Published:Updated:

திரவ கஞ்சா, ஸ்டாம்ப்... போதையில் சீரழியும் இளைய சமூகம்!

திரவ கஞ்சா
பிரீமியம் ஸ்டோரி
திரவ கஞ்சா

கஞ்சாவை, `திரவ கஞ்சா’வாக மாற்றி சிறிய பாக்கெட், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கிறார்கள்.

திரவ கஞ்சா, ஸ்டாம்ப்... போதையில் சீரழியும் இளைய சமூகம்!

கஞ்சாவை, `திரவ கஞ்சா’வாக மாற்றி சிறிய பாக்கெட், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கிறார்கள்.

Published:Updated:
திரவ கஞ்சா
பிரீமியம் ஸ்டோரி
திரவ கஞ்சா

போதை மாத்திரை விற்பனைத் தகராறில், சென்னையில் மே 19-ம் தேதி 19 வயது இளைஞர் கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்ட வீடியோ தமிழகத்தையே பதைபதைக்கவைத்தது.

அண்மைக்காலமாக தமிழ்நாடு, போதைப் பொருள்களின் புகலிடமாக மாறித் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில், 2021-ம் ஆண்டில் மட்டும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 4,002 பேர் என்ற புள்ளிவிவரம் அதிரவைக்கிறது.


இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத மருந்தாளுநர்கள் சிலர், ‘‘கேட்டமைன் என்பது ஒரு வகை மயக்க மருந்து. இதை ஊசி மூலம் நரம்பு வழியாகவும், மூக்கு வழியாக நுகர்ந்தும் போதை ஏற்றிக் கொள்கிறார்கள். சென்னை மற்றும் புதுச்சேரியில் ‘ஸ்டாம்ப்’ (Lysergic Acid Diethylamide-LSD) என்ற பெயரில், போதை மருந்து சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. இதைத் தண்ணீரில் கரைத்து, சிறிய ஸ்டாம்ப்களில் ஊற்றி திட நிலைக்கு மாற்றுகிறார்கள். இந்த ஸ்டாம்ப்பை நாக்கில் லேசாகத் தடவினாலே எட்டு மணி நேரத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரம் வரை போதை நீடிக்கும். பள்ளிகளுக்கு அருகிலேயே தின்பண்டங்கள்போல சர்வ சாதாரணமாக இந்த ஸ்டாம்ப் போதைப்பொருள் விற்கப்படுகிறது.

திரவ கஞ்சா, ஸ்டாம்ப்... போதையில் சீரழியும் இளைய சமூகம்!

இவை தவிர, முறையான மருத்துவச்சீட்டு இல்லாமல், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து கூரியரிலும் குறிப்பிட்ட சில வகை மாத்திரைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. போதையை உண்டாக்கும் இந்த மாத்திரைகளை வாங்குவதற்காகக் கல்லூரி மாணவர்கள் மத்தியில், வாட்ஸ்அப் குழுக்களும் இருக்கின்றன.

கஞ்சாவை, `திரவ கஞ்சா’வாக மாற்றி சிறிய பாக்கெட், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். இதை ‘கஞ்சா எண்ணெய்’ என்றும் குறிப்பிடுகிறார்கள்’’ என்கின்றனர்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் சென்னை மண்டல இயக்குநரான ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்தனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ‘‘போதைப் பொருள் மாஃபியாக்களின் டார்கெட் மாணவர்கள்தான். போதைப்பொருள் விற்பவர்கள் மட்டுமின்றி, அதைப் பயன்படுத்துபவர்களையும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி NDPS Act-ன் கீழ் கைதுசெய்ய வேண்டும். 10-லிருந்து 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தினால் மட்டுமே, தமிழகத்திலிருந்து போதைப்பொருள் புழக்கத்தை மொத்தமாகத் துடைத்தெறிய முடியும்’’ என்றார் எச்சரிக்கையோடு!

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநர் பூர்ண சந்திரிகா, ‘‘சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, தனிமையில் பேசுவது, சரியில்லாத நண்பர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்வது என திடீரென பிள்ளைகளின் போக்கில் வித்தியாசம் தெரிந்தால் பெற்றோர் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்’’ என்கிறார்.

‘போதைப்பொருள் விற்பனை செய்பவரின் சொத்துகள் முடக்கப்படும்’ என்று முதலமைச்சர் அண்மையில் அறிவித்தார். ஆனால், மதுரை மண்டல காவல்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை ஏற்கெனவே செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த மார்ச் 23-ம் தேதி, மதுரை ஆஸ்டின்பட்டியில் வாகன சோதனையில் 322 கிலோ கஞ்சாவுடன் ஏழு பேரைப் பிடித்தனர். அவர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, அவர்களின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி 37 லட்சம் மதிப்புள்ள வீட்டை சீல் வைத்தனர். வங்கிக் கணக்கிலுள்ள 1.2 லட்சத்தை முடக்கினர். அதேபோல் சேடப்பட்டி அருகே 41 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் 30 லட்சம், 28 லட்சம் மதிப்புள்ள இரண்டு வீடுகள் சீல் வைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி கஞ்சா வியாபாரிகளான நவீன்குமார், சேதுபதி, நாட்ராயன், முருகன் ஆகியோருக்குச் சொந்தமான 1.83 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

அஸ்ரா கார்க்
அஸ்ரா கார்க்

தேனி மாவட்டத்தில், கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கீரிப்பட்டி முருகன் என்பவர் குமணன்தொழுவில் மைத்துனர் மற்றும் மனைவி பெயரில் வாங்கியுள்ள 22.5 லட்சம் மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளனர். தென் மண்டலத்திலுள்ள 10 மாவட்டங்களிலும் கஞ்சா வியாபாரிகளின் சொத்துகளைக் கணக்கெடுக்க, உயரதிகாரிகளின் கண்காணிப்பில் டீம் அமைத்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த ஒரு வருடத்தில் தென் மண்டலத்தில் கஞ்சா வியாபாரிகள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போடப்பட்டுள்ளன. 90 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கஞ்சா வியாபாரிகளைக் கதிகலங்க வைத்துள்ள இந்த நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், ‘‘கஞ்சாவை ஒழிக்க வேண்டும். கஞ்சா வியாபாரிகளைத் திருத்த வேண்டுமென்றால், போதைப்பொருள் விற்பனை தடுப்புச் சட்டத்தின் கீழ் (NDPS Act) சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை முடக்குவதுதான் தீர்வு. இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்துக்குப் போனாலும் வருமானம் வந்ததற்கான சரியான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்’’ என்றார்.

ஆந்திராவில் கஞ்சா விவசாயம்!

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும், கேரளப் பகுதிகளிலும் காலம் காலமாக கஞ்சா உற்பத்தி செய்யப்பட்டுவந்தது. அதன் மூலம் சம்பாதித்த பலர் இன்று தொழிலதிபர்களாகவும், அரசியல் கட்சிப் பிரமுகர்களாகவும் அப்பகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆந்திராவில் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களிலும் விவசாய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து கஞ்சா விளைவிக்கிறார்கள். தற்போது ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கும் கஞ்சாவைக் கடத்தி, அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism