Published:Updated:

“பத்து எண்றதுக்குள்ள!” - போலீஸுக்கே சவால்விட்ட ‘லோடு’ வண்டி திருடன்...

பத்து எண்றதுக்குள்ள
பிரீமியம் ஸ்டோரி
பத்து எண்றதுக்குள்ள

தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட லோடு வாகனத்தை, மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த தங்கபாண்டியனிடம் அகஸ்டின் கைமாற்றியதும் தெரியவந்தது.

“பத்து எண்றதுக்குள்ள!” - போலீஸுக்கே சவால்விட்ட ‘லோடு’ வண்டி திருடன்...

தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட லோடு வாகனத்தை, மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த தங்கபாண்டியனிடம் அகஸ்டின் கைமாற்றியதும் தெரியவந்தது.

Published:Updated:
பத்து எண்றதுக்குள்ள
பிரீமியம் ஸ்டோரி
பத்து எண்றதுக்குள்ள

ஒருவன் மெக்கானிக்... சாவியே இல்லாமல் வண்டிகளை ஸ்டார்ட் செய்வதில் கில்லாடி. இன்னொருவன், எம்.டெக் முடித்து, ஐடி வேலையை விட்டுவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். இருவருக்குமே உழைத்துச் சம்பாதிப்பதில் ஆர்வமோ, நம்பிக்கையோ இல்லை. இருவரும் சேர்ந்தால் என்ன செய்வார்கள்? வேறென்ன... திருட்டுத் தொழில்தான். சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் லோடு வாகனங்களைத் திருடுவதுதான் இவர்களின் ஸ்டைல். இவர்களைத்தான் தற்போது போலீஸார் கைதுசெய்துள்ளனர்!

சென்னை அரும்பாக்கத்தில் குடியிருக்கும் நவீன்ராஜ் என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் இரவு தனது லோடு வாகனத்தை வீட்டின் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் வாகனத்தைக் காணவில்லை. பதறிப்போனவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, லோடு வாகனத்தை மர்ம நபர் ஒருவன் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. தொடர்ந்து பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களையும், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ததில் வாகனத் திருட்டுகளில் ஈடுபட்ட பழைய குற்றவாளி அகஸ்டின் ஈடன் இன்பராஜ்தான் வாகனத்தைத் திருடியது தெரியவந்தது.

அகஸ்டின்
அகஸ்டின்

தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட லோடு வாகனத்தை, மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த தங்கபாண்டியனிடம் அகஸ்டின் கைமாற்றியதும் தெரியவந்தது. செல்போன் சிக்னல் மூலம் அவர்களை போலீஸார் தேடியபோது, சென்னை மதுரவாயலில் லோடு வாகனம் ஒன்றைத் திருடிக்கொண்டிருக்கும்போதே கையும் களவுமாக இருவரும் சிக்கிக்கொண்டனர். அவர்களிடம் அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் நடத்திய விசாரணையில், கடந்த சில வாரங்களிலேயே அகஸ்டின் ஒன்பது லோடு வாகனங்கள், இரண்டு கார்கள் என 11 வாகனங்களைத் திருடியதை ஒப்புக்கொண்டான். அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.

தங்கபாண்டியன்
தங்கபாண்டியன்

இவர்களைப் பற்றி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சொன்ன தகவல்கள் அத்தனையும் ‘அடேங்கப்பா’ ரகம்...

``கைதுசெய்யப்பட்ட அகஸ்டின் மீது 31 திருட்டு வழக்குகள் உள்ளன. இவன் கன்னியாகுமரியில் மெக்கானிக்காக வேலை பார்த்திருக்கிறான். அதனால் எந்தவொரு வண்டியையுமே சாவியே இல்லாமல் வயர்களை இணைத்து ஸ்டார்ட் செய்வதில் கில்லாடி. தவிர, அவன் இடுப்பு அரைஞாண் கயிற்றில் நூற்றுக்கணக்கில் டூப்ளிகேட் சாவிகளை மாலைபோல அணிந்திருப்பான். இவற்றைவைத்து கன்டெய்னர் முதல் கார் வரை ஸ்டார்ட் செய்துவிடுகிறான். அவனிடம் விசாரித்தபோது, ‘சார், உங்க போலீஸ் ஜீப்பைக் காட்டுங்க சார்... நீங்க பத்து எண்றதுக்குள்ள சாவியே இல்லாம ஸ்டார்ட் செஞ்சு காட்டுறேன்...’ என்று சவால்விட்டான். ஆரம்பத்தில் ஒரு லோடு வாகனத்தைத் திருடி விற்றபோது சில லட்சங்கள் கிடைத்திருக்கின்றன. அதனால் மெக்கானிக் வேலையை உதறிவிட்டு, லோடு வாகனங்களைத் திருடுவதை முழுநேர வேலையாக்கிக்கொண்டிருக்கிறான்.

கையில் லட்சக்கணக்கில் பணம் புரண்டதும், அகஸ்டினின் ஃலைப் ஸ்டைலே மாறியிருக்கிறது. கோட், சூட், கார் என வலம்வந்தவன், திருடச் செல்லும் ஊர்களில் மூன்று அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்தான் தங்கியிருக்கிறான். உயர்ரக மதுபாட்டில்கள், ஹை கிளாஸ் அழகிகள் என காசைத் தண்ணீராக இறைத்திருக்கிறான். அவனது பேங்க் அக்கவுன்ட்டில் பெரிதாகப் பணம் இல்லை... கேட்டால், ‘அக்கவுன்ட்ல பணம் எதுக்கு சார்? அதான், ரோட்டோரம் ஏகப்பட்ட வண்டிங்க நிக்குதே... ஸ்டார்ட் பண்ணினா அடுத்த 24 மணி நேரத்துல கேஷ் கைக்கு வந்துடும்’ என்று கூலாகச் சொன்னான்” என்றவர், வண்டியை கைமாற்றிவிட்ட அவனின் கூட்டாளி தங்கபாண்டியன் பற்றியும் விவரித்தார்...

“திருட்டு வண்டியை விற்கும்போதுதான் மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டியனின் தொடர்பு அகஸ்டினுக்கு கிடைத்திருக்கிறது. எம்.டெக் படித்த தங்கபாண்டியன், ஐடி கம்பெனியில் பார்த்த வேலையை விட்டுவிட்டு வாகனங்களை விற்கும் புரோக்கர்களுடன் சுற்றிக்கொண்டிருந்தான். அந்தத் தொடர்பில் அகஸ்டின் திருடும் வாகனங்களை தங்கபாண்டியன் மூன்றாம் நபர்களுக்குக் கைமாற்றி, அட்வான்ஸ் மட்டுமே சில லட்சங்களை வாங்கிக்கொள்வான்... அப்படி லோடு வாகனங்களை வாங்குவோர் வண்டியின் ஆவணங்களைக் கேட்டால், ‘வண்டி ஃபைனான்ஸ் முடியப்போகுது. முடிஞ்சதும் டாக்குமென்ட்ஸ் வந்துடும்... கொடுத்துடுறேன். அப்புறமா மீதிப் பணத்தைக் கொடுத்தா போதும்’ என்று சொல்லிவிடுவான். அதோடு ஆள் எஸ்கேப் ஆகிவிடுவான். இப்படி திருட்டு வாகனங்களை வாங்கி விற்ற குற்றத்துக்காக தங்கபாண்டியன் மீது 12 வழக்குகள் உள்ளன.

“பத்து எண்றதுக்குள்ள!” - போலீஸுக்கே சவால்விட்ட ‘லோடு’ வண்டி திருடன்...

தங்கபாண்டியனிடம் ‘எம்.டெக் படித்துவிட்டு ஏன் இந்தத் திருட்டுத் தொழில் செய்கிறாய்?’ என்று கேட்டதற்கு, ‘மதுரையில ஒரு ஐடி கம்பெனியில வேலை பார்த்தேன். மாசம் ஃபுல்லா உழைச்சாக்கூட ஒரு லட்சத்துக்கு மேல கிடைக்கலை. ஆனா, ஒரு லோடு வண்டியை வித்தாலே ரெண்டு லட்சம் ரூபாய் கிடைக்குது. அப்புறம் எதுக்கு வேலைன்னு விட்டுட்டேன்... லோடு வண்டிங்க பெரும்பாலும் ஊருக்கு வெளியே ஆளில்லாத இடத்துலதான் நிக்கும். அதுவும் எங்களுக்கு வசதியாப் போயிடுச்சு’ என்று இன்னும் பல தொழில் ரகசியங்களையும் கக்கிவிட்டான். அதை நாங்கள் வெளியே சொன்னால், இவனைப் போன்ற பிற திருடர்களுக்கு வசதியாகப் போய்விடும் என்பதால் வேண்டாம்... ஏற்கெனவே பலமுறை இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் வந்து திருடுகிறார்கள்!” என்று சொல்லி முடித்தார் இன்ஸ்பெக்டர்!

ஏற்கெனவே திருடித் திருடி மாட்டிக்கொண்டு மீண்டும் அதையே செய்கிறார்கள் என்றால், சிறை இவர்களுக்கு என்னதான் கற்றுக்கொடுக்கிறது?