தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் கிடைக்கும்!

வாய்ப்புகள் ஆயிரம்
பிரீமியம் ஸ்டோரி
News
வாய்ப்புகள் ஆயிரம்

வாய்ப்புகள் ஆயிரம்

சிறு, குறு, நடுத்தர தொழில்களைப் பொறுத்தவரை ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது முதல் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்வது வரை நிதி சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்வது மிகச் சவாலான விஷயமே. தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகளில் பெறும் கடனுதவியானது அதிக வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கும் என்பதால் பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தமிழகத்தில் நலிவடைந்த நிலையிலேயே இருந்தன. இதை மாற்றும் விதமாக, அரசு பல புதிய செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் சென்னை மண்டல தொழில் வணிக இணை இயக்குநர் ராமச்சந்திரன்.

தலைமுறை தலைமுறையாக தொழில் செய்வோருக்கு நிதி திரட்டுதல் என்பது பெரிய பிரச்னையாக இருக்காது. ஆனால், புதிதாகத் தொழில் தொடங்குவோர் நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு பயந்து தொழிலைப் பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் நிலைதான் இருந்து வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் இன்று பெண்கள்தாம் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, தொழிலுக்கான உரிமம் பெறுவதில் இருந்து, கடனுதவி பெறுவதுவரை எல்லா செயல்களையுமே இணையதளம் மூலமே செயல்படுத்துவது போன்ற திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அதில், ‘புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)’, ‘வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)’ ஆகிய இரண்டு திட்டங்களும்தாம் இன்று பெரும்பாலான தொழில்முனைவோர்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கின்றன.

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)

உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்க விரும்பும் முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்குக் கடனுதவி வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட திட்டமே ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்’. இத்திட்டத்தின் மூலம் வங்கிகள் அல்லது மாநிலக் கடனுதவி நிறுவனங்கள் மூலம் பயனாளிகள் ஐந்து கோடி ரூபாய் வரை கடனுதவி பெற முடியும்.

வாய்ப்புகள் ஆயிரம்
வாய்ப்புகள் ஆயிரம்

தகுதிகள்

இத்திட்டத்தின்கீழ் நீங்கள் பயன்பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐ.ஐ.டி முடித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் எனில் 21 முதல் 35 வரையும் சிறப்புப்பிரிவினர் எனில் 45 வயது வரையும் பயனடைய முடியும்.

விண்ணப்பம்

http://bit.ly/thozhilkadan என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணைக்க வேண்டியவை

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மாற்றுச் சான்றிதழ் கல்விச்சான்றிதழ் (கல்லூரி சான்றிதழ் / டிப்ளோமா சான்றிதழ் / ஐ.ஐ.டி சான்றிதழ்) சாதிச் சான்றிதழ் சிறப்புச் சான்றிதழ் (மாற்றுத்திறனாளி, திருநங்கை / திருநம்பி / ராணுவ வீரர் சான்றிதழ்) வாடகை அல்லது சொந்த இடத்தில் தொழில் தொடங்குகிறீர்கள் எனில் அதற்கான ஆதாரங்கள் உற்பத்தி சார்ந்த நிறுவனம் எனில் உற்பத்தி இயந்திரங்களுக்கான விலைப் பட்டியல்.

கடனுதவி

உங்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலருக்கு அனுப்பிவைக்கப்படும். விண்ணப்பங்கள் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான தகவல் குறுஞ்செய்தியாக வரும். விண்ணப்பங்கள் சோதிக்கப்பட்டதும் மாவட்டத் தொழில் மையத்திலிருந்து அழைப்புக் கடிதம் வரும். குறிப்பிட்ட தேதியில் உங்கள் பகுதியில் உள்ள மாவட்டத் தொழில் மைய அலுவலர் சான்றிதழ்களின் அசல்களைச் சரிபார்த்து உங்கள் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் வழங்குவார்.

தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி

விண்ணப்பம் ஒப்புதல் ஆன பிறகு சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தில் உங்கள் தொழிலுக்குத் தேவையான பயிற்சிகளை அரசே இலவசமாகி வழங்கி சான்றிதழ் வழங்கும். அந்தச் சான்றிதழை உங்கள் பகுதியில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தில் கொடுத்தபின் உங்களுக்குக் கடன் வழங்க அனுமதி கிடைக்கும். இத்திட்டத்தின்படி பொதுப்பிரிவினருக்கான மூலதனப்பங்கு 10 விழுக்காடும், சிறப்புப் பிரிவினருக்கு 5 விழுக்காடும் நிர்ணயிக்கப்படுகிறது. 3 விழுக்காடு பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு பத்து லட்சம் ரூபாயும், சேவை, வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ஐந்து லட்சம் ரூபாயும் வங்கிக் கடன் அளித்து தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தத் தொடங்கப்பட்ட திட்டமே இது.

தகுதிகள்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். பொதுப்பிரிவினர் எனில் 18 முதல் முதல் 35 வரையும் சிறப்புப்பிரிவினர் எனில் 45 வயது வரையும் பயனடைய முடியும். ஆண்டு வருமானம் ரூபாய் ஐந்து லட்சத்துக்கு மிகாமல் இருப்பது அவசியம்.

விண்ணப்பம்

http://bit.ly/msmeonline என்ற இளையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணைக்க வேண்டியவை

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மாற்றுச் சான்றிதழ் கல்விச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் சிறப்புச் சான்றிதழ் (மாற்றுத்திறனாளி, திருநங்கை / திருநம்பி / ராணுவ வீரர் சான்றிதழ்).

கடனுதவி

சான்றிதழ்கள் மாவட்டத் தொழில் அலுவலரால் பரிசோதிக்கப்பட்டு, தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு கடனுதவி அளிக்கப்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு யார் வேண்டுமானாலும் கடனுதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.