Published:Updated:

லிஃப்ட்.. தெஃப்ட்.. லெஃப்ட் - நிர்வாணமாக விடப்படும் டிரைவர்கள்!

நிர்வாணமாக விடப்படும் டிரைவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நிர்வாணமாக விடப்படும் டிரைவர்கள்!

இந்த பைபாஸ் சாலையில் இரவில் மின்விளக்குகள் எரிவதில்லை. எப்போதும் கும்மிருட்டாகவே இருப்பதால் வழிப்பறியும், பாலியல் தொழிலும் நடக்கின்றன.

லிஃப்ட்.. தெஃப்ட்.. லெஃப்ட் - நிர்வாணமாக விடப்படும் டிரைவர்கள்!

இந்த பைபாஸ் சாலையில் இரவில் மின்விளக்குகள் எரிவதில்லை. எப்போதும் கும்மிருட்டாகவே இருப்பதால் வழிப்பறியும், பாலியல் தொழிலும் நடக்கின்றன.

Published:Updated:
நிர்வாணமாக விடப்படும் டிரைவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நிர்வாணமாக விடப்படும் டிரைவர்கள்!

வண்டலூர் - மீஞ்சூர் பைபாஸ் சாலையில் கடந்த மாதம் நடந்த சம்பவம் இது. வெளிவட்டச் சாலையிலுள்ள வரதராஜபுரம் டோல்கேட் அருகே கைக்குழந்தையுடன் இளம் பெண்ணும், அவரின் அருகில் பைக்கோடு ஓர் ஆணும் காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை, அந்த இளம்பெண் நிறுத்தியிருக்கிறார். காருக்குள் ஆணும் பெண்ணும் இருந்தனர். இரக்கப்பட்டு காரை நிறுத்தியதும், சாலையோர புதருக்குள் மறைந்திருந்த ஒரு வழிப்பறிக் கும்பல், காரில் வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அவர்களிடமிருந்து 5,000 ரூபாயை வழிப்பறியும் செய்திருக்கிறது. வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை.

“இதுமட்டுமல்ல... வழிப்பறிக் கும்பலுடன் தொடர்புள்ள இளம்பெண்கள், பைபாஸ் சாலையில் நள்ளிரவில் கிளாமராக நின்றுகொண்டு வாகனங்களை நிறுத்துகிறார்கள். சபலத்துடன் இறங்கிவரும் டிரைவரை மறைவான இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு காத்திருக்கும் வழிப்பறிக் கும்பல், அந்த டிரைவர்களை அடித்து உதைத்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு நிர்வாணமாக விட்டு விட்டுச் செல்கிறது. அப்படிச் செய்தால்தான் அவர்களால் உடனடியாகப் புகார் செய்ய முடியாது என்று அந்தக் கும்பல் ஆடைகளை உருவுகிறது. இங்கே அடிக்கடி இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன” என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

உதவப்போனவருக்கு கழுத்தில் கத்தி!

சென்னை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலை வானகரம் டோல்கேட் அருகே இன்னொரு சம்பவம். ஜூலை 3-ம் தேதி நள்ளிரவில் சிவப்பு நிற சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர், அங்கே லிஃப்ட் கேட்டுக்கொண்டிருந்தார். பெரும்பாலான வாகனங்கள், அந்தப் பெண்ணைக் கடந்து சென்றன. அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இளம்பெண் அருகே நின்றது. காரின் கண்ணாடியைக் கீழே இறக்கிய கால் டாக்ஸி டிரைவர், என்னவென்று விசாரித்தார். அதற்கு அந்தப் பெண், “சார், என்னை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டது. அவர்களிடமிருந்து தப்பி வந்துட்டேன். ஊருக்குள்விட்டால் அங்கிருந்து வீட்டுக்குப் போய்விடுவேன்” என்று கண்ணீர்மல்கக் கேட்டிருக்கிறார். இரக்கப்பட்ட டிரைவரும் இளம்பெண்ணை காரில் ஏறும்படிச் சொல்லியிருக்கிறார்.

அப்போது சாலை ஓரத்தில் மறைவான இடத்திலிருந்து நான்கு பேர் காரை நோக்கி ஓடிவந்து, டிரைவரின் கழுத்தில் கத்தி வைத்துள்ளனர். சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டிய அந்தக் கும்பல், டிரைவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்திருக்கிறது. அப்போது சைரன் வைத்த போலீஸ் வாகனம் ஒன்றும், பைக் ஒன்றும் வழிப்பறிக் கும்பலை நோக்கி வேகமாக வந்தன. அதை கவனித்த கும்பல், அங்கிருந்து ஓட்டம் பிடித்து இருட்டுக்குள் மறைந்தது.

லிஃப்ட்.. தெஃப்ட்.. லெஃப்ட் - நிர்வாணமாக விடப்படும் டிரைவர்கள்!

“மின்விளக்குகள் இல்லாததால்தான்...”

இதையடுத்து டிரைவரையும், அந்த இளம்பெண்ணையும் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அந்த இளம்பெண் தன் பெயர் சாந்தி என்றும், ஆலந்தூர், கோயம்பேடு பகுதிகளில் பிச்சை எடுப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், “கோயம்பேட்டிலிருந்து ஒருவர், ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லி என்னை இங்கு பைக்கில் அழைத்து வந்தார். அங்கே எங்களைப் பார்த்த நான்கு பேர், அவரை விரட்டிவிட்டு, என்னை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக உறவுகொள்ள முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பி லிஃப்ட் கேட்டுக்கொண்டிருக்கும் போதுதான் நீங்கள் வந்தீர்கள். மற்றபடி எனக்கும் அந்தக் கும்பலுக்கும் தொடர்பில்லை” என்று சொல்லியிருக்கிறார் பாதிக்கப்பட்ட டிரைவரிடம் புகாரை வாங்கிக்கொண்ட போலீஸார், அந்தப் பெண்ணின் உதவியுடன் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைத் தேடிவருகின்றனர்.

வழிப்பறிச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், ``இந்த பைபாஸ் சாலையில் இரவில் மின்விளக்குகள் எரிவதில்லை. எப்போதும் கும்மிருட்டாகவே இருப்பதால் வழிப்பறியும், பாலியல் தொழிலும் நடக்கின்றன. இவையெல்லாம் ரோந்து போலீஸாருக்குத் தெரிந்தும் கண்டுகொள்வ தில்லை. தற்போது நடந்திருக்கும் வழிப்பறிச் சம்பவத்தில் இளம்பெண், முதலில் அந்த வழியாக பைக்கில் சென்ற ஒருவரிடம்தான் லிஃப்ட் கேட்டிருக்கிறார். உஷாரான அந்த நபர், பைக்கை நிறுத்தாமல் போய்விட்டார். பின்னால் வந்த காரை அந்தப் பெண் நிறுத்தியதை பைக் கண்ணாடி மூலம் கவனித்த அந்த நபர், டோல்கேட் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் விரைந்து சென்று சொல்லியிருக்கிறார். பைக் ஓட்டி வந்தவரும், போலீஸாரும் உடனடியாக சென்றதால்தான் டிரைவர், வழிப்பறிக் கும்பலிடம் பணத்தை மட்டும் இழந்திருக்கிறார். இல்லையென்றால் டிரைவரிடமிருந்து செல்போன், காரைக்கூட அந்தக் கும்பல் பறித்திருக்கும்” என்றனர்.

இது குறித்து உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோனிடம் பேசினோம். ``வழிப்பறிச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தும் ரோந்து போலீஸார் உடனடியாக அங்கு சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்துவருகிறோம். நிறைய புகார்கள் வருவதால், அந்தப் பகுதியில் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தித் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இருப்பினும், வாகன ஓட்டிகளும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்” என்றார்.

லிஃப்ட்... தெஃப்ட்... லெஃப்ட்... ஃபார்முலாவிலிருந்து தப்பிக்க, தேவை சாலையில் கவனம். சேலையில் அல்ல!