Published:Updated:

2K கிட்ஸ்: தாயின் நினைவாக ஒரு நூலகம்!

தாயம்மாள் நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
தாயம்மாள் நூலகம்

வே.அரவிந்த் குமார்

2K கிட்ஸ்: தாயின் நினைவாக ஒரு நூலகம்!

வே.அரவிந்த் குமார்

Published:Updated:
தாயம்மாள் நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
தாயம்மாள் நூலகம்

``விருதுநகர், கட்டையாபுரம் பகுதியில கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தினவர் எங்கப்பா எஸ்.பெரியசாமி. சின்ன வயசுல இருந்தே மில்லுல வேலைக்குப் போய், கல்யாணத்துக்கு அப்புறம் தன்னோட வீட்டையே மில் ஆக்கி நெல் அவிச்சு, அரிசி யாக்கி, வியாபாரம் பார்த்த திறமைசாலி எங்கம்மா தாயம்மா. எங்கப்பா, அம்மாவுக்கு நான் ஏழாவது புள்ள. ஏழு வயசுல இருந்து எழுபது வயசு வரை ஓய்வில்லாம உழைச்ச எங்கம்மா நினைவா, அம்மா வாழ்ந்த வீட்டோட 1,200 சதுர அடி கொண்ட மேல் தளத்துல பொதுமக்களுக்காக, குறிப்பா மாணவ சமுதாய பயன்பாட்டுக்காக பொது நூலகம் ஒன்றை அமைச்சிருக்கேன்’’ - தாயன்பும் சமுதாய அக்கறையும் நிரம்பச் சொல்கிறார் 60 வயதாகும் எஸ்.பி.கணேசன்.

விருதுநகர் கட்டையாபுரத்தில் அமைந் துள்ள இந்த ‘தாயம்மாள் நூலக'த்தில், பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், இலக்கியம், தமிழ்மொழி, ஆன்மிகம், மருத்துவம், பொறியியல் முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள்வரை, 250 தலைப்புகளில் 8,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை தன் சொந்த செலவில் வாங்கி, வரிசைப்படுத்தி, பராமரித்து வருகிறார் கணேசன்.

தாயம்மாள்
தாயம்மாள்

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இலவசமாகச் செயல்பட்டு வருகிறது நூலகம். மேலும், வருடம் தோறும் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காமராஜர் பற்றிய போட்டிகள் நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வருகிறார்.

‘`அப்போ எங்க வீடு இருந்த ஏழ்மை சூழ்நிலையில, காமராஜர் ஆட்சிக் காலத்துல பள்ளியில தொடங்கப்பட்ட இலவச மதிய உணவு திட்டத்தால பயன்பெற்ற லட்சம் பேர்ல நானும் ஒருத்தன். நான் என் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடிச்சதுக்கு காம ராஜரோட நலத்திட்டங்களும், ‘நல்லபடியா வாழ்க்கையில முன்னேறணும்’னு அவர் மூலமா எனக்குக் கிடைச்ச ஊக்கமும்தான் காரணம்’’ என்பவர், ‘தாய்’ பதிப்பகத்தை நடத்தி வருகிறார். மேலும், காமராஜரின் வரலாற்றை ‘கலியுகத்தின் காவியத் தலைவன்’ என்ற 1,000 பக்கங்களைக் கொண்ட புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார் கணேசன்.

2016-ம் ஆண்டின் சிறந்த நூலாக தமிழக அரசு இவரது புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து கடந்த வருடம் விருது வழங்கியுள்ளது. தவிர, ‘காமராசர் புதிரா, புதையலா?’ மற்றும் ‘காமராஜர் பிறந்தாரா, அவதரித்தாரா?’ என்ற இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்.

எஸ்.பி.கணேசன்
எஸ்.பி.கணேசன்

எல்லாவற்றுக்கும் மேலாக, மேலே நூலகம் செயல்பட, தனது வீட்டின் கீழ்த் தளத்தை காமராஜர் காட்சியகமாக மாற்றியுள்ளார் கணேசன். ‘`காமராஜர் ஆட்சிக் காலத்துல நாளிதழ்கள்ல அவரைப் பற்றி வெளிவந்த செய்திகள், புகைப் படங்கள், கட்டுரைகள் போன்றவற்றை சேகரிச்சு ஆவணப்படுத்தினேன். காம ராஜர் பற்றி பல்வேறு காலகட்டத்துல எழுதப்பட்ட 200-க்கும் மேலான நூல்களையும் சேகரித்துப் பாதுகாத்தேன். காமராஜரோட இளமைப் பருவம், அவர் குடும்பம், நட்பு, அரசியல்ல காமராஜரோட சாதனைத் திட்டங்கள் ஆகிய தலைப்புகள்ல புகைப் படத்துடன் கூடிய தெளிவான விளக்கம் காட்சியகத்துல நிறுவப்பட்டிருக்கு. மேலும், பழங்கால நாணயங்கள், பாரம்பர்ய பொருள் களையும் காட்சிப்படுத்தி மக்களோட பார்வைக்காக வெச்சிருக்கோம்’’ என்றவர்,

2K கிட்ஸ்: தாயின் நினைவாக ஒரு நூலகம்!
2K கிட்ஸ்: தாயின் நினைவாக ஒரு நூலகம்!

‘`பள்ளிக்கூடமே போகாம, உழைப் பால சரஸ்வதி கடாட்சம் பெற்றவங்க எங்கம்மாவும் அப்பாவும். உழைப்பு, உண்மை, சிக்கனம் போன்ற குணங்களோட என்னை வளர்த் தெடுத்து, அவங்க எனக்குக் கொடுத்த கல்வியை, கடைக்கோடியில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதை என் கடமையா நினைக்குறேன். ஓர் அறிவார்ந்த சமூகம் கட்டியெழுப்பப்பட, நல்ல நூல்களும், நூலகங்களும் அவசியம். அதுக்கான ஒரு விதையாதான் ‘தாயம்மாள் நூலகத்’தை அமைச்சேன். மாணவர்களும் இளைஞர்களும் சமுதாய எழுச்சி பெறணும் என்பதே என் ஆசை, கனவு” என்கிறார் கணேசன்.

விழுதுகள் வேர்பிடிக்கக் காத்திருக்கிறது இந்த ஆலமரம்!