Published:Updated:

லோக்கல் போஸ்ட்!

லோக்கல் போஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
லோக்கல் போஸ்ட்!

- தேன்மொழி

பயன்பாட்டுக்கு வருமா நேரு மார்க்கெட்?

காரைக்காலின் முக்கியமான அடையாளங் களுள் ஒன்று ‘நேரு மார்க்கெட்.’ அந்த மார்க்கெட்டை அதன் பழைமை மாறாமல் புதுப்பித்து, திறப்புவிழா நடத்தி விட்டனர். ஆனால், பல நாள்களாகியும் மார்க்கெட் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதை மையமாகவைத்து, போஸ்டர், வாட்ஸ்அப், முகநூல் ஆகியவற்றின் மூலமாக யுத்தமே நடத்திக்கொண்டிருக் கிறார்கள் காரைக்கால் மக்கள். பயன்பாடு இல்லாததால், மார்க்கெட் கட்டடங்கள் இருளில் மூழ்கிப் பாழடைந்து கிடக்கின்றன. வியாபாரிகளுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையேயான ‘பேரம்’ முடியாமல் இன்னும் இழுபறியாக இருப்பதால்தான் இந்தநிலை என்கிறார்கள்!

300 கிலோ எடை குறைந்த காந்திமதி!

நெல்லையின் அடையாளங்களுள் ஒன்று நெல்லையப்பர் கோயிலின் காந்திமதி யானை. காந்திமதிக்கு தற்போது 51 வயது. கடந்த ஆண்டு புத்துணர்வு முகாமுக்கு காந்திமதியை அழைத்துச் சென்றபோது 4,450 கிலோ எடையில் இருந்திருக்கிறது காந்திமதி. அதைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், “காந்திமதியின் உடல் எடையை 4,000 கிலோவுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளாவிட்டால் முடக்குவாதம் ஏற்படும்” என எச்சரித்திருக்கிறார்கள்.

அதனால், காந்திமதியின் உணவில் வெல்லம், தேங்காய், பழம் ஆகியவற்றைக் குறைத்து கோரைப்புற்களை அதிகரித்ததோடு, தினமும் நடைப்பயிற்சிக்கும் அழைத்துச் செல்கிறார்கள். அதோடு, தினமும் காலையில் கோயிலிலிருந்து தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று தீர்த்தக்குடம் எடுக்கும் வேலையையும் காந்திமதி செய்துவருகிறது. உணவுக் கட்டுப்பாடு மற்றும் நடைப்பயிற்சியால், தற்போது 300 கிலோ எடை குறைந்திருக்கிறது காந்திமதிக்கு.

லோக்கல் போஸ்ட்!

கீதாஜீவனுக்கு எதிராக தம்பியே போட்டியா?

தூத்துக்குடி எம்.எல்.ஏ-வான கீதாஜீவன், தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இவர், தி.மு.க முன்னாள் அமைச்சர் என்.பெரியசாமியின் மகள். பாரம்பர்யமான தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த கீதாஜீவனின் தம்பி என்.பி.ராஜா, ‘நாம் இந்தியர் கட்சி’ என்று தனிக்கட்சி தொடங்கி நடத்திவருகிறார். அதோடு, ``தி.மு.க., அ.தி.மு.க இல்லாமல் பா.ஜ.க தலைமையில் மூன்றாவது அணி உருவாக வேண்டும். அப்படி உருவானால், ‘நாம் இந்தியர் கட்சி’ அந்தக் கூட்டணியில் இணையத் தயாராக இருக்கிறது. பா.ஜ.க எங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். இந்தநிலையில், ‘கீதா ஜீவனுக்கு எதிராக ராஜா போட்டியிடுவார்’ என்று ராஜாவின் ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள். இதனால், தம்பி ராஜா மீது கடும் கோபத்திலிருக்கிறார் கீதாஜீவன்.

‘‘உண்மையை வெளியே சொன்னா டிரான்ஸ்ஃபரா?’’

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி மின்வாரிய அலுவலகத்தில் மின்தடை பற்றி ஒருவர் புகார் தெரிவித்திருக்கிறார். அங்கு பணியிலிருந்த இளநிலை பொறியாளர் ரவி அலட்சியமாக பதில் சொல்ல, “மின்துறை அமைச்சர்கிட்ட சொன்னாத்தான் வேலை செய்வீங்களா?” என்று கேட்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த ரவி, ‘‘தங்கமணிகிட்டகூட புகார் சொல்லிக்கங்க. 18 பேர் வேலை செய்ய வேண்டிய இந்த ஆபீஸ்ல மூணு பேர் மட்டும்தான் இருக்கோம். இதையும் தங்கமணிகிட்ட சொல்லிடுங்க’’ என்று சொல்லியிருக் கிறார். இதை வீடியோ எடுத்த புகார்தாரர், சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார். இதையடுத்து, நீலகிரி மாவட்டம் குந்தா நீர்மின் நிலையத்துக்கு பொறியாளர் ரவி இடமாற்றம் செய்யப்பட்டார். ‘உண்மையை வெளியே சொன்னா டிரான்ஸ்ஃபரா?’ என்று கேட்கும் தொழிற்சங்கத்தினர் அமைச்சர்மீது கடும் கோபத்திலிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz