பிரீமியம் ஸ்டோரி

“நாங்க எப்புடிலே கண்டுபிடிக்குறது!” நெல்லை ஆடு - போலீஸ் ஆட்டம்...

ஒரு வருடத்துக்கு முன்புவரை பைக்கில் சென்று, பெண்களின் கழுத்திலிருந்து நகைகளைப் பிடுங்கிச் செல்லும் கும்பல்கள் போலீஸாருக்குப் பெரும் சவாலாக இருந்தன. தற்போது அது குறைந்துவிட்டது. இப்போது ஆடுகளைக் குறிவைத்துத் திருடும் புது குரூப் பெருகிவிட்டது. நெல்லை மாவட்டத்தில், சாலையோரங்களில் மேயும் ஆடுகளை பைக்கில் டபுள்ஸ் சென்று அலேக்காகத் தூக்கிவிடுகிறார்கள். சில ‘வசதி’யான திருடர்கள் காரில் சென்று பக்காவாகக் காரியத்தை முடிக்கிறார்கள். திருடப்படும் ஆடுகள் அடுத்த சில மணி நேரத்திலேயே சந்தையில் தலை, கால், குடல், ஈரல், நுரையீரல், மூளை, சாப்ஸ், ரத்தம் என அக்குவேறு ஆணிவேராக வெட்டப்பட்டு விற்பனையாகிவிடுவதால், ஆடு திருடர்களைப் பிடிப்பது போலீஸுக்குப் பெரும் சவாலாக மாறிவிட்டது. ``ஏலே செல்போன் காணாமப் போச்சுன்னா, ஐ.எம்.இ.ஐ நெம்பரைவெச்சு கண்டுபிடிக்கலாம்லே... பைக் காணாமப் போச்சுன்னா சேசிஸ் நெம்பரைவெச்சு கண்டுபிடிக்கலாம்லே... நகையைக்கூட அடகுக் கடையில பிடிச்சிடலாம்லே... ஏலே, அடுத்த அரை மணி நேரத்துல ஆட்டை பிரியாணி ஆக்கிப்புட்டா நாங்க எப்புடிலே கண்டுபிடிக்குறது?” என்று புலம்புகிறார்கள் லோக்கல் போலீஸார்.

லோக்கல் போஸ்ட்

புதுசு புதுசா யோசிக்கிறாய்ங்க!

கொரோனா காலத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மோசடிக் கும்பல்கள், மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. நெல்லை மாநகரிலுள்ள சிலருக்கு சமீபத்தில் போன் செய்த ஒரு மோசடிக் கும்பல், ஆன்லைனில் பொருள்கள் வாங்கியதற்கான குலுக்கலில் பரிசாக ரூ.12,80,000 மதிப்புள்ள கார் விழுந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு புது காரின் படத்தையும் அனுப்பியிருக்கிறார்கள். மேலும், ``பரிசைப் பெற, காரின் மதிப்பில் ஒரு சதவிகிதமான ரூ.12,800 டி.டி.எஸ் கட்ட வேண்டும். அதைக் கட்டியதும் கார் வேண்டுமானால் காரைப் பெறலாம் அல்லது பணமாகவும் வங்கியில் கிரெடிட் செய்வோம்’’ என்று வலைவீசியிருக்கிறார்கள். சந்தேகமடைந்த சிலர் காவல்துறையில் புகார் செய்யவே முதற்கட்ட விசாரணையில், இந்த மோசடிக் கும்பல் வெளிமாநிலத்திலிருந்து செயல்படுவது தெரியவந்திருக்கிறது. ஆசையைத் தூண்டி பணத்தை மோசடி செய்யும் கும்பலிடம் உஷார் மக்களே உஷார்!

‘‘பாலிலேயே குளிப்பாட்டுவேன்!’’ - பாலியல் அதிகாரிக்கு பயங்கர ட்ரீட்மென்ட்...

வட மாவட்டத்தின் `ஆவின்’ தலைமைப் பொறுப்பிலிருந்த அந்த அதிகாரி, செம ஜொள்ளு பார்ட்டி. அதிகாரியின் குடும்பத்தினர் சொந்த ஊரிலிருக்க... இவர் மட்டும் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார். ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவருக்கு அவர் கொடுத்த பாலியல் டார்ச்சரும், அதற்கான எதிர்வினையும் தான் டிசம்பர் குளிரிலும் அங்கு ஹாட்டாக ஓடிக்கொண்டிருக் கிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்னர், தான் தங்கியிருந்த வீட்டுக்கு அலுவலக வேலை நிமித்தமாக அந்த இளம் பெண்ணை வரச் சொல்லியிருக்கிறார். அந்த இளம்பெண் இவரது வீட்டுக்குச் சென்றபோது, சரக்கு மற்றும் சைட் டிஷ் களை டேபிளில் பரப்பி வைத்திருந்திருக்கிறார் அதிகாரி.

மதுவை ஊற்றிக் கொடுக்கச் சொல்லி அந்த இளம் பெண்ணைக் கட்டாயப்படுத்தியதோடு, கையைப் பிடித்து இழுத்தாராம். ‘அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் பாலிலேயே குளிப்பாட்டுவேன்’ என்றும் வலைவிரித்தாராம். ஒருவழியாக அந்த அதிகாரியிடமிருந்து தப்பிவந்த இளம்பெண், குடும்பச் சூழ்நிலையைக் கருதி தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராகக் கொடுக்காமல் அமைதியாக இருந்துவிட்டார். இதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த அதிகாரி, தினமும் அந்த இளம்பெண்ணுக்குக் குடைச்சல் கொடுக்கவே... ஒருகட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமல் அந்தப் பெண் தனது உறவினர்கள் சிலருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். ஒருநாள் அதிகாரியின் வீட்டுக்கே சென்ற உறவினர்கள், தயாராக எடுத்துச் சென்றிருந்த போர்வையைத் தலையில் கவிழ்த்து, முகத்தைப் பெயர்த்தெடுத்துவிட்டார்களாம். ஒரு வாரம் கழித்து வீங்கிய முகத்துடன் அலுவலகத்துக்கு வந்த அதிகாரி, ‘வழுக்கி விழுந்துட்டேன்’ என்று சொன்னதுடன், சில நாள்களில் டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு தென் மாவட்டத்துக்குச் சென்றுவிட்டாராம்!

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

யானையோடு திகில் பயணம்... முதுமலை பாகன்கள் அலறல்!

நீலகிரி மாவட்டம், முதுமலையிலிருக்கும் தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவின் மிகப் பழைமையான வளர்ப்பு யானைகள் முகாம். இங்கு 20-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், வசதிகள்தான் எதுவுமே இல்லை என்று ‘பிளிறாத’ குறையாக அலறுகிறார்கள் பாகன்கள். ``ஊருக்குள்ள நுழையுற காட்டு யானைங்களைப் பிடிக்குறதுக்கும், கும்கி யானைங்களை முகாமிலிருந்து வேற இடங்களுக்கு கூட்டிட்டுப் போறதுக்கும் நவீன வசதிகளைக்கொண்ட பிரத்யேக வண்டி வேணும்; ஆனா, வனத்துறையில ஏற்பாடு பண்ண மாட்டேங்குறாங்க. லாரிகள்லதான் ஏத்திட்டுப் போக வேண்டியிருக்குது. காட்டுக்குள்ளேயும் வளைவான மலைப்பாதைங்கள்லயும் போறப்ப காட்டு யானைங்க முரண்டுபிடிச்சு திமிர்றதால லாரிங்க சாய்ஞ்சுடுமோ... எந்த நிமிஷம் யானை வண்டியை உடைச்சு எங்களைக் கொன்னுடுமோன்னு உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டுதான் போக வேண்டியிருக்கு... ஏதாச்சும் நல்ல வழி பண்ணுங்க” என்று அழாத குறையாகக் கேட்கிறார்கள் பாகன்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு