Published:Updated:

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

கால்நடை வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
கால்நடை வளர்ப்பு

கிராமப்புற மக்களின் பொருளாதாரத் தேவையில் பெரும் பங்கு வகிக்கும் கால்நடை வளர்ப்பில் அதிகம் கோலோச்சுவது, பெண்கள்தான்

‘நான்கு மாடுகள் இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்துக்கொள்ளும்’ என்று கிராமங்களில் கூறப்படுவது முற்றிலும் உண்மை. மாடு மட்டுமல்ல... தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர வருமானம் கிடைக்கும் வகையில் திட்டமிட்டு சில கால்நடை வளர்ப்பை மேற்கொண்டால், ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் ஈட்டலாம். இறைச்சி, பால், முட்டை, சாணம், சிறுநீர், தோல் என கால்நடைகளில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருள்களுக்குமே சிறப்பான சந்தை வாய்ப்புகள் உள்ளன. அவசரத் தேவைக்கும் கால்நடைகளை விற்று உடனடியாகப் பணமாக்கலாம்.

கிராமப்புற மக்களின் பொருளாதாரத் தேவையில் பெரும் பங்கு வகிக்கும் கால்நடை வளர்ப்பில் அதிகம் கோலோச்சுவது, பெண்கள்தான். இதெல்லாம் கிராமப்புற மக்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலை மாறி, இப்போது நகரப் பகுதிகளில் மொட்டை மாடியிலும் பலர் கோழி வளர்ப்பை மேற்கொள்கின்றனர். குறைந்த இடப்பரப்பிலேயே முயல், காடை வளர்ப்பை மேற்கொள்ளலாம். குறிப்பாக, பெண்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து கால்நடை வளர்ப்பை மேற் கொள்ளலாம். மதிப்புக்கூட்டல் முறையில் வருமானம் ஈட்டவும் தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

நமது வசிப்பிடத்துக்கு உகந்த கால்நடை வளர்ப்பைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். தொழில் ரீதியாகச் செல்லும்போது முறையான பயிற்சி அவசியம். இதற்கான பயிற்சிகள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள், கால்நடை பயிற்சி மையங்களில் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட கால்நடை வளர்ப்பில் வெற்றி பெற்றவர்களின் பண்ணைக்கு நேரில் சென்று சாதக, பாதக அனுபவங்களைக் கேட்டறிய வேண்டும். வெற்றி அனுபவங்களைவிடவும், அவர்களுக்குக் கிடைத்த தோல்விகள், படிப்பினைகளைக் கேட்டறியலாம்.

பொதுவாக எந்தக் கால்நடை வளர்ப்பானாலும் 10 சதவிகித இழப்புகளுக்கு மேல் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்தாலே, இந்தத் தொழிலை லாபகரமாக நடத்தலாம். இதுபோன்ற அடிப்படையான, அவசியமான தகவல்களை, கால்நடை வளர்ப்பில் அனுபவமுள்ள பெண்கள், புதிய தொழில்முனைவோர்களுக்கு இந்தத் தொகுப்பில் வழிகாட்டுகின்றனர்.

வாருங்கள், வெற்றிக்கான முதல் படியை எடுத்து வைப்போம்!

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

கோழி வளர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி, நாட்டுக்கோழி வளர்ப்பில் 13 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அதில் நிலையான விற்பனைக்கு வழிகாட்டுகிறார்.

இதெல்லாம் அவசியம்!

மேய்ச்சல் முறையில் வளரும் நாட்டுக்கோழிகளுக்குச் சிறப்பான விற்பனை வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்குப் போதிய மேய்ச்சல் நிலமும், கோழிகள் இரவில் தங்குவதற்குக் காற்றோட்ட வசதியுடன் கூடாரமும் தேவை.

10 பெட்டைக்கு ஒரு சேவல்!

சிறுவிடை, பெருவிடை, கடக்நாத், வான்கோழி ரகங்களுக்கு விற்பனை வாய்ப்புகள் நன்றாக இருக்கின்றன. முதன்முறையாக கோழி வளர்ப்பில் இறங்குபவர்கள் மூன்று மாதக் குஞ்சுகளை வாங்கி வளர்க்கலாம். முறையான அனுபவம் கிடைத்த பிறகு, தேவைக்கேற்ப ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதக் குஞ்சுகளாகக்கூட வாங்கி வளர்க்கலாம். கொட்டகைக்குள் 5-10 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவலையும், வெளி மேய்ச்சலில் 10 பெட்டைகளுக்கு ஒரு சேவலையும் விட வேண்டும்.

 ஜெகதீஸ்வரி
ஜெகதீஸ்வரி

ஒன்றரை வயதில் விற்பனை!

ஆறாவது மாதத்தில் பெட்டைக்கோழிகள் முட்டையிடத் தொடங்கி, அடுத்த 15 நாள்களுக்குள் 12-15 முட்டைகள் இடும். ஒரு மாதத்துக்குப் பிறகு, மறுபடியும் 15 நாள்களுக்கு முட்டையிடும். நாட்டுக்கோழிகளுக்கு அடைகாக்கும் திறன் இருந் தாலும், விற்பனை ரீதியாகச் செல்லும்போது, தரமான முட்டைகளை இன்குபேட்டர் இயந்திரத்தில் வைத்து குஞ்சுப் பொரிக்க வைப்பதே சிறந்தது. இந்த இயந்திரத்தில் முட்டைகளை 21 நாள்கள் வைத்திருந்து, குஞ்சு பொரிக்கச் செய்யலாம். பிறகு, செயற்கையாக வெப்பம் கொடுப்பதற்காக, அடை காப்பானில் (Brooder) 10 நாள்களுக்குக் குஞ்சுகளை வைத்துப் பராமரிக்க வேண்டும். 50 நாள்கள்வரை தனியறையில் வளர்த்த பின்னர், மேய்ச்சலுக்கு விடலாம். ஒன்றரை வயதானதும் தாய்க்கோழி மற்றும் சேவலை இறைச்சிக்கு விற்பனை செய்யலாம்.

தீவன மேலாண்மை!

அரிசி, கம்பு, கோதுமைத்தவிடு, மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய வகை அடர் தீவனங்களைப் பிரதான உணவாகக் கொடுக்கலாம். அகத்திக்கீரை, முருங்கைக்கீரை உட்பட பலவகையான கீரைகளையும், களைகளையும், காய்கறிகளையும் கொடுத்து, தீவன செலவுகளைக் குறைக்கலாம்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

நோய் மேலாண்மை!

மஞ்சள்தூள் கலந்த வெந்நீரை எல்லாக் கோழிகளுக்கும் கொடுத்த பிறகு, தினமும் மேய்ச்சலுக்கு விடலாம். இதனால், கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதுடன், சளி பாதிப்புகள் வருவதும் கட்டுப்படும். வெள்ளைக்கழிசல் பாதிப்பைத் தடுக்க, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆர்.டி.வி.கே தடுப்பூசியைக் கோழிகளுக்குப் போட வேண்டும். பராமரிப்பாளர்கள் வெளியிடங்களுக்குச் சென்று வந்ததும் கை கால்களைச் சுத்தம் செய்த பிறகே பண்ணைக்குள் நுழைய வேண்டும். குடற்புழு நீக்கத்துக்காக, மாதத்துக்கு இரண்டு முறை நீர்ப்பூசணியை நறுக்கி தீவனமாகக் கொடுக்கலாம். காலை மற்றும் மாலையில் தண்ணீர் மாற்ற வேண்டும். கொட்டகையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மேய்ச்சல் முறையுடன், மூலிகைகள் கலந்த உணவுகளையும் கொடுத்து, நோய் மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தால், தடுப்பூசி போடாமலேயேகூட கோழிகளை வளர்க்கலாம்.

விற்பனை வாய்ப்பு!

