அரசியல்
அலசல்
Published:Updated:

லோக்கல் போஸ்ட்

காவலர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
காவலர்கள்

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

“காசு கொடுத்துட்டு நடங்க!”

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கொரோனா ஊரடங்குக்கு முன்னர் காலை, மாலை வேளைகளில் உள்ளூர் மக்கள் நடைப்பயிற்சி செய்ய இலவசமாக அனுமதிக்கப்பட்டுவந்தது. ஊரடங்கு நாள்களில் நடைப்பயிற்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் திடீரென்று தாவரவியல் பூங்காவில் நடைப்பயிற்சிக்கு ஒரு மாதத்துக்கு 200 ரூபாய், ஓராண்டுக்கு 2,400 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயித்துவிட்டார்கள். பூங்கா நிர்வாகமோ, ‘‘சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சுற்றுலாத் தலங்களை கட்டாயம் பராமரிக்கச் சொல்கிறது அரசு. நீலகிரியில் இரண்டாவது ஆண்டாக கோடைவிழா ரத்துசெய்யப்பட்டதில், அரசு தாவரவியல் பூங்காவில் மட்டுமே 15 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு செலவுக்கு நாங்கள் எங்கே போவோம்? அதை ஈடுகட்டவே இந்தக் கட்டண வசூல்’’ என்கிறது. சொந்த ஊரிலிருக்கும் பூங்காவில் நடைப்பயிற்சிக்கே கட்டணம் வசூலிக்கச் செய்த கொரோனாவை நொந்துகொள்கிறார்கள் ஊட்டி மக்கள்!

லோக்கல் போஸ்ட்

கண்டுகொள்ளாத இனிகோ... கடுகடுத்த நேரு!

திருச்சி கிழக்குத் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறிவருகிறது. அதிகாரிகளிடம் சொல்லியும் எந்தப் பலனும் இல்லாததால், அந்தத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கூற முயன்றுள்ளார்கள். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லையாம். அவரின் பி.ஏ-க்களிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், திருச்சி மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான அமைச்சர் கே.என்.நேருவிடம் புகார் கூறியுள்ளார்கள். மக்களிடம் குறைகளைக் கேட்டதோடு, ‘‘தொகுதியில இல்லாத ஒருத்தரு சீட்டை வாங்கிட வேண்டியது... அவரு ஜெயிச்ச பிறகு மக்களோட அடிப்படைப் பிரச்னையைத் தீர்க்க தொகுதிப் பக்கமே வரலேன்னா, மக்கள் யாரைய்யா திட்டுவாங்க? நம்மைத்தானே திட்டுவாங்க... இது நம்மளோட தலையெழுத்து” என இனிகோ இருதயராஜின் செயல்பாடுகளைப் பற்றி தி.மு.க நிர்வாகிகளிடம் கடுகடுத்த நேரு, பாதாளச் சாக்கடைப் பிரச்னையைச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

லோக்கல் போஸ்ட்

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய காவலர்கள்!

திருவாரூர் மாவட்டம், சன்னாநல்லூர் பகுதி வழியாகத் தன் பெற்றோருடன் சென்றுகொண்டிருந்த ஒன்பது வயது பெண் குழந்தையான சுகன்யா, நடு ரோட்டில் திடீரென வலிப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடியிருக்கிறார். தகவல் அறிந்த நன்னிலம் நெடுஞ்சாலை ரோந்துக் காவலர்களான செல்வராஜ், ராஜேந்திரன், புகழேந்தி, வாகன ஓட்டுநர் திருநாவுக்கரசு ஆகியோர் சுகன்யாவை உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கொஞ்சமும் தாமதிக்காமல் உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சுகன்யா உயிர் பிழைத்திருக்கிறார். இந்த விஷயத்தை அறிந்த திருவாரூர் எஸ்.பி சீனிவாசன், ரோந்துக் காவலர்களை நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், அன்பளிப்பும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். திருவாரூர் மக்கள் மத்தியில், ரோந்துக் காவலர்களுக்கும், எஸ்.பி-க்கும் பாராட்டுகள் குவிகின்றன.