Published:Updated:

லோக்கல் போஸ்ட்!

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

அலட்சிய அரசு மருத்துவமனை... பரிதவிக்கும் அப்பாவி மக்கள்!

லோக்கல் போஸ்ட்!

அலட்சிய அரசு மருத்துவமனை... பரிதவிக்கும் அப்பாவி மக்கள்!

Published:Updated:
லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

நிற்காத ரயில்கள்... அதிர்ச்சியில் பாபநாசம் பயணிகள்!

லோக்கல் போஸ்ட்!

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று சென்றன. ஊரடங்குக்குப் பிறகு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டபோது மைசூர், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லாததால், உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். ‘‘பாபநாசத்தைச் சுற்றிப் பிரசித்திபெற்ற பல பரிகார ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இங்கு இந்த இரண்டு ரயில்களும் நின்று செல்லாததால், தஞ்சாவூர் அல்லது கும்பகோணத்துக்குச் சென்று ரயில் ஏறவோ, இறங்கவோ வேண்டியிருப்பதால் நேரம் மற்றும் பண விரயம் ஏற்படுகின்றன. பாபநாசம் ரயில் நிலையத்துக்கு மாதம் 12 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துவந்த நிலையில், போதிய வருமானம் இல்லை என்று கூறி இந்த இரண்டு ரயில்களை நிறுத்தாமல் செல்வது கண்டிக்கத்தக்கது’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இது தொடர்பாக போராட்டத்துக்கும் தயாராகிறார்கள் மக்கள்.

‘‘அப்புறம் வனத்துறை எதுக்கு?’’

லோக்கல் போஸ்ட்!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் அனுமந்தபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள ஒரு குட்டையில் முதலை ஒன்று சாவகாசமாக படுத்திருப்பதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஆனால், பல மணி நேரமாகியும் வனத்துறையினர் வராமல் போகவே... கிராம மக்களே ஒன்றுசேர்ந்து, வலையெல்லாம் தயார் செய்து ஏழு அடி நீளமும் 50 கிலோ எடையும்கொண்ட அந்த முதலையைப் பெரும் பாடுபட்டுப் பிடித்து, பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு அங்கு வந்த வனத்துறையினரிடம் முதலையை ஒப்படைத்த கிராம மக்கள், ‘‘இன்னும் ரெண்டு முதலைங்க வழிதவறி வந்து வேற குட்டைகள்ல தங்கியிருக்குது. அதையும் பிடிச்சுட்டுப் போங்க’’ என்று அச்சத்துடன் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வனத்துறையினரோ, “அந்த ரெண்டு முதலைங் களையும் பிடிக்கிறதுக்கு குட்டைக்குப் பக்கத்துலயே ரெண்டு பள்ளம் தோண்டிவைங்க. அந்தப் பள்ளத்துல முதலை வந்து விழுந்ததும், அதைப் பிடிச்சுவெச்சுட்டு எங்களுக்குத் தகவல் சொல்லுங்க. நாங்க வந்து எடுத்துட்டுப் போறோம்’’ என்று சொல்ல... ‘இதென்னடா வம்பா போச்சு’ என்று திகைத்துப் போயிருக்கிறார்கள் மக்கள்!

அலட்சிய அரசு மருத்துவமனை... பரிதவிக்கும் அப்பாவி மக்கள்!

மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் நீலகிரி மாவட்டத்தில், பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கிறார்கள். குந்தா சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நிலைமையும் இதுதான். அவர்கள் மஞ்சூரிலுள்ள அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். அரசு ஆணைப்படி, மூன்று மருத்துவர்கள் சுழற்சி முறையில் டூட்டியில் இருக்க வேண்டும். ஆனால், எமர்ஜென்சி முதல் மகப்பேறு வரை நர்ஸ்களைவைத்தே ஒப்பேற்றுகிறார்களாம். இது மட்டுமல்லாமல், எவ்வளவு தொலைவிலிருந்து நோயாளிகள் வந்தாலும், காலை 11 மணிக்குள் வர வேண்டுமாம். அதற்குப் பிறகு வரும் நோயாளிகளிடம், ‘இனி ட்ரீட்மென்ட் பார்க்க முடியாது. ஓ.பி குளோஸ் பண்ணியாச்சு’ என்று விரட்டிவிடுகிறார்கள். நோயாளிகளை அரசு மருத்துவமனை ஊழியர்கள் தரக்குறைவாக நடத்துவது மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘‘நான்தான் பாண்டிய மன்னன்!’’

கண்ணன்
கண்ணன்

நெல்லையில் டீக்கடை நடத்தும் கண்ணன் வித்தியாசமான மனிதர். பேன்ட், சர்ட், ஷு என டிப்டாப்பாக வலம்வரும் இவர், தனக்கு பூர்வ ஜென்ம நினைவு வந்ததாகச் சொல்லி மன்னர் காலத்துக் கதைகளையும் பேசிவருகிறார். ‘மனநிலை பாதிக்கப் பட்டிருப்பார்போல’ என ஊராரும் அவரிடம் பெரிதாகப் பேசுவதில்லை. இந்தநிலையில், ‘‘நான்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை ஆண்ட பாண்டியன் மன்னன். எனது காலத்தில்தான் ராஜராஜ சோழன், தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டினார். ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கொங்கராயக்குறிச்சியில் நான் கட்டிய சிவன் கோயில், ஆற்று மணலுக்குள் புதைந்துவிட்டது. அதைத் தோண்டி எடுக்கப் போகிறேன்’’ என்று கடந்த ஒரு மாதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

லோக்கல் போஸ்ட்!

வழக்கமான பேச்சுதானே என்று ஊர் மக்களும் கண்டுகொள்ளவில்லை. திடீரென்று சில நாள்களுக்கு முன்னர் நான்கு பேரை வேலைக்கு அமர்த்தி கொங்கராயக்குறிச்சி ஆற்றுக்கரையில் குழியைத் தோண்டினார். இதைப் பார்த்துப் பதறிப்போன கிராம உதவியாளர் ஆனந்த், இந்த விவகாரத்தை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணனிடம் சொல்ல, அவர் நேரில் வந்து கண்ணனை எச்சரித்து அனுப்பிவைத்தார். பாண்டிய மன்னர் இன்னும் என்னென்ன கூத்துகளை அரங்கேற்றக் காத்திருக்கிறாரோ?!

இருக்கு... ஆனா இல்லை!

லோக்கல் போஸ்ட்!

`புதிதாக அமையவிருக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக, நாகையிலுள்ள அரசு தலைமை மருத்துவமனை செயல்படும்’ என்று அரசு அறிவித்திருக்கிறது. ‘`மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக்குவது இருக்கட்டும்... முதலில் போதிய சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்யுங்கள்’’ என்று மக்கள் குரல் எழுப்புகிறார்கள். ‘‘ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறோம். இந்த மருத்துவமனையில் இதயத்தில் அடைப்பு இருக்கிறதா, இல்லையா என்று சோதனை செய்வதற்குத் தேவையான கருவிகள் இருக்கின்றன. ஆனால், அந்தக் கருவிகளைக் கையாண்டு பரிசோதனைகளைச் செய்வதற்குத் தகுந்த மருத்துவர்கள் இல்லை. இதனால், இதய நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்தே இத்தகைய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது’’ என்கிறார்கள். சுகாதாரத்துறை மனது வைக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism