Published:Updated:

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
பிரீமியம் ஸ்டோரி
என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

பில்கிஸ் பானு வழக்கில் சிறையிலிருக்கும் குற்றவாளிகளையே பா.ஜ.க அரசு விடுதலை செய்துவிட்டது. ஆனால், குற்றமே செய்யாத பலர் விசாரணைக் கைதிகளாக நீண்ட காலமாகச் சிறையில் இருக்கிறார்கள்.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

பில்கிஸ் பானு வழக்கில் சிறையிலிருக்கும் குற்றவாளிகளையே பா.ஜ.க அரசு விடுதலை செய்துவிட்டது. ஆனால், குற்றமே செய்யாத பலர் விசாரணைக் கைதிகளாக நீண்ட காலமாகச் சிறையில் இருக்கிறார்கள்.

Published:Updated:
என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
பிரீமியம் ஸ்டோரி
என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

“10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகச் சிறைகளில் வாடும் சிறைவாசிகளை, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும்’’ என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜனநாயக் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களையும் அறிவித்துள்ளன.

நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கவிருப்பதாக, கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளையொட்டி சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அடுத்த அண்ணா பிறந்தநாளே (செப்.15) வந்துவிட்டது. எதுவும் நடக்கவில்லை. காரணம், கடந்த ஆண்டு முதல்வரின் அறிவிப்புக்குப் பிறகு. `முன் விடுதலை’ சலுகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள சிறைவாசிகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. அதில், பயங்கரவாதம், மத மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், ஊழல் உள்ளிட்ட 17 குற்றங்களில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், பல ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் 37 இஸ்லாமியச் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேர் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வில்லை. பேரறிவாளன் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விடுதலை ஆகியிருக்கிறார்.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

இது தொடர்பாக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முடிவுசெய்திருக்கிறது மனிதநேய ஜனநாயகக் கட்சி. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியிடம் பேசினோம். ``ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் என்பது பொதுவான வரையறை. ஆனால், அ.தி.மு.க ஆட்சியில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களும், தி.மு.க ஆட்சியில் மதுரை லீலாவதி படுகொலையில் தண்டனை பெற்றவர்களும் 14 ஆண்டுகளுக்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டனர். காந்தியைப் படுகொலை செய்த கோட்சேகூட முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். சமீபத்தில் சுதந்திர தின பவளவிழா ஆண்டை முன்னிட்டு, குஜராத்தில் பில்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கில் சிறையிலிருந்த கலவரக்காரர்களையும் விடுதலை செய்திருக்கிறார்கள். ஆயுதமேந்திப் போராடிய நக்சலைட்டுகளை தெலங்கானா, மேற்கு வங்க அரசாங்கங்கள் விடுதலை செய்திருக்கின்றன.

அதேபோல, மாநில அரசுக்கு உரிய சிறப்பு அதிகாரமான, 161-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டில் நீண்ட நாள்களாக சிறையிலிருக்கும் 37 இஸ்லாமியச் சிறைவாசிகள், சங் பரிவாரங்களைச் சேர்ந்த நான்கு பேர், வீரப்பன் தேடுதல் வேட்டையில் கைதுசெய்யப் பட்டவர்கள், தென்மாவட்டங்களில் சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்டு சிறையிலிருப்பவர்களை சாதி, மத வழக்கு பேதமில்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த ஏழு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். சட்டமன்றத்திலும் இது குறித்துப் பலமுறை பேசியிருக்கிறேன். ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதாக, தேர்தல் நேரத்தில் கோயம்புத்தூருக்கு வந்த முதல்வர் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றச் சொல்லித்தான் போராட்டம் அறிவித்திருக்கிறோம்’’ என்றார் அவர்.

இதே கோரிக்கைக்காக எஸ்.டி.பி.ஐ கட்சியும் சட்டமன்றத்தை நோக்கி கருஞ்சட்டைப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருக் கிறது. இது குறித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் பேசும்போது, ``700 ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட ஆதிநாதன் குழு, என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று எந்தத் தகவலும் இல்லை. குறிப்பிட்டவர்களை மட்டும் விடுதலை செய்யாமல் பாரபட்சம் காட்டும் தமிழக அரசின் அரசாணை ஆபத்தானது. பொது மன்னிப்பின் வழியாக ஒருவரை விடுதலை செய்யும்போது அவர்களின் தண்டனைக் காலம், குடும்பச் சூழல், அவர்கள் அடைந்த துயரங்கள், சிறையில் அவர்களின் நடத்தை ஆகியவற்றைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்று பார்க்கக் கூடாது. 85 வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமியச் சிறைவாசிகள், தங்களின் மரணமாவது வீட்டில் நடக்க வேண்டும் என்று விரும்பு கிறார்கள். முந்தைய அரசு நடந்துகொண்டதைப்போலவே தி.மு.க அரசும் நடந்துகொள்வது அநீதியானது. 161-ன்படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது, ஆளுநர் அதில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமே பலமுறை அறிவித்த பிறகும் தமிழக அரசு தாமதம் செய்ய என்ன காரணம்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்.

தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், பாக்கியராசன், சிவ.ஜெயராஜ்
தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், பாக்கியராசன், சிவ.ஜெயராஜ்

இந்த விடுதலை நடந்தால் உடனே அதை பா.ஜ.க அரசியலாக்கும் என்பதாலேயே தி.மு.க அரசு தயங்குவ தாகக் கூறுகிறது நாம் தமிழர் கட்சி. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் கேட்டபோது, ``பில்கிஸ் பானு வழக்கில் சிறையிலிருக்கும் குற்றவாளிகளையே பா.ஜ.க அரசு விடுதலை செய்துவிட்டது. ஆனால், குற்றமே செய்யாத பலர் விசாரணைக் கைதிகளாக நீண்ட காலமாகச் சிறையில் இருக்கிறார்கள். `அவர்களை விடுவிப்போம்’ என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்து விட்டு, தற்போது பா.ஜ.க-வுக்கு பயந்து விடுதலை செய்யாமல் இருப்பது சிறுபான்மை இன மக்களுக்குச் செய்யும் துரோகம்” என்றார்.

தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான சிவ.ஜெயராஜிடம் பேசினோம். ``இந்தக் கோரிக்கைகளை அரசு கனிவோடு பரிசீலிக்கும். அதேவேளையில், உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டு விதிமுறைகளைப் பல வழக்குகளில் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதையெல்லாம் கணக்கில் கொள்வதோடு, தமிழக உள்துறை வகுத்துள்ள விதிமுறைகளையும் கருத்தில்கொண்டுதான் ஒரு முடிவை எடுக்க முடியும். ஆதிநாதன் குழுவின் பரிந்துரைக்காக அரசு காத்திருக்கிறது. நிச்சயம் அதை நிறைவேற்றுவோம்’’ என்றார்.

சட்டத்தடை இல்லை. மனத்தடையை விலக்குமா அரசு?!