Published:Updated:

வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!

குடுகுடுப்பை
பிரீமியம் ஸ்டோரி
குடுகுடுப்பை

வாழ்க்கை

வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!

வாழ்க்கை

Published:Updated:
குடுகுடுப்பை
பிரீமியம் ஸ்டோரி
குடுகுடுப்பை

``அந்த ஈசுவரன் எல்லாப் பேரையும் அழைச்சு, ஆளுக்கொரு தொழிலைக் கொடுத்துப் படியளந்துக்கிட்டிருந்தான். அந்த நேரத்துல எங்காளு தூங்கிப்புட்டான். பெறவு முழிச்சு எழுந்திரிச்சு சிவன்கிட்ட ஓடி `அய்யா என்னையும் ரட்சிக்கணும்'னு கேட்டான். `அட பாவிப்பயலே... எல்லாத் தொழிலையும் பிரிச்சுக் குடுத்துப்புட்டேனடா'ன்னு சொல்லி யோசிச்ச ஈசுவரன், `எங்கையில இப்போ இதோ இந்தச் சித்துடுக்கையும் சீங்குழலும்தான் இருக்கு... நீ சொல்ற சொல்லு பத்துக்கு நாலு பலிக்கும்... ஊர் ஊராப் போயி மக்களுக்கு நல்ல வாக்குச் சொல்லிப் பிழைச்சுக்கோ'ன்னு சொல்லி, நாக்குல சூலாயுதத்தால கீறிவிட்டார். அப்ப ஆரம்பிச்சு இந்த உடுக்கையையும் கழியையும் நம்பி, இப்பவரைக்கும் எங்க வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு...''

தேர்ந்த கதைசொல்லி போல தங்கள் தொன்மக் கதையைச் சொல்கிறார் பொன்னுச்சாமி. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக குடுகுடுப்பையைச் சுமந்துசென்று நல்லவாக்குச் சொல்பவர்.

பாம்பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், நரிக்குறவர்கள், பகல்வேஷக்காரர்கள் போல, குடுகுடுப்பைக்காரர்களும் நாடோடிகள். குழுவாகக் கிளம்பி, நிழல் கண்ட இடத்தில் தங்கி, நள்ளிரவில் எழுந்து தொழிலுக்குச் செல்வார்கள். நாய்களின் உக்கிரச் சத்தமும் குடுகுடுப்பையின் ஓங்கார ஒலியும் குடுகுடுப்பைக்காரர்களின் வாக்கும் சேர்ந்து ஊரை மிரளவைக்கும்.

வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!

மகாராஷ்டிராவை ஆதிநிலமாகக்கொண்ட இவர்கள், மராட்டிய மன்னர்கள் தமிழகம் வந்தபோது அவர்களோடு வந்தவர்கள். ஜக்கம்மா, வள்ளியம்மா, எல்லையம்மா போன்ற பெண் தெய்வங்களை வணங்கும் இவர்களை `கணிகர்கள்' என்று அடையாளப்படுத்துகிறது இந்திய அரசிதழ். இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடிகளில் கணிகர் சமூகமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, மராட்டி, இந்தி கலந்த ஒரு கலப்பு மொழியைப் பேசுகிறார்கள். இந்த மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. தெருக்களில் நல்லவாக்குச் சொல்லி, அந்த மக்கள் தரும் உதவிகளைப் பெற்று வாழ்ந்த குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்க்கை இப்போது வெகுவாக மாறியிருக்கிறது. சிறுசிறு குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு ஒன்றிணைந்து வாழ்கிறார்கள். பொன்னுச்சாமி, ஆரணி குடுகுடுப்பைக்காரர் சங்கத்தின் தலைவர்.

ஆரணி கோட்டையைச் சூழ்ந்திருக்கும் அகழிக்குப் பின்புறமாக, சாலையை ஒட்டி பள்ளிக்கூடத் தெருவில் இருக்கிறது குடுகுடுப்பைக்காரர் குடியிருப்பு. எல்லையம்மன் கோயிலில் தொடங்கி வேப்பர மாரியம்மன் கோயிலோடு, ஒற்றை வரிசையில் முடிகிறது தெரு. மொத்தம் 54 வீடுகள். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பெரியவர்கள் குடியிருப்பை விட்டுக் கிளம்பிவிடுகிறார்கள். தொழில் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு வந்துசேர மாலை 5 மணியாகிவிடும். அதன்பிறகு களைகட்டுகிறது தெரு. குழந்தைகள் கூடி விளையாட, பெண்கள் கதை பேசியபடி துணிகளை வெட்டி சுருக்குப் பைகளைத் தைக்கத் தொடங்குகிறார்கள். தெருவில் அலைந்த களைப்பை விரட்டிவிட்டு, கோயில் முகப்பில் கூடி ஊர், உறவு விவகாரங்களைப் பேசுகிறார்கள் ஆண்கள். கலகலவென்றிருக்கிறது தெரு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!

``எங்க தாத்தன் பாட்டனுங்க, ஆரணியைச் சுத்தியிருக்கிற கிராமங்கள்ல மரத்தடிகள்ல தங்கித் தொழில் செஞ்சாங்க. 65 வருஷத்துக்கு முன்னாடி காடாக்கெடந்த இந்த பூமியில கூரையைப் போட்டுக்கிட்டு நிரந்தரமா தங்கிட்டாங்க. காலப்போக்குல இந்த எடத்தை அங்கீகரிச்சு அரசாங்கத்துல பட்டாவும் கொடுத்திட்டாங்க. இங்கிருக்கிற பலபேரு இன்னமும் குடுகுடுப்பையை நம்பித்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். எங்க பிள்ளைகளையாவது இதுல இருந்து விடுவிச்சு, எதுனா படிக்க வச்சிருவோம்னு பாக்குறோம். ஆனா, அரசாங்கம் கைகொடுக்க மறுக்குது...'' வருத்தத்தோடு பேசுகிறார், குடுகுடுப்பைக்காரர்கள் சங்கச் செயலாளர் ராஜாமணி.

குடிசைகளெல்லாம் இப்போது காரை வீடுகளாக மாறிவிட்டன. ஒரு காலத்தில் குடுகுடுப்பைக்குச் செல்லும்போது மக்களிடம் பழந்துணிகளை யாசகம் பெற்று, தைத்து, அதை உடுத்தி வந்தார்கள். இப்போது எல்லோரும் நல்லுடை அணிகிறார்கள். பிள்ளைகள் பெரும்பாலும் பள்ளிக்கூடம் செல்கிறார்கள். ஆனாலும் தங்கள் மரபுகளை, பழக்க வழக்கங்களைக் கைவிடவில்லை இந்த மக்கள்.

``அப்போ ஆம்புளைங்க குடுகுடுப்பைக்குப் போக, பொம்பளைங்க, ஊசி நூலெடுத்துக்கிட்டுப் போய் `துணி தைக்கலையோ துணி'ன்னு கூப்பாடு போட்டு, தச்சுக் குடுத்துட்டுக் காலணா, அரையணாக் காசும் குடிக்கக் கஞ்சித்தண்ணியும் வாங்கிட்டு வருவாங்க. இப்போ யாரும் அப்படிப் போறதில்லை. பிளாஸ்டிக் குடம், வாளிகளைச் சுமந்துக்கிட்டு ஊருக்குள்ள போயி, பழைய சேலைங்க, வேட்டிங்களை வாங்கிட்டு, அதுக்கு ஈடா பிளாஸ்டிக் பொருள்களைக் கொடுப்போம். அந்தத் துணிகளை வெட்டி சுருக்குப் பை தைப்போம். நல்ல துணியா இருந்தா உடுத்திக்க வச்சுக்குவோம். இல்லேன்னா தச்சு அயர்ன் பண்ணி சந்தைகள்ல மலிவு விலைக்கு விப்போம்'' என்கிறார் வள்ளியம்மா.

வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!
வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!

