்தச் சேமிப்பையும் செய்துவைக்காமல் இருப்பதே இதற்குக் காரணம். கொரோனா ஊரடங்கு முடக்க அனுபவத்திலிருந்து சில பணப் பாடங்களைக் கற்றுக்கொண்டால், இனி இது போன்ற கஷ்டங்களை நம்மால் எளிதில் கடந்துவர முடியும். அந்தப் பணப் பாடங்கள் என்னென்ன என்பதை நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். அவர் சில பாடங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

பணப் பாடங்கள்
பணப் பாடங்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கையில் கொஞ்சம் காசு வேண்டும்!

“டிஜிட்டல் இந்தியாவாக மாறிவரும் இந்தச் சமயத்தில், பெரும்பாலானவர்கள் அதிக பணத்தை வங்கி எஃப்.டி-யிலும் கொஞ்சம் பணத்தை வங்கிச் சேமிப்புக் கணக்கிலும் வைத்திருப்பீர்கள். இது நல்ல விஷயம்தான். ஆனால், அனைத்துப் பணத்தையும் வங்கியில் மட்டுமே வைத்திருக்காமல், இது மாதிரியாக இக்கட்டான சூழ்நிலையில் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக எடுத்து வீட்டில் வைத்துக்கொள்வது அவசியம். வெளியே செல்ல முடியாத அளவுக்குப் பெரும் மழை, திடீர் ரொக்கத் தட்டுப்பாடு, ஏ.டி.எம்-ல் பணம் இல்லை போன்ற பல்வேறு பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும்போது உடனடி பணத்தேவைக்கும், அவசரச் செலவுகளுக்கும் இந்தப் பணம் நிச்சயம் உதவும். அவரவர் வசதிக்கேற்ப ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை ரொக்கப் பணமாக வீட்டில் எப்போதும் இருப்பது அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவசரகால நிதி அவசியத்திலும் அவசியம்!

இன்றைய நவீன உலகில் போர்ச் சூழல் உருவாவது அரிது. ஆனால், பெரு மழை, கொள்ளை நோய்ப் பரவல் போன்றவை சில ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நாம் சந்திக்கும் விஷயங்களாக மாறிவிட்டன. திடீரென வரும் இந்த ஆபத்தான காலத்தைக் கஷ்டப்படாமல் சமாளிக்க நமக்குத் தேவை, அவசரக்கால நிதிச் சேமிப்பு.

பணப் பாடங்கள்
பணப் பாடங்கள்

தனிநபரோ, நிறுவனமோ யாராக இருந்தாலும் 6-9 மாதங்கள் வரையிலான வழக்கமான செலவுகளுக்குத் தேவையான பணத்தை இருப்பில் வங்கியில் வைத்திருப்பது அவசியம். தினக்கூலி வேலை செய்பவர்கள் முதல் கோடிக் கணக்கில் பிசினஸ் செய்யும் தொழிலதிபர்கள் வரை இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். மிகக் குறைந்தபட்சமாக மூன்று மாதங்களுக்குத் தேவையான பணத்தையாவது சேமித்துவையுங்கள். செயற்கைப் பேரிடர்களும், இயற்கைப் பேரிடர்களும் எதிர்பாராத வகையில் நம்மைத் தாக்கும்போது, இந்த அவசரக்கால நிதிச் சேமிப்பு நம்மை நிச்சயம் காப்பாற்றும்.

பணப் பாடங்கள்
பணப் பாடங்கள்

‘அவசரகால நிதிச் சேமிப்பு எதுவும் நம்மிடம் இல்லையே’ என இப்போது யாரும் கவலைப்பட வேண்டாம்.

அவசரகால நிதியைச் சேர்ப்பதன் அவசியத்தைப் புரிந்துகொண்டு, இனியாவது அதைச் சேர்க்கத் திட்டமிட வேண்டும்.

நமது சம்பாத்தியத்தில் ஐந்து சதவிகிதத்தை அடுத்த 24 முதல் 36 மாதங்களுக்கு ஒதுக்கிவைக்கலாம். அதாவது, ஒருவர் ரூ.25,000 சம்பாதித்தால், மாதந்தோறும் 1,250 ரூபாயை அவசரகால நிதிக்கு ஒதுக்கி வைக்கலாம். `ஐந்து சதவிகிதத்துக்கும் அதிகமான தொகையை அவசரகால நிதிக்குச் சேர்க்க முடியும்’ என்பவர்கள் தாராளமாகச் செய்யலாம். ஆனால், கடனுக்காக வட்டியை 18% கட்டிவந்தால், 5% மட்டும் சேர்த்து, மீதமுள்ள பணத்தை வட்டிகட்ட பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் திடீர்ச் செலவுகளைப் பெரிய அளவில் கடன் வாங்காமல் நம்மால் சமாளிக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காப்பீடு மிக மிக அவசியம்!

நம்மில் பலரும் ஹெல்த் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இதுநாள் வரை இந்த பாலிசிகள் இல்லாமல் நீங்கள் இருந்திருக்கலாம். ஆனால், கொள்ளைநோய்ப் பரவல் போன்ற பேரிடர் காலங்களில் ஒவ்வொருவரிடமும் இந்த இ்ரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்குத் திடீரென வரும் நோய்களுக்கான மருத்துவ சிகிச்சையைப் பெரிய அளவில் செலவு செய்யாமல் சமாளிக்க முடியும். ஒருவேளை உயிரிழக்கும் அளவுக்கு மோசமான நிலையை அடைந்தால், டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் இழப்பீட்டைப் பெற்று குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்படாமல் இருக்க முடியும்.

முடங்கிய காலம் கற்றுத்தரும் பணப் பாடங்கள்!

ஹெல்த் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ்களை எடுக்கும்போது பல விதங்களிலும் ஒப்பீடு செய்து, நன்கு விஷயம் தெரிந்தவர்களிடம் சரியான ஆலோசனை பெற்று, சரியான காப்பீட்டைத் தேர்வு செய்வது நல்லது.

ஆன்லைன் பண நிர்வாகம் அவசியம்!

பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம் என்பதால், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதுநாள் வரை ரொக்கமாகவே பணம் செலுத்திவந்த உங்களுக்கு ஆன்லைன் பண நிர்வாகம் என்பது கொஞ்சம் புதிதாகவே இருக்கும். கொஞ்சம் சிரமப்பட்டாவது இந்த முறையில் நீங்கள் செலவு செய்யப் பழகி விட்டால், நீங்கள் செய்யும் செலவுக் கணக்குகளை எழுதி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில்லறை சில்லறையாக செலவு செய்து, உங்கள் பணம் எப்படிச் செலவாகிறது என்று தெரியாமல் குழம்ப வேண்டியிருக்காது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கான பணத்தை உரிய நேரத்தில் செலுத்துவதாக இருந்தாலும் சரி, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதாக இருந்தாலும் சரி, பஸ், ரயில் டிக்கெட்டுகளை வாங்குவதாக இருந்தாலும் சரி, ஆன்லைன் பண நிர்வாகம் மிகச் சிறப்பாக இருக்கும்.

கடன் வாங்க வேண்டாம்!

பொருளாதார மந்தநிலை, கொள்ளை நோயால் தொழில் முடங்கல் என எல்லோரையும் வதைத்துவரும் இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் நம்மைத் தேடிவந்து கடன் தரும். இப்படிக் கிடைக்கும் கடனை நாம் வாங்கித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. நமக்குக் கட்டாயம் தேவை என்றால் மட்டுமே வாங்கலாம். வங்கி தரும் கடனே வேண்டாம் என்கிறபோது, சொந்தக்காரர்களிடம் கடன் வாங்குதல் கூடவே கூடாது.

இந்தப் பேரிடர் காலத்திலிருந்து பல வகையான பணப் பாடங்களை நாம் கற்றுக்கொண்டு, நம் வாழ்க்கையை நாம் செழுமைப்படுத்திக்கொள்வோம்!

அவசரகால நிதி... எப்படி இருக்க வேண்டும்?

அவசரகால நிதியை உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் விதத்தில் வைத்திருக்க வேண்டும். அதற்காக எல்லாப் பணத்தையும் வங்கிச் சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவசரகால நிதியில் சுமார் 30% தொகையை ஏ.டி.எம் மற்றும் ஆன்லைன் வசதியுள்ள வங்கிச் சேமிப்புக்கணக்கில் வைத்திருக்க வேண்டும். 30% தொகையை லிக்விட் ஃபண்டில் போட்டு வைக்கலாம். இதிலும், ஏ.டி.எம் கார்டு வசதி அல்லது ஆன்லைன் மூலம் பணத்தை எடுக்கும் வசதி இருந்தால் நல்லது. மீதி 40% தொகையைக் குறுகியகால எஃப்.டி-யில் வைக்கலாம். இந்த எஃ.ப்.டி கணக்கிலிருக்கும் தொகையை நினைத்த நேரத்தில் எடுத்து பயன்படுத்தும் வசதி இருப்பதுபோல் பார்த்துக்கொள்வது நல்லது.

-சேனா