சிறுவிடை ரகத்தில் ஒருநாள் குஞ்சு 45 ரூபாய்க்கும், ஒரு மாதக் குஞ்சு 90 ரூபாய்க்கும், மூன்று மாதப் பருவத்தில் இருந்து உயிர் எடை கிலோ 400 ரூபாய் வரையும், முட்டை 12 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. இந்த விலையைவிட, பெரு விடை, கடக்நாத் கோழிகளின் விலை கூடும். முட்டைத் தேவைக்காக தாய்க்கோழிகள் வளர்ப்பில் மட்டும்கூட தனி கவனம் செலுத்தலாம்.

முதலீடு!

ஒருநாள் பருவத்தில் 100 சிறுவிடை கோழிக்குஞ்சுகளுடன், 10,000 ரூபாய் முதலீட்டில் பண்ணை அமைத்தால், ஆறு மாதங்களுக்குப் பிறகு, மாதம்தோறும் குறைந்தபட்சம் 10,000 ரூபாய்வரை வருமானம் ஈட்டலாம்.

 தேவகி
தேவகி

வளர்ச்சிக்கான உத்திகள்!

கால்நடைகளின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் உத்திகளை வழங்குகிறார், செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் கால்நடை வளர்ப்புத் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் க.தேவகி.

அசோலாவில் இருக்கும் புரதச்சத்து கால்நடைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இதை ஒவ்வொரு கோழிக்கும் 10 கிராம் அளவில் தீவனமாக தினமும் கொடுக்கலாம். கிழிந்த சணல் பைகளை நீரில் நனைத்து, அதன்மீது உடைந்த பானையை மூடிவைத்து தினமும் தண்ணீர் தெளித்துவந்தால் ஒரு வாரத்தில் கறையான்கள் உருவாகும். அது கோழிகளுக்குப் புரதச்சத்தைக் கொடுக்கும் சிறந்த தீவனம்.

பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்து, தயிருடன் கலந்து இரண்டு கிராம் அளவில் சிறுசிறு உருண்டைகளாகச் செய்துகொள்ள வேண்டும். இதனை, 15 நாள்களுக்கு ஒருமுறை, தொடர்ந்து மூன்று தினங்களுக்கு ஒவ்வொரு கோழிக்கும் ஓர் உருண்டை வீதம் கொடுத்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பனிக்காலத்தில், கொட்டகையைச் சுற்றி சாக்கு மூட்டையைக் கட்டிவிட்டு கதகதப்பான சூழலை உருவாக்குவதால், குஞ்சுகளின் இறப்பைத் தவிர்க்கலாம்.

பயிற்சி!

வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கால்நடை பயிற்சி மையங்களில் மாதம்தோறும் ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்புடன், கட்டண முறை பயிற்சி வகுப்பு களும் நடத்தப்படுகின்றன. சென்னை மாதவரத்திலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் மாதம்தோறும் ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

அசோலா வளர்ப்பு முறை!

நிழலான இடத்தில் இரண்டு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில் செங்கற்களைக் கொண்டு, செவ்வக வடிவத்தில் தொட்டி போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்குள், பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து, அதன்மீது தார்பாலின் ஷீட்டை விரிக்க வேண்டும். அதற்கு மேல், 12 முதல் 15 கிலோ செம்மண் அல்லது வண்டல் மண்ணைப் பரப்பிவிட வேண்டும். 8 முதல் 10 செ.மீ உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கிக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பசுஞ்சாணத்துடன், 25 கிராம் ராக் பாஸ்பேட் கலந்து தொட்டிக்குள் ஊற்றிவிட வேண்டும். அதில், அரை கிலோ அசோலாவைப் பரவலாகத் தூவ வேண்டும். 10 முதல் 15 நாள்களில் 10 மடங்குவரை அசோலா பெருகியிருக்கும். தினமும் குறைந்தபட்சம் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை அசோலாவை அறுவடை செய்யலாம். 500 கிராம் பசுஞ்சாணம், 10 கிராம் ராக் பாஸ்பேட்டை ஐந்து லிட்டர் நீரில் கரைந்து, ஆறு தினங்களுக்கு ஒரு முறை தொட்டிக்குள் கலந்துவிட்டால், அசோலாவின் வளர்ச்சி சீராக இருக்கும்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

வாத்து வளர்ப்பு

இல்லத்தரசியாக இருந்து கால்நடை வளர்ப்பில் இறங்கியவர், ஆவடியைச் சேர்ந்த மினி ராஜ்குமார். வாத்து வளர்ப்பில் ஆறு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர், இந்தத் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.

இதெல்லாம் அவசியம்!

கோழி வளர்ப்பு போலதான் வாத்து வளர்ப்பு முறையும். வீட்டில் சிறிய தோட்டம் இருந்தால், இறைச்சி மற்றும் முட்டைத் தேவைக்காக சில வாத்துகளை வளர்க்கலாம். பண்ணையில் வளர்ப்பதற்கு நாட்டு வாத்து, வெள்ளை வாத்து, காக்கி கேம்பல் ரகங்கள் உகந்தவை. தொழில் ரீதியாகச் செய்யும்பட்சத்தில், போதிய மேய்ச்சல் நிலமும், பண்ணையில் இடவசதியும் இருக்க வேண்டும். வாத்துகள் நீரிலும் இருக்க விரும்பும் என்பதால், சிறிய குளம் அல்லது குறைந்த ஆழம் கொண்ட நீர் தொட்டி அமைக்க வேண்டும். தொட்டியில் தினமும் நீரை மாற்ற வேண்டும்.

மினி ராஜ்குமார்.
மினி ராஜ்குமார்.

அடைக்கு உட்காராது!

அனுபவம் இல்லாதவர்கள் ஒருநாள் குஞ்சுகளை வாங்கி வளர்க்கலாம்.

10 பெண் வாத்துகளுக்கு, இரண்டு ஆண் வாத்துகள் இருந்தால் போதும். ஆறு மாதங்களில் பெட்டை வாத்து முட்டையிடும் பருவத்துக்கு வந்து, சராசரியாக இரண்டு நாள்களுக்கு ஒருமுறை முட்டையிடும். ஒரு மாதத்தில் சராசரியாக 12 முட்டைகள் கிடைக்கும். பெரும்பாலான வாத்துகள் அடைக்கு உட்காராது. எனவே, தரமான முட்டைகளை, இன்குபேட்டர் இயந்திரத்தில் 25 நாள்கள்வரை வைத்து குஞ்சு பொரிக்க வைக்கலாம். பிறகு, அடைகாப்பானில் 10 - 12 நாள்கள்வரை வைத்து செயற்கையாக வெப்பம் கொடுத்து, கவனமாகப் பராமரிக்க வேண்டும்.

ஒரு வருடத்தில் விற்பனை!

அடைகாப்பானில் இருந்து எடுத்த குஞ்சுகளை காட்டுப்பூனை, நாய், பாம்பு மற்றும் கீரிப்பிள்ளைகளின் தொந்தரவு ஏற்படாதவாறு காற்றோட்டமான தனி அறையில் வளர்த்து, மூன்றாவது மாதப் பருவத்தில் மேய்ச்சலில் விடலாம். பெட்டை வாத்து, 72 வாரங்கள்வரை (ஒன்றரை ஆண்டுகள்) முட்டையிடும். ஆனால், ஓராண்டு பருவத்தில் இருந்தே அதன் முட்டையிடும் திறன் குறையத் தொடங்கும். எனவே, ஒரு வருடப் பருவத்திலுள்ள பெட்டையுடன், அதே வயதுள்ள ஆண் வாத்தையும் விற்பனை செய்யலாம்.

தீவன மேலாண்மை!

நீர்நிலைகளின் அருகில் வாத்துகள் மேய்ந்தால், அங்கிருக்கும் புழுக்கள், பூச்சிகளை விரும்பிச் சாப்பிடும். இறைச்சிக்கழிவுகள் மற்றும் மார்க்கெட் காய்கறிக் கழிவுகளையும் சாப்பிடும். மார்க்கெட்டில் இருந்து கொண்டுவரும் மீன் கழிவுகளை வேகவைத்துக் கொடுக்கலாம். குருணை அரிசி, கோதுமை, கம்பு, மக்காச்சோளம் போன்ற தானிய வகைகளை தனித்தனியாகவோ, ஒன்றாகச் சேர்த்து அரைத்து பவுடராகவோ கொடுக்கலாம். கடலைப் பிண்ணாக்கையும், அரிசி தவிட்டையும் நீரில் கலந்து, புட்டுப் பதத்தில் கொடுத்தால் நன்றாக எடை கூடும். குஞ்சுப் பருவத்தில் இருந்தே, வாத்துகளுக்கான உணவுகளை நீரில் கலந்து கூழ் பதத்தில் கொடுப்பது சிறந்தது.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி
mtreasure

நோய் மேலாண்மை!

நல்ல உணவுகளைக் கொடுத்து மேய்ச்சல் முறையில் வளர்த்தால், வாத்துகளுக்கு நோய்கள் பெரும்பாலும் வராது. என்னுடைய ஒருங்கிணைந்த பண்ணையில் பல்வேறு கால்நடைகளையும் வளர்க்கிறேன். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, பிறந்ததில் இருந்து முறையே 7, 14, 28 நாள்களில் வாத்துகளுக்குத் தடுப்பூசி போடுகிறேன். இதனால், வெள்ளைக்கழிசல், வாத்துக் கொள்ளை நோய் உள்ளிட்ட எந்த பாதிப்பும் வருவதில்லை. குடற்புழு நீக்கத்துக்கு சுக்கு, வெல்லம் கலந்த தண்ணீரைக் கொடுக்கலாம்.

விற்பனை வாய்ப்பு!

ஆண் மற்றும் பெண் வாத்துகள் இரண்டுக்கும் ஒரே விலைதான். ஒரு வருட பருவத்தில், சராசரியாக ஒன்றரை கிலோ எடையில் இருக்கும் நாட்டு வாத்தை

200 ரூபாய்க்கும், வெள்ளை வாத்தை உயிர் எடைக்கு விற்பனை செய்யும்போது ஒரு கிலோ 200 ரூபாய் வீதமும் விற்பனை செய்யலாம். வாத்து முட்டை சராசரியாக 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பண்ணையிலேயே இறைச்சிக்கடை வைத்தும் வாத்துகளை விற்பனை செய்யலாம். வாத்து இறைச்சிக்கும் முட்டைக்கும், கேரள மாநிலத்தில் பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது.

முதலீடு!

முதன்முறையாக வாத்து வளர்ப்பில் இறங்குபவர்கள், 25 பெண் வாத்துகளை வாங்கி வளர்ப்பது சிறந்தது. முறையான அனுபவம் பெற்ற பிறகு, படிப்படியாக பண்ணையை விரிவுபடுத்தலாம். அந்தச் சூழலில், 10 x 10 அளவு கொண்ட இடத்தில், 100 வாத்துகளை வளர்க்க, 10,000 ரூபாய் முதலீடு தேவைப்படும். ஆறாவது மாதத்துக்குப் பிறகு 10,000 ரூபாய்வரை வருமானம் ஈட்டலாம்.

வளர்ச்சிக்கான உத்திகள்!

புரதச்சத்துக்காக, ஒவ்வொரு வாத்துக்கும் தினமும் 20 கிராம் வீதம் அசோலாவை தீவனமாகக் கொடுக்கலாம்.

தீவன செலவுகளைக் குறைப்பதற்காக, ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி சாதத்தை அதிகளவில் கொடுப்பதை (தீவனமாக) பலரும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதனால், வாத்துகளின் வளர்ச்சியும், அதனுடைய முட்டையின் குஞ்சுப் பொரிப்புத் திறனும் குறையும். எனவே, ரேஷன் அரிசியையும், ரேஷன் அரிசி சாதத்தையும் குறைவான அளவிலேயே தீவனமாகக் கொடுக்கலாம்.

வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க, வைட்டமின் டி காம்ப்ளக்ஸ் சத்து டானிக் மருத்தை நீரில் கலந்து, ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து மூன்று நாள்களுக்குக் கொடுக்கலாம்.

பயிற்சி!

அருகிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை பயிற்சி மையத்தில் மாதாந்திர ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

ஆடு வளர்ப்பு

ஆடு வளர்ப்பில் ஏழு ஆண்டுகள் அனுபவம் கொண்ட விழுப்புரம் மாவட்டம் வி.நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா, இங்கு வழிகாட்டுகிறார்.

இதெல்லாம் அவசியம்!

பசுந்தீவனங்களை நாமே வளர்த்துக்கொள்வதன் மூலம், தீவன செலவு களைப் பெருமளவில் குறைக்கலாம். இரவில் ஆடுகள் தங்குவதற்கு, எளிய முறையில் ஓலைக்கொட்டகைகூட அமைக்கலாம். இந்த இரண்டு தேவை களுக்கும் 10 சென்ட் நிலம் இருந்தால், 50 ஆடுகள்வரை தாராளமாக வளர்க்கலாம். பரண்மேல் அல்லது கொட்டில் முறை ஆடு வளர்ப்பு எளிமையானது என்றாலும், இந்த முறையில் ஆடுகள் வளரும் கொட்டகையை அமைக்க மட்டுமே சில லட்சங்கள்வரை செலவாகும். எனவே, முதன்முறையாக ஆடு வளர்ப்பில் இறங்குபவர்கள், பரண்மேல் வளர்ப்பை மேற்கொள்வதைத் தவிர்த்து, மேய்ச்சல் முறையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

தமிழ்நாட்டு ரகங்கள்!

செம்மறியாடு, வெள்ளாடு, கொடியாடு, சேலம் கறுப்பு போன்ற தமிழ்நாட்டு இனங்கள் மேய்ச்சல் முறைக்கு உகந்தவை. முதன்முறை ஆடு வளர்ப்புக்கு, இந்த ரகங்கள் ஏற்றவை. அதிக எடை கூடும் என்பதற்காக, கலப்பின ரகமான போயர் மற்றும் தலைச்சேரி இனங்கள், பரண்மேல் வளர்ப்பு முறையில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பத்து பெண் ஆடுகளுக்கு ஓர் ஆண் ஆடு போதும். ஆனால், ஒவ்வொரு முறையும் இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தும் ஆண் ஆட்டை மட்டும் மாற்ற வேண்டும். எந்த இனமாக இருந்தாலும், ஒரு வருடப் பருவத்தை அடைந்ததும், ஆண் மற்றும் பெண் ஆடுகளை இனச் சேர்க்கைக்கு அனுமதிக்கலாம்.

 சங்கீதா
சங்கீதா

ஒவ்வொரு முறையும் இரண்டு குட்டிகள்!

தாய் ஆடுகள் சராசரியாக ஏழு மாதங்களுக்கு ஒருமுறை குட்டிகளை ஈனும். முதல் ஈற்றில் ஒரு குட்டியையும், பிறகு நான்காண்டுகள் வரை ஒவ்வொரு பிரசவத்திலும் சராசரியாக இரண்டு குட்டிகளையும் ஈனும். நான்கு - ஐந்து ஆண்டுகள் பருவத்தை அடைந்ததும் பெண் ஆடுகளையும், ஏழு ஆண்டுகள் பருவத்தில் ஆண் ஆடுகளையும் கழித்துவிட வேண்டும். காலை 9 மணிக்கு மேல் சூரிய வெளிச்சம் வந்த பிறகே ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். மாலை 6 மணிக்குள் ஆடுகள் கொட்டகைக்குத் திரும்ப வேண்டும்.

தீவன மேலாண்மை!

காய்ந்த கடலைக்கொடி, உளுந்துக்கொடியுடன், மக்காச்சோளத்தை உடைத்தும், சோளத்தட்டையை அரைத்தும் உலர்த்தீவனமாகக் கொடுக்கலாம். காலை நேரத்தில் பனித்துளிகள் சூழ்ந்திருக்கும் நேரத்தில், பசுந்தீவனத்தில் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் இருக்கலாம். சூரிய வெளிச்சம் வந்த பிறகே பசுந்தீவனங்களைப் பறித்து, சில மணி நேரமாவது வெயிலில் உலர்த்திய பிறகே ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும். காய்கறிக் கழிவுகளையும் கொடுக்கலாம். ஆனால், உணவகக் கழிவுகளைக் கொடுக்கக் கூடாது. மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு அடர்த்தீவனம் அவசிய மில்லை. ஓர் ஆடு தினமும் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

நோய் மேலாண்மை!

மேய்ச்சல் முறையில் வளரும் ஆடுகளுக்குத் தடுப்பூசி தேவைப்படாது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக கோமாரி நோய் பரவலைத் தடுக்க, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கொடுக்கலாம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். சளி பிடித்தால், வேப்பிலை, துளசி, குப்பைமேனி இலைகளை தலா ஒரு கட்டு வீதம் தீவனத்துடன் கலந்து சில தினங்களுக்குக் கொடுக்கலாம். அம்மை வந்த ஆட்டை உடனே தனிமைப்படுத்தி குணப்படுத்த வேண்டும். கிழக்கு, மேற்கு பார்த்தவாறும், வடிகால் வசதியுடனும் கொட்டகையை அமைக்க வேண்டும். இரண்டு அறைகள் கொண்டதாகக் கொட்டகையை அமைத்து, அதில் சுழற்சி முறையில் ஆடுகளை அடைக்கலாம். கொட்டகையைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

விற்பனை வாய்ப்பு!

8 - 12 மாதப் பருவமுள்ள குட்டிகள் 15 - 20 கிலோ எடை இருக்கும். அந்தப் பருவத்திலுள்ள செம்மறியாடு, வெள்ளாடு, கொடியாடு, சேலம் கறுப்பு ஆகிய ரகங்கள், உயிர் எடைக்கு விற்பனை செய்யும்போது ஒரு கிலோ 300-350 ரூபாய் வீதமும் விற்பனையாகின்றன. வாய்ப்பிருந்தால் நாமும் நேரடியாக இறைச்சி விற்பனையிலும் ஈடுபடலாம்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

முதலீடு!

புதிதாக ஆடு வளர்ப்பவர்கள், ஒரு வருடப் பருவத்தில் இருக்கும் 10 தாய் ஆடுகள், ஓர் ஆண் ஆட்டுடன் முதல்கட்டமாக பண்ணையை அமைக்கலாம்.

20 x 10 அளவுள்ள கொட்டகை தேவைப்படும். எல்லா வகையிலும் ஒன்று முதல் ஒன்றே கால் லட்சம் ரூபாய்வரை செலவாகும். ஒரே வருடத்தில் முதலீட்டுத் தொகையை எடுத்துவிடலாம். ஆடுகளின் எண்ணிக்கை கூடக்கூட வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வளர்ச்சிக்கான உத்திகள்!

புரதச்சத்துக்காக, தினமும் அரை கிலோ அசோலாவை தீவனமாகக் கொடுக்கலாம்.

உவர்ப்புச் சுவை ஆடுகளுக்குப் பிடிக்கும். எனவே, கல் உப்பு கலந்த நீரை, ஆடுகளுக்கு வழங்கும் பெரும்பாலான உணவுகளின்மீதும் தெளித்துவிட்டு கொடுத்தால் அவை தீவனத்தை நன்கு சாப்பிடும்.

தினமும் மேய்ச்சல் முடிந்து திரும்பும் ஆடுகளுக்கு, பல வகையான தானியங்கள் மற்றும் தாது உப்புகள் கலந்த கலப்புத் தீவனத்தை, தலா 100 கிராம் அளவில் உப்புத் தண்ணீரில் சேர்த்து புட்டு மாவுப் பதத்தில் கலந்து கொடுப்பதால், சரிவிகித உணவு கிடைப்பதை உறுதி செய்யலாம். கலப்புத் தீவனத்தை, கோடைக்காலத்தில் தலா 200 கிராம் அளவில் கொடுக்கலாம்.

20 ஆடுகளுக்கு ஒரு தாது உப்புக் கட்டி வீதம், கொட்டகையில் கயிற்றில் கட்டித் தொங்கவிட வேண்டும். ஆடுகள் தங்களுக்குத் தேவையான சத்துகளை, இந்தத் தாது உப்புக்கட்டியை நக்கிக்கொள்வதன் வாயிலாக அல்லது கடித்துச் சாப்பிடுவதன் வாயிலாகப் பூர்த்தி செய்து கொள்ளும்.

பயிற்சி!

அருகிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை பயிற்சி மையத்தில் மாதாந்திர ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பிலும், தேவைப்பட்டால் கட்டணம் முறை பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளலாம்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

மாடு வளர்ப்பு

இல்லத்தரசியாக இருந்த சசிகலா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மாடுகளுடன் கால்நடை வளர்ப்பில் இறங்கியவர். தற்போது 17 மாடுகளுடன், இந்தத் தொழிலை வெற்றிகரமாகச் செய்துவருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வசிக்கும் சசிகலா பகிர்ந்த ஆலோசனைகள்...

இதெல்லாம் அவசியம்!

திறந்தவெளி கொட்டகை, ஓரளவுக்கு மேய்ச்சல் நிலம், பசுந்தீவனங்களை விளைவிக்க போதிய விளைநிலம், தண்ணீர் வசதி இருக்க வேண்டும். சொந்த நிலம் இல்லாதவர்கள், குத்தகை நிலத்திலும் பண்ணை அமைக்கலாம்.

எந்த இனம் உகந்தவை?

பால் மூலம் அதிக வருவாய் கிடைக்க வேண்டும் என்றால், ஜெர்சி, சிந்து கிராஸ், சாஹிவால் கிராஸ் உள்ளிட்ட கலப்பின மாடுகள் உகந்தவை. காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நம்மூர் நாட்டு மாடுகள் குறைந்த அளவே பால் கொடுக்கும். அதேசமயம், நம்மூர் நாட்டு மாடுகளின் பாலுக்குக் கூடுதல் விலை கிடைக்கும்.

 சசிகலா
சசிகலா

ஆண்டுக்கு ஒரு கன்று!

கலப்பின வகை மாடுகளை ஒன்றரை வயதிலும், நாட்டு மாடுகளை இரண்டரை வயதிலும் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்கலாம். கறவை மாடு ஆண்டுக்கு ஒருமுறை கன்று ஈனும். கலப்பின வகை மாடுகளை, நான்கு பிரசவத்துக்குப் பிறகு கழித்துவிடலாம். நாட்டு மாடுகள் பத்து பிரசவம் வரையிலும் ஆரோக்கியமாக இருக்கும். அதன் பிறகு அவற்றைக் கழித்து விடலாம். கன்றுகள் முதல் மாதத்தில் மூன்று லிட்டர், இரண்டாவது மாதத்தில் இரண்டு லிட்டர், மூன்றாவது மாதத்தில் ஒரு லிட்டர் வீதம் மட்டுமே தினமும் பால் குடிக்க வேண்டும். தாயிடம் கறந்த பாலை, இந்த அளவு விகிதத்தில் புட்டிப்பால் மூலமாகப் புகட்டலாம். அல்லது இரண்டு வேளையும் பால் கறந்த பிறகு, இறுதியாக கால் மணிநேரம் தாயிடம் பால் குடிக்க வைக்கலாம்.

வருமானத்தில் பாதி மாட்டுக்கு!

தினமும் காலாற நடந்து, புல், செடி, கொடிகளை மாடுகள் மேய வேண்டும். காலை 7-9 மணிக்கு இடைப்பட்ட சூரிய வெளிச்சம் மாடுகள்மீது விழுவது நல்லது. கொட்டகை வடிகால் வசதியுடன் இருப்பதுடன், பண்ணையில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். கொட்டகையில் சாணத்தை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். வெயில் காலத்தில் இருவேளையும், மற்ற காலங்களில் ஒருவேளையும் தவறாமல் மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும். சுற்றுவட்டாரத்தில் மேய்ச்சல் நிலம் இருந்தால், அங்கு மாடுகளை மேய விடலாம். இந்த வாய்ப்பு அமைந்தால், பண்ணை அமைக்க குறைந்த இடவசதியே போதுமானதுதான். வேலையாட்களைப் பயன்படுத்தாமல், எல்லா பராமரிப்பு வேலைகளையும் நாமே செய்யும் பட்சத்தில் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம். ஒரு மாடு சராசரியாக ஒரு நாளைக்கு எல்லா வகையிலும் 350 ரூபாய்வரை வருமானம் கொடுக்கும். அதில் பாதித்தொகையை அதன் தீவனத்துக்குச் செலவழிக்க வேண்டும்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

தீவன மேலாண்மை!

மாடுகளுக்கு அடர்த்தீவனம், உலர்த்தீவனம், பசுந்தீவனம்தான் முக்கியமானவை. சூப்பர் நேப்பியர், கோ வகை புற்கள், அகத்தி, சவுண்டல் போன்ற பசுந்தீவனங்களில் சிலவற்றையாவது பண்ணையில் விளைவித்துக் கொள்ள வேண்டும். பயறு வகை, புல் வகை, மர வகை பசுந்தீவனங்களைக் கலந்து கொடுப்பது மாடுகளின் வளர்ச்சிக்கு நல்லது. மக்காச்சோளம், பிண்ணாக்கு, குச்சித்தீவனம் உள்ளிட்ட அடர்தீவனங்களைச் சரியான விகிதத்தில் கொடுக்க வேண்டும். உலர்தீவனமான வைக்கோல் கொடுத்தால் தான் மாடு நன்கு அசைபோட்டு, உமிழ்நீர் நன்கு சுரந்து ஜீரண சக்தி அதிகரிக்கும். பழங்கள், காய்கறிகளையும் கொடுக்கலாம். தீவனத்துடன் தாது உப்புகளை 30 - 50 கிராம் அளவில் தினமும் ஒவ்வொரு மாட்டுக்கும் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.

நோய் மேலாண்மை!

மாடுகளுக்கு அதிக பாதிப்பை உண்டாக்க வாய்ப்புள்ள கோமாரி நோயைத் தடுக்க, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். வேப்பிலை, விரலி மஞ்சள் சேர்த்து அரைத்த கலவையை, கோடைக்காலத்தில் வாரத்துக்கு ஒருமுறை மாடுகளைத் தேய்த்துக் குளிப்பாட்டிவிடுவதால் அம்மை பாதிப்பு வருவதைத் தடுக்கலாம். வெயில் காலத்தில் வாரத்துக்கு ஒருமுறை, ஒவ்வொரு மாட்டுக்கும் தோல் நீக்கிய கற்றாழை மடல் ஒன்றைக் கொடுப்பதால் உடலில் குளிர்ச்சி ஏற்படும். வயிறு உப்புசம் ஏற்பட்டால், 30 - 50 கிராம் ஆப்ப சோடாவை (சமையல் சோடா) அரை லிட்டர் நீரில் கரைத்து, ஒருவேளைக்கு மட்டும் கொடுக்க வேண்டும். அதன் பின்னரும் வயிறு உப்புசம் சரியாகாவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வளர்ந்த மாடுகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்துகளை சுழற்சி முறையில் கொடுக்க வேண்டும்.

விற்பனை வாய்ப்பு!

கலப்பின மாடுகள் தினமும் 12 - 15 லிட்டர் பால் கொடுக்கும். இந்தப் பால் ஒரு லிட்டர் 28 - 30 ரூபாய்வரை கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாகிறது. இந்தப் பாலை நேரடியாக 40 ரூபாய்க்கு மக்களிடம் விற்பனை செய்யலாம். காங்கேயம் நாட்டு மாடுகள் தினசரி 4 லிட்டர் பால் கொடுக்கும். கூட்டுறவு சங்கத்தில் 33 - 35 ரூபாய்க்கு விற்பனையாகும் இந்தப் பாலை, லிட்டர் 70 - 100 ரூபாய்க்கு நகரப் பகுதிகளிலும், கிராமப்புறங்களில் சராசரியாக 50 ரூபாய்க்கும் மக்களிடம் நேரடி யாக விற்பனை செய்யலாம்.

முதலீடு!

முதன்முறையாக மாடு வளர்ப்பில் இறங்குபவர்கள், இரண்டு கறவை மாடுகளுடன் பண்ணை அமைக்கலாம். பிறகு, படிப்படியாக மாடுகளின் எண்ணிக்கையைக் கூட்டலாம். தினசரி 12 லிட்டர் பால் தரும் கலப்பின ரகத்தைச் சேர்ந்த கறவை மாடு வாங்க, சராசரியாக 50,000 ரூபாய்வரை செலவாகும். இரண்டு மாடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும், பழைய மரச்சாமான்கள் கொண்டு எளிய முறையில் கொட்டகை அமைக்க 25,000 ரூபாயும் தேவைப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் 10 மாடுகளை வளர்க்கலாம்.

வளர்ச்சிக்கான உத்திகள்!

புரதச்சத்துக்காக, தினமும் தலா ஒன்றரை கிலோ அசோலாவை தீவனமாகக் கொடுக்கலாம்.

செரிமானக் கோளாறுகள் ஏற்படக்கூடும் என்ப தால், மாடுகளுக்குச் சமைத்த உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

கொட்டகையில் தேவைக்கேற்ப தாது உப்புக் கட்டிகளைக் கயிற்றில் கட்டித் தொங்கவிட வேண்டும். மாடுகள் தங்களுக்குத் தேவையான சத்துகளை, இந்தத் தாது உப்புக்கட்டியை நக்கிக் கொள்வதன் வாயிலாக அல்லது கடித்துச் சாப்பிடுவதன் வாயிலாகப் பூர்த்தி செய்து கொள்ளும்.

பயிற்சி!

அருகிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை பயிற்சி மையத்தில் மாதாந்திர ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பிலும், தேவைப்பட்டால் கட்டண முறை பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ளலாம்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

முயல் வளர்ப்பு

சென்னையைச் சேர்ந்த சண்முகப்ரியா, இல்லத்தரசியாக இருந்து முயல் வளர்ப்பில் இறங்கியவர். மொட்டைமாடியில் மூன்று ஆண்டுகளாக முயல் வளர்ப்பை மேற் கொள்பவர் இங்கு வழிகாட்டுகிறார்.

இதெல்லாம் அவசியம்!

முயல் வளர்ப்புக்குத் தனி அறையும், கூண்டுகளும் தேவை. பண்ணையில் அதிக வெப்பநிலை இருக்கக் கூடாது என்பதால், ஆஸ்பெஸ்டாஸ் கூரையை அமைக்கக் கூடாது.

ஏற்ற ரகங்கள்!

பெரும்பாலும் இறைச்சித் தேவைக்கும், குறைவான அளவில் அழகுக்காகவும் முயல்கள் வளர்க்கப்படுகின்றன. நியூசிலாந்து வொயிட், சோவியத் சின்சில்லா, சோவியத் வைல்டு உள்ளிட்ட சில ரகங்கள் வளர்ப்புக்கு உகந்தவை.

 சண்முகப்ரியா
சண்முகப்ரியா

ஒவ்வொரு முறையும் 5 குட்டிகள்!

ஏழு பெண், மூன்று ஆண் முயல்கள் கொண்டவை ஒரு யூனிட். முதன்முறையாக முயல் வளர்ப்பில் இறங்கும்போது, மூன்று மாதப் பருவமுள்ள முயல்களை வாங்கி வளர்க்கலாம். பெண் முயல் ஆறாவது மாதத்திலும், ஆண் முயல் எட்டாவது மாதத்திலும் பருவத்துக்கு வரும். ஒவ்வொரு முறையும் தாய் முயல் 5 - 10 குட்டிகள் வரை ஈனும். எல்லாக் குட்டிகளும் தாயிடம் சரியாக பால் குடிக்கிறதா என்பதைக் கவனித்து, கடைசியாகப் பிறக்கும் சில குட்டிகளின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தால் குட்டிகளின் இறப்பைத் தவிர்க்கலாம். பிறந்து 12 - 15 நாள்களுக்குப் பிறகுதான் குட்டி முயல் கண் திறக்கும். பிறந்ததில் இருந்து

35 நாள்கள்வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டியை 7 - 10 நாள் களுக்குத் தனிமைப்படுத்தி, சரியாக உணவு சாப்பிடுகிறதா என்பதை கவனித்து, வளர்ப்புத் தேவைக்கு விற்பனை செய்யலாம் அல்லது சில மாதங்கள்வரை வளர்த்து இறைச்சிக்காக விற்கலாம்.

கோடைக்காலத்தில் கூடுதல் கவனம்!

45 - 120-ம் நாள் பருவத்திலுள்ள முயல்களை, கூண்டுக்கு நான்கு வீதம் ஒன்றாகவே வளர்க்கலாம். அதன் பிறகு, ஆண் மற்றும் பெண் முயல்களைத் தனித்தனி கூண்டில் வளர்க்க ஆரம்பித்து, இனச்சேர்க்கை நேரத்தில் மட்டும் இணை சேர்க்க வேண்டும். குட்டியை ஈன்ற 45-வது நாளில் அடுத்த இனச்சேர்க்கைக்குத் தாய் முயல் தயாராகிவிடும். முயல்கள் 10 - 12 ஆண்டுகள்வரை உயிர் வாழும். ஆனால், விற்பனை ரீதியாக வளர்க்கும்போது, மூன்று ஆண்டுகளானதும் ஆண் முயலையும், ஐந்து - ஆறு ஆண்டுகளானதும் பெண் முயலையும் கழித்துவிடுவது நல்லது. வழக்கத்தைவிட கோடைக்காலத்தில் கூடுதல் கவனம் கொடுத்துப் பராமரிக்க வேண்டும்.

தினமும் இரண்டு மணிநேரம்!

நீளமான கூண்டில், 2 x 1.5 x 1.5 அடி அளவுள்ள தடுப்புகளைத் தேவைக்கு ஏற்ப அமைத்து, ஒவ்வொரு தடுப்பிலும் தலா ஒரு முயலை வளர்க்கலாம். கழிவுகளைச் சேகரிப்பதற்காக, தரையில் இருந்து ஓர் அடி இடைவெளிவிட்டு கூண்டைப் பொருத்த வேண்டும். கழிவு மேலாண்மை வசதிகளை முறையாகச் செய்து, அடுக்குமுறையில் மூன்று கூண்டுகளைப் பொருத்தலாம். ஆனால், ஒவ்வொரு கூண்டுக்கும் இடையில் ஓர் அடி இடைவெளி இருக்க வேண்டும். முறையான அனுபவத்துடன், முயல் வளர்ப்புக்கு தினமும் இரண்டு மணிநேரம் கவனம் கொடுத்தால் போதுமானது.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி
Venkata Keerthy Viswajith Thadimalla

தீவன மேலாண்மை!

மார்க்கெட்டில் இருந்து முட்டைகோஸ் தழை, காலிஃபிளவர் இலை, காய்கறி களைக் கொண்டுவந்து தீவனமாகக் கொடுப்பதால், செலவுகளைக் குறைக்கலாம். சேதாரமாகும் வாழையிலைகளையும் நறுக்கிக் கொடுக்கலாம். குச்சித்தீவனத்தையும் கொடுக்கலாம்.

நோய் மேலாண்மை!

சில முயல்களுக்கு, காதில் சொறி நோய் வர வாய்ப்புண்டு. சரியான நேரத்தில் கண்டறிந்து, கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த பாதிப்பை சரி செய்ய வேண்டும். குடற்புழு நீக்கத்துக்கு, மாதத்துக்கு ஒருமுறை எல்லா முயல் களுக்கும் சிறிதளவு வேப்பங்கொழுந்தினைக் கொடுத்தாலே போதுமானது. தடுப்பூசி எதுவும் தேவைப்படாது.

விற்பனை வாய்ப்பு!

சராசரியாக 45-ம் நாள் பருவமுள்ள முயல்களை, வளர்ப்புக்கு விற்பனை செய்யலாம். அந்தப் பருவத்திலுள்ள `நியூசிலாந்து வொயிட்', `சின்சில்லா' வகை குட்டி முயல்கள் 300 ரூபாய்க்கும், `இங்கிலீஷ் ஸ்பாட்' (English spot), `அங்கோரா'

(Angora) இனங்கள் 800 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. நான்கு மாதப் பருவத்தில், நியூசிலாந்து வொயிட், சின்சில்லா வகை முயல்களை உயிர் எடைக்கு விற்பனை செய்யும்போது ஒரு கிலோ 450 ரூபாய் வீதம் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். முயல் வளர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் விற்பனை வாய்ப்பை அதிகப்படுத்தலாம்.

முதலீடு!

10 x 10 அளவு கொண்ட அறையே இரண்டு யூனிட் அமைக்கப் போதுமானது. முதன்முறையாக முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரு யூனிட் அமைக்கலாம். இதற்கு 25,000 ரூபாய்வரை செலவாகும். முறையான அனுபவத்துடன் படிப்படியாக பண்ணையை விரிவுபடுத்தலாம்.

வளர்ச்சிக்கான உத்திகள்!

புரதச்சத்துக்காக, ஒவ்வொரு முயலுக்கும் 100 கிராம் அசோலாவைத் தீவனமாகக் கொடுக்கலாம்.

முயல்களை அதிகாலை அல்லது மாலை வேளையில் இனச்சேர்க்கைக்கு விடுவதே சிறந்தது. அந்த நேரத்தில், பருவத்துக்கு வந்த பெண் முயலை, ஆண் முயலின் கூண்டுக்குள் விட வேண்டும்.

காய்கறிக் கழிவுகளைக் கொடுப்பதாக இருந்தால், அவற்றை நீரில் வேக வைத்து, நீரை வடிகட்டி ஆற வைத்த பிறகு கொடுப்பதே சிறந்தது. முயல் மட்டுமன்றி எல்லா கால்நடைகளுக்கும் இப்படிச் செய்யலாம். இதனால், நுண்ணுயிரிகளின் தாக்கத்தால் ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.

பயிற்சி!

அருகிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை பயிற்சி மையத்தில் மாதாந்திர ஒருநாள் இலவசப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

பன்றி வளர்ப்பு

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுஜாதா, முறையான பயிற்சியுடன், கணவருக்குப் பக்கபலமாக பன்றி வளர்ப்பில் இறங்கியவர். இந்தத் தொழிலில் நான்கு ஆண்டுகள் அனுபவம் கொண்டவர், தனியாளாகப் பண்ணையை நிர்வகிப்பதுடன் மாதம்தோறும் 50 பன்றிகளை விற்பனை செய்து சிறப்பான வருமானம் ஈட்டுகிறார். பன்றி வளர்ப்பு குறித்த அனுபவங்களை விரிவாகப் பகிர்கிறார்.

இதெல்லாம் அவசியம்!

செலவினங்களைக் குறைக்க ஓலைக்கொட்டகையில்கூட பன்றிகளை வளர்க்கலாம். மழை, வெயில் தொந்தரவு இல்லாத வகையில், திறந்தவெளியில் கொட்டகையை அமைக்க வேண்டும். அதில், நான்கடி உயரத்தில் தேவைக்கேற்ப தடுப்புகளை அமைக்கலாம். தண்ணீர் வசதி தேவை. தொட்டியில் நீர் வைக்காமல், டியூப் வழியே தண்ணீர் குடிப்பதற்குப் பன்றி களைப் பழக்கப்படுத்த வேண்டும். பன்றியின் சப்தமும், பண்ணையின் வாடையும் பலருக்கும் பிடிக்காது. இதனால், வசிப்பிடங்களில் இருந்து குறைந்த பட்சம் அரை கிலோமீட்டர் தொலைவில் பண்ணையை அமைக்கலாம்.

 சுஜாதா
சுஜாதா

வெண்பன்றிக்கே அதிக வரவேற்பு!