முன்பெல்லாம் குடுகுடுப்பைக்காரர்கள் நள்ளிரவு 1 மணிக்கு வேலையைத் தொடங்குவார்கள். 16 கஜ மஞ்சள் புடவையைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு கையில் குடுகுடுப்பையும் சீங்குழலையும் எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள். நேராக அந்த ஊர் மயானத்தில் இருக்கும் அரிச்சந்திரன் முன்னால் கற்பூரம் ஏற்றி வணங்கிவிட்டு, அங்கிருக்கும் சாம்பலை அள்ளிப்பூசிக்கொண்டு தெருவில் இறங்கினால், வீடு வீடாக நின்று வாக்குச் சொல்லி முடிய, விடிந்துவிடும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்பவும் வீடு வீடாக வருவார்கள். மக்கள் அரிசியோ, தானியமோ, காசோ தருவார்கள்.

இப்போது தொழிலின் தன்மை மாறிவிட்டது.

``நடுராத்திரி எழுந்து மயானத்துக்குப் போய் பூஜை பண்ணிட்டுக் குறி சொன்ன காலம் போயிருச்சு. இப்போ காலையில நாலு மணிக்கு எழுந்திருச்சுக் கிளம்புவோம். பஸ்லயோ, பைக்லயோ ஏறி ஒரு ஊரோட எல்லையில இறங்கிருவோம். அங்கிருந்து குடுகுடுப்பையை அடிச்சுக்கிட்டு ஊருக்குள்ள போவோம். வழி வழியாக் கத்துக்கிட்டது. வீட்டோட சூழலைப்பாத்தே அவங்க பிரச்னையைக் கணிச்சிருவோம். வாக்குச்சொல்லி முடிச்சுட்டு, காத்தால திரும்பவும் ஊருக்குள்ள வருவோம். நாங்க சொன்ன வாக்குல சந்தேகம் இருந்தா மக்கள் கூப்பிட்டுக் கேட்பாங்க. கைரேகை பாப்போம். `குழந்தை அழுதுக்கிட்டே இருக்கு', `கெட்ட காத்து உலாவுது', `புள்ள மந்தமா இருக்கு', `மூதேவி சாந்திருக்கு'ன்னு யாராவது சொன்னா அவங்களுக்கு தாயத்து மந்திரிச்சுக் கொடுப்போம்... எல்லாம் சேத்து ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் அம்புட்டா பெரிசு...'' என்கிறார் செங்கல்வராயன். இவர்தான், ஆரணி குடுகுடுப்பைக்காரர்கள் குடியிருப்புக்கு நாட்டாமை.

வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!
வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!

அந்தக்காலத்தில் குடுகுடுப்பைக்காரர்கள் எலும்புகள், மண்டையோடு, தேவாங்கின் விரல், ஓலைச்சுவடிகள் எல்லாம் வைத்திருப்பார்கள். இப்போது, ஜக்கம்மா பூஜையில் வைத்தெடுக்கப்பட்ட வெள்ளெருக்கு வேர், மேல்மலையனூரில் பூஜை செய்யப்பட்ட மஞ்சள், தகடுகள், மை வைத்திருக்கிறார்கள். ``வெள்ளெருக்குக்கு திருஷ்டி எடுக்கிற சக்தியிருக்கு. தாயத்துல ஒரு துளி வெள்ளெருக்குப் பட்டை சேப்போம். எல்லையம்மாவுக்குப் படைச்சு வழிபட்ட நவதானியங்களை ஒரு டப்பாவுல வச்சிருப்போம். அதுதான் தாயத்துக்கு சக்தி கொடுக்கும். ஜக்கம்மா விபூதி, மலையனூர் சந்தனம், வள்ளியம்மாவுக்குப் படைச்ச குங்குமம் வச்சிருப்போம். மூதேவி பாதிச்சது, திருஷ்டி பாதிச்சதைப் போக்க ஒரு மை நாங்களே தயாரிப்போம். வெள்ளெருக்கு, நாகமல்லி, நின்னாச்சுருங்கி, பேய் மிரட்டி, ரத்தப்பூதாளி... இந்த அஞ்சு மூலிகைகளையும் காட்டுல பறிச்சுக்கிட்டு வந்து சில மருந்துகள் சேர்த்துச் செய்வோம். இது மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது. மயானத்துப் பக்கம் பூஜைக்குப் போகும்போது, காத்துக்கருப்பு அண்டாம இருக்க நாங்களே ஒரு துளி நெத்தியில வச்சுக்குவோம். இதெல்லாம் போக எல்லாக் குடுகுடுப்பைக்காரர்களும் அஷ்டபந்தன சக்கரம் வச்சிருப்பாங்க. பேய், பிசாசு, மூதேவிகிட்ட இருந்து இந்த அஷ்பந்தனம்தான் எங்களைக் காப்பாத்துது'' எனத் தங்கள் தொழில் கருவிகளின் நுட்பம் பற்றி விரிவாகப் பேசுகிறார் பொன்னுச்சாமி.

பொன்னுச்சாமி ஊருக்கெல்லாம் நல்வாக்குச் சொல்கிறார். ஆனால், அவரது வாழ்க்கையில் சோகம் அப்பியிருக்கிறது. நான்கு பிள்ளைகள்... மூன்று பிள்ளைகளுக்குக் காது கேட்காது; வாய் பேச மாட்டார்கள்.

குடுகுடுப்பைதான் இவர்களின் மூலதனம். வெள்ளெருக்குக் கட்டையைக் குடைந்து மேலே மாட்டுத்தோல் அல்லது உடும்புத்தோல் கட்டி பயம் பத்திரமாக அவரவர்களே செய்துகொள்கிறார்கள். மற்றவர்கள் தொடக்கூட அனுமதிப்பதில்லை.

வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!

கட்டுப்பாடுகளிலும் மரபிலும் சிறிதும் சமரசமில்லாமல் வாழ்கிறார்கள் இந்த மக்கள். ``இந்த இடத்துல எங்க முன்னோர்கள் வந்து 65 வருஷமாச்சு. இந்தநாள் வரைக்கும் பிரச்னைன்னு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் நின்னதில்லை. எவ்ளோ பெரிய பிரச்னையா இருந்தாலும், இதோ இந்த எல்லையம்மன் வாசல்ல உக்காந்து பேசித் தீத்திருவோம். அந்த ஈசுவரன் சூலாயுதத்தால கீறிவிட்ட நாக்கு... குடும்பத்துக்குள்ளயோ, வெளியிலயோ தடித்த வார்த்தைகளைப் பேசக்கூடாது. அப்படிப் பேசிப்புட்டா ஊருக்கு அபராதம் கட்டணும். காதல் திருமணத்தை நாங்க ஏத்துக்கிறதில்லை. ஆணோ பொண்ணோ யாரா இருந்தாலும், காதலிச்சுக் கல்யாணம் கட்டிக்கிட்டா ஊருக்குள்ள சேக்க மாட்டோம். எங்க சமூகத்துக்குள்ளயே பெரியவங்க சம்மதமில்லாம விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒரு வருஷம் ஒதுக்கி வச்சிருப்போம். அதுக்கப்புறம் பெத்தவங்க பஞ்சாயத்துல கோரிக்கை வச்சா, கொஞ்சம் அபராதம் போட்டு உள்ள சேத்துக்குவோம். எங்களுக்குள்ள பொண்ணெடுக்க பொண்ணு கொடுக்க சில சாத்திரம், சம்பிரதாயங்கள் இருக்கு. மத்த சமூகங்களைப் போல எங்களுக்குள்ளயும் பிரிவுகள் இருக்கு. ஜவான், வங்கோடா, பாங்கோத், முத்திரிகர், தொரக்கர், வாக்கடகர், வாஷ்டர்... இந்த ஏழுல குறிப்பிட்ட பிரிவுகள்ல மட்டும்தான் திருமண உறவு வச்சுக்க முடியும். மத்தவங்க பங்காளி உறவாகிருவாங்க. யுகாதிதான் எங்க குலப்பண்டிகை. எந்தூர்ல போயி தொழில் செஞ்சாலும் யுகாதி நேரத்துல எல்லாரும் இங்கே கூடிருவோம். அந்த நேரத்துலதான் கல்யாணமெல்லாம் நடக்கும்'' என்கிறார் ராஜாமணி.

வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!

தெருவில் கிடந்து யாசகம் பெற்று வாழ்ந்த இந்த மக்கள், இப்போது பிற மனிதர்களைப் போல கண்ணியமாக வாழப் பழகிவிட்டார்கள். ஆனால், இவர்களை அடுத்த கட்டத்துக்கு நகரவிடாமல் தடுக்கிறது அரசு. பட்டியல் சமூகங்களில் சேர்த்து `கணிகர்கள்' என்று அரசு கெஜட்டில் தெளிவாக வரையறுத்தும் இந்தக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்குக்கூட சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. அதனால், அடுத்த கட்டத்தை எட்ட முடியாமல் தவிக்கிறார்கள். போராடி ஓய்ந்துவிட்டார்கள்.

``இதோ இந்தப் பொம்பளைப் புள்ளைகளப் பாருங்க... எல்லாப் புள்ளைகளும் பத்தாவது, பதினோராவதுன்னு பள்ளிக்கூடம் போகுதுக. அந்தக் காலத்துல எங்க முன்னோர்கள் பிறக்கும்போதே `இவளுக்கு இவன்'னு முடிவு சொல்லி, பத்து பண்ணெண்டு வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. இப்போ நாங்க, எங்க புள்ளைகளைப் படிக்க வைக்கிறோம். அவங்களுக்கும் மத்தவங்களைப்போல சமூகத்துல நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கொடுக்க விரும்புறோம். ஆனா என்ன புண்ணியம்... எட்டாவதைத் தாண்டும்போதே `சாதி சர்ட்டிபிகேட் குடு'ன்னு கேக்குறாங்க. அதிகாரிங்ககிட்ட போய் `சர்ட்டிபிகேட் கொடுங்க'ன்னு கேட்டா, `நீங்க கணிகர்ங்கிறதுக்கு என்ன ஆதாரம்'ன்னு கேக்குறாங்க. `நாங்கதான்யா ஆதாரம்'ன்னு சொல்றோம். `உங்க தாத்தா, பாட்டன் யாரும் சர்ட்டிபிகேட் வாங்கியிருந்தா எடுத்துக்கிட்டு வாங்க'ன்னு சொல்றாங்க. அவங்கெல்லாம் மரநிழல்ல வாழ்ந்து முடிஞ்சுபோனவங்க... அவங்களுக்குத்தான் எந்த அடையாளமும் இல்லயே! சாதிச் சான்றிதழ் கிடைக்கலேன்னா இந்தப் புள்ளைகெல்லாம் படிப்பை விட்டுட்டு துணி பொறுக்கத்தான் போகணும். இத்தனை காலத்துக்கு ஒரு அரசாங்க வேலைக்குப் போக முடியலே எங்க பிள்ளைங்க. எங்க வாழ்க்கை போயிருச்சு. எங்க புள்ளைங்க வாழ்க்கையாவது மாறும்னு பாத்தா, அரசாங்கம் வஞ்சனை செய்யுது...'' கண்கலங்கப் பேசுகிறார் பொன்னுச்சாமி.

வாக்கு சொல்பவர்களின் வாழ்க்கை!

செங்கல்வராயனின் அப்பா குடுகுடுப்பைக்காரர். செங்கல்வராயன் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் அதன்பிறகு படிக்க வாய்க்கவில்லை. குடுகுடுப்பையை எடுத்துவிட்டார். அவரின் மகன் ராஜேந்திரன் எட்டாம் வகுப்பு வரை படித்தார். அவருக்கும் அதே பிரச்னை. அவரும் குடுகுடுப்பைத் தொழிலுக்கு வந்துவிட்டார். தலைமுறை கிடந்து உழல்கிறது.

தாஸ் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார். பிரமாதமாகச் சிலம்பம் சுற்றுகிறார். மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். ஆனந்தராஜ் கால்பந்து வீரர். ரமேஷ் தடகளத்தில் பதக்கங்கள் வாங்கியவர். ஆனாலும் எல்லோருக்கும் அடுத்தகட்ட நகர்வுக்குத் தடையாக இருப்பது சாதிச்சான்றிதழ். அதிகாரிகள் பழங்குடிச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக யாசகம் பெற்று வாழ்ந்த சமூகம், விழுந்து எழுந்து தன்னை மாற்றிக்கொண்டு பொதுச்சமூகத்தில் கலக்கப் போராடுகிறது. அவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்காமல் வஞ்சிப்பது நியாயமல்ல. அரசு இவர்களின் வாழ்க்கையில் கருணையால் ஒளியேற்ற வேண்டும்!