கறுப்புப்பன்றி, வெண்பன்றி இனங்களில், வெண்பன்றி வளர்ப்புக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கிறது. வெண்பன்றி இனத்தில், தாய் பன்றிகள் மூலம் தொடர்ச்சியாக குட்டிகளை உருவாக்கி, இறைச்சிக்காக வளர்ப்போருக்கு விற்பனை செய்யலாம். தவிர, குட்டியை வாங்கி, சில மாதங்கள் வளர்த்து, இறைச்சிக்காக விற்பனை செய்யும் வளர்ப்பு முறையையும் மேற்கொள்ளலாம். முன் அனுபவம் இல்லாதவர்கள், முதலில் குட்டியை வாங்கி இறைச்சித் தேவைக்கு வளர்த்து அனுபவம் பெறலாம். பத்து பெண் பன்றிகளுக்கு ஓர் ஆண் பன்றி போதுமானது. பிறந்த குட்டியானது 40 நாள்கள்வரை தாயிடம் வளரும். பிறகு, குட்டியைப் பிரித்து, 20 x 10 அளவுள்ள அறையில் 30 குட்டி களை ஒன்றரை மாதம் வளர்க்கலாம். சராசரியாக 90-ம் நாள் பருவத்தில் 25 - 30 கிலோ அளவுக்கு வளர்ந்திருக்கும் பன்றியை வளர்ப்புத் தேவைக்கு விற்பனை செய்யலாம்.

ஆண்டுக்கு 20 குட்டிகள்!

90-ம் நாள் பருவத்திலுள்ள பன்றிகளை, கொட்டகைக்கு தலா ஐந்து உருப்படிகள் வீதம் வளர்க்கலாம். அவை அடுத்த மூன்று மாதங்களில், 85 - 100 கிலோ எடை வந்ததும் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். வேறு பண்ணையில் பிறந்த தரமான ஆண் பன்றியை, பண்ணையில் தனியாக வளர்த்து, இனச்சேர்க்கை நேரத்தில் மட்டுமே பெண் பன்றியுடன் இணை சேர்க்க வேண்டும். 6 - 7-வது மாதப் பருவத்தில் இனச்சேர்க்கைக்குத் தயாராகும் பெண் பன்றி, அடுத்த மூன்றாவது மாதத்தில் முதன்முறையாக குட்டிகள் ஈனும். பின்னர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சராசரியாக பத்து குட்டிகள்வரை ஈனும். ஆறு முறை பிரசவித்த பெண் பன்றியைக் கழித்து விடலாம்.

இருவேளை குளியல்!

பன்றி வழுக்கி விழ வாய்ப்புள்ளதால், கொட்டகைக்குள் சொரசொரப்பான சிமென்ட் தரையை அமைக்க வேண்டும். வடிகால் வசதி இருப்பதுடன், பன்றியின் சிறுநீர், சாணத்தை அவ்வப்போது சுத்தம் செய்துவிட வேண்டும். தினமும் காலை, மாலையில் கொட்டகையைச் சுத்தம் செய்வது நல்லது. தினமும் காலை, மாலையில் பன்றியைக் குளிப்பாட்ட வேண்டும்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

தீவன மேலாண்மை!

சமைத்த, சமைக்காத உணவுக்கழிவுகள் எதைக் கொடுத்தாலும் பன்றிகள் சாப்பிடும். செலவுகளைக் குறைக்க பலரும் உணவகக் கழிவுகளைக் கொடுப்பார்கள். துர்நாற்றம் அதிகம் வரும் என்பதாலும், பிளாஸ்டிக் கழிவுகள் இருக்க வாய்ப்புள்ள தாலும், தாய் பன்றிக்கு வயிற்றில் கொழுப்பு (Belly Fat) தங்க வாய்ப்புள்ளதாலும், உணவகக் கழிவுகளைத் தவிர்க்கலாம். விலை குறைவான காய்கறிகளுடன், அரிசி சேர்த்து வேகவைத்துக் கொடுக்கலாம். தானிய வகைகளை அரைத்தும், கம்பெனி தீவனத்தையும் கொடுக்கலாம்.

நோய் மேலாண்மை!

பிறந்த இரண்டாவது நாளில், குட்டிப் பன்றிக்கு இருக்கும் ஆறு பற்களையும் நீக்கி, இரும்புச்சத்துக்கான ஊசியை அன்றே போட வேண்டும். இதை, முதன்முறை கால்நடை மருத்துவர் உதவியுடன் செய்துவிட்டு, பிறகு முறையான அனுபவத்துடன் நாமே செய்து கொள்ளலாம். பிறந்த 40-வது நாளில் தாயிடம் இருந்து குட்டியைப் பிரிக்கும்போது, தாய்க்கும் குட்டிக்கும் தடுப்பூசி (Swine Flu) போட வேண்டும். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் அனைத்து பன்றிகளுக்கும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசிகளுக்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையை அணுகலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கத்துக்கான மருந்து கொடுக்க வேண்டும். கோடைக்காலம், குளிர்காலத்தில் கூடுதல் கவனிப்பு தேவை.

விற்பனை வாய்ப்பு!

90-ம் நாள்களில் சராசரியாக 25 கிலோ எடை கொண்ட ஒரு குட்டியை வளர்த்து ஆளாக்க, 3,100 ரூபாய் செலவாகும். அந்தப் பன்றியை 4,500 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஆறு மாதப் பருவத்தில் 85 - 100 கிலோ எடை கொண்ட பன்றியை, உயிர் எடைக்கு விற்பனை செய்யும்போது ஒரு கிலோ 120-140 வீதம் விற்கலாம். பன்றி வளர்ப்புடன், இறைச்சிக் கடையும் நடத்தினால் கூடுதல் வருமானம் ஈட்டலாம். கால்நடை பயிற்சி மையத்திலும் விற்பனைத் தேவைக்கு உதவி கேட்கலாம்.

முதலீடு!

முன் அனுபவம் இல்லாதவர்கள், மூன்று மாதப் பருவத்திலுள்ள 10 பெண் பன்றிகளுடன் இறைச்சித் தேவைக்கான பன்றி வளர்ப்பை முதலில் மேற்கொள்ளலாம். இதற்கு முதலீடாக 80,000 ரூபாய் தேவைப்படும்.

வளர்ச்சிக்கான உத்திகள்!

புரதச்சத்துக்காக, ஒவ்வொரு பன்றிக்கும் தலா 1 - 2 கிலோ வீதம் அசோலாவைத் தீவன மாகக் கொடுக்கலாம்.

இனப்பெருக்கத்துக்காக வளர்க்கும் பன்றி களுக்கு, தினமும் 3 - 5 கிலோ கலப்புத் தீவனம் கொடுப்பது நல்லது.

கோடைக்காலங்களில் உஷ்ணத்தைத் தடுக்க, தினமும் சில முறையாவது பன்றிகளின்மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டும். தவிர, நீரில் நனைத்த சணல் கோணி அல்லது திரைச் சீலைகளைக் கொட்டகையைச் சுற்றிக் கட்டி விடலாம்.

பயிற்சி!

அருகிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை பயிற்சி மையத்தில் மாதாந்திர ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பிலும், தேவைப்பட்டால் கட்டண முறை பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளலாம்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

காடை வளர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பேரமனூர் கிராமத்தைச் சேர்ந்த விசாலாட்சி, கணவருடன் இணைந்து ஏழு ஆண்டுகளாக காடை வளர்ப்பை மேற்கொள்கிறார். இறைச்சிக்கடை நடத்தி நேரடி விற்பனையிலும் ஈடுபடுபவர், காடை வளர்ப்பு குறித்து வழிகாட்டுகிறார்.

இதெல்லாம் முக்கியம்!

காடை வளர்ப்புக்குக் குறைந்த இடவசதியே போதுமானது. 1 x 1 சதுர அடியில் நான்கு காடைகளும், 10 x 10 சதுர அடியில் 400 காடைகளும் வளர்க்கலாம். கிராமம் முதல் நகரப் பகுதிவரை எல்லாப் பகுதிகளிலும் காடை வளர்ப்பை மேற்கொள்ளலாம். சூரிய வெளிச்சம் பண்ணையில் நேரடியாக விழுவதைத் தடுக்க, கிழக்கு, மேற்கு திசை பார்த்த வாக்கில் பண்ணை இருக்க வேண்டும். காடை வளர்க்கும் அறையில், பூனை நுழையாதவாறு, காற்றோட்டமான கம்பி வலை ஜன்னல் அமைக்க வேண்டும்.

ஆண்டுக்கு 250 முட்டைகள்!

ஜப்பானிய வகை காடைகள்தாம் உணவுத் தேவைக்காக தமிழகத்தில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. முதன்முறையாக காடை வளர்ப்பில் இறங்கு பவர்கள், ஒருநாள் அல்லது ஒரு வாரக் குஞ்சுகளாக வாங்கி வளர்த்து அனுபவம் பெறலாம். நான்கு பெட்டைகளுக்கு ஓர் ஆண் காடை போதுமானது. எட்டு வாரப் பருவத்தில் பெட்டை முட்டையிடும் பருவத்துக்கு வரும். காடை ஆண்டுக்கு 250 முட்டைகள்வரை இடும்.

 விசாலாட்சி
விசாலாட்சி

ஒரே மாதத்தில் விற்பனை!

தரமான முட்டைகளை, இன்குபேட்டர் இயந்திரத்தில் 18 நாள்கள் வைத்திருந்து, குஞ்சு பொரிக்க வைக்கலாம். பிறகு, குஞ்சுகளை அடைகாப்பானில் சராசரியாக

14 நாள்களுக்கு வைத்திருந்து செயற்கையாக வெப்பம் கொடுத்து, கவனமாகப் பராமரிக்க வேண்டும். பிறகு, வழக்கமான வளர்ப்பு முறைக்குக் காடைகளை மாற்றலாம். 28 - 35-ம் நாளில் காடை விற்பனைக்குத் தயாராகிவிடும். குஞ்சுத் தேவைக்காகக் குறிப்பிட்ட அளவிலான பெட்டைக் காடைகளை வைத்துக்கொண்டு, மற்றவற்றை ஒரு மாதப் பருவத்தில் இறைச்சிக்கு விற்றுவிட வேண்டும். ஒரு வருட பருவத்தில் தாய்க்காடை மற்றும் இனச் சேர்க்கைக்குப் பயன்படுத்தும் ஆண் காடைகளைக் கழித்துவிட வேண்டும். மற்ற கால்நடைகளைப்போல எடை அளவுகளில் காடைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவது இல்லை.

இரவில் வெளிச்சம் தேவை!

காடையின் எச்சத்தால் குளிர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க, வெறும் நிலப்பரப்பில் காடைகளை வளர்க்கக் கூடாது. கொட்டகையில் இரண்டு இன்ச் உயரத்துக்கு நெல் உமியைப் பரப்பி, அதன்மீதுதான் காடைகளை வளர்க்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை உமியைக் கிளறிவிட வேண்டும். அறையில் வளர்க்கும் இந்த ஆழ்கூள முறைக்கு மாற்றாக, கூண்டு முறையிலும் காடைகளை வளர்க்கலாம். இருட்டில் ஒன்றன்மீது ஒன்று ஏறி இழப்பு ஏற்படுவதைத் தடுக்க, கொட்டகையில் இரவில் மின் வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும். காலை, மாலை தண்ணீர் மாற்ற வேண்டும்.

தீவன மேலாண்மை!

புரதச்சத்துக்காக, ஆறு வாரங்கள்வரை குஞ்சுகளுக்குக் குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். பிறகு, வளர்ந்த காடைகளுக்குத் தனித்தீவனமாக கம்பெனி தீவனம் அல்லது தானிய வகைகளை அரைத்துக் கொடுக்கலாம்.

நோய் மேலாண்மை!

காடைகளுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால், நோய் பாதிப்புகள் அதிகம் வராது. பண்ணையைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கழிசல் பாதிப்பு இருந்தால், காடைகள் தீவனம் அதிகம் எடுக்காமல் சோர்வாக இருக்கும். அதைக் கண்டறிந்து, கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

விற்பனை வாய்ப்பு!

ஒரு மாதப் பருவத்தில் 180 - 200 கிராம் எடையில் இருக்கும் காடைகளை, சராசரியாக 30 - 35 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு காடைக்கு ஐந்து ரூபாய் லாபம் கிடைக்கும். முறையான அனுபவத்துடன், வாரத்துக்கு 1,000 காடைகள்வரை விற்பனை செய்தால், சிறப்பான லாபம் ஈட்டலாம். ஒரு காடை முட்டை சராசரியாக மூன்று ரூபாய்க்கு விற்பனையாகிறது.

முதலீடு!

முதல் கட்டமாக 100 காடைக் குஞ்சுகளை வைத்து பண்ணையைத் தொடங்கு வதற்கு, எளிய முறையிலான கொட்டகை செலவுடன் 10,000 ரூபாய் தேவைப்படும்.

வளர்ச்சிக்கான உத்திகள்!

பிறந்த முதல் நாளில் இருந்து அடுத்த சில தினங்களுக்கு, குளுக்கோஸ் கலந்த நீரை காடைக் குஞ்சுகளுக்குக் கொடுக்கலாம். இதனால், உடல் இயக்கத்துக்கான ஆற்றல் அதிகரிக்கும்.

ஒருநாள் வயதுள்ள காடைக் குஞ்சு களைத் தண்ணீர் குடிக்கத் தூண்டு வதற்கு, தண்ணீர் தட்டில் கோழிக்குண்டு அல்லது கூழாங்கற்களைச் சுத்தம் செய்து நிரப்பி வைக்கலாம்.

பயிற்சி!

அருகிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை பயிற்சி மையத்தில் மாதாந்திர ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பிலும், கட்டண முறை பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளலாம்.

கால்நடை வளர்ப்பில் கை நிறைய சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
 மா.விமலாராணி
மா.விமலாராணி

மதிப்புக்கூட்டல்!

கால்நடைகளில் இருந்து மதிப்புக்கூட்டல் முறையில் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார், செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மதிப்புக்கூட்டல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மா.விமலாராணி.

கோழி - முட்டையிட்டு ஓய்ந்த கோழிகளில் ஊறுகாய், அதன் இறைச்சியில் மசாலாக்கள் சேர்த்து, பதப்படுத்தி கட்லெட்டுகள், இறகுகளிலிருந்து அலங்காரப் பொருள்கள், இறகுப் பந்து.

வாத்து - வாத்து முட்டையில் ஊறுகாய் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பவுடர், இறைச்சி பதப்படுத்துதல், இறகில் அலங்காரப் பொருள்கள்.

ஆடு - தோலில் பயன்பாட்டுப் பொருள்கள், பாலில் சீஸ், அழகு சாதனப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பொருள்கள், சாணத்தில் இயற்கை உரம்.

மாடு - பாலில் இருந்து தயிர், நெய், வெண்ணெய், பனீர், பாலாட்டைக்கட்டி, பால்கோவா, ஐஸ்க்ரீம், சாணத்தில் இருந்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மண்புழு உரம், பயோ கேஸ், சாம்பிராணி, ஊதுபத்தி, விபூதி, வரட்டி.

முயல் - இறைச்சியில் ஊறுகாய், பதப்படுத்திய இறைச்சி, ரோமங்களில் அலங்காரப் பொருள்கள்.

பன்றி - கொழுப்பைப் பிரித்தெடுத்து எண்ணெய், பதப்படுத்திய இறைச்சி, சாணத்தில் உரம்.

காடை - மருத்துவ குணம் கொண்ட ஜப்பானிய காடை முட்டையில் ஊறுகாய், இறகில் அலங்காரப் பொருள்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கால்நடை வளர்ப்பு குறித்த ஆலோசனைகளைப் பெற...

தொடர்புக்கு:

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத் தின் பயிற்சி ஏற்பாடுகள் துறை: 9940542371

சென்னையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்: 044 - 25551586

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மத்திய பண்ணை ஆராய்ச்சி நிலையம்: 0422 - 6611203