Published:Updated:

லோக்கல் போஸ்ட்!

லோக்கல் போஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்!

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்!

- தேன்மொழி

Published:Updated:
லோக்கல் போஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்!

ஆவினின் பாராமுகம்!

லோக்கல் போஸ்ட்!

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகேயுள்ள மேற்கு நெய்யூர் இராமச்சந்திர நாடார் கூட்டுறவு சங்கத்துக்கு வரும் பாலை, நாகர்கோவில் ஆவின் நிறுவனம் கடந்த சில மாதங்களாகக் கொள்முதல் செய்வதில்லையாம். இதனால், உள்ளூரில் விற்பனையாகும் அளவுக்கு மட்டுமே உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்கிறது கூட்டுறவு சங்கம். இதனால், மாடு வளர்க்கும் பால் உற்பத்தியாளர்கள், மீதமுள்ள பாலை என்ன செய்வது எனத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி ஆவின் நிறுவனத்திடம் கேட்டால், ‘அந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் பால் எடுக்க, சில ஊர்களைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், டீசல் செலவு அதிகமாகிறது’ என்று சாக்குபோக்குச் சொல்கிறார்களாம். #பால் உற்பத்தியாளர்களை ஆவின் நிறுவனமே கைவிடலாமா?

ரேஷன் கடை ஊழியர்களைக் கதறவிடும் கரடி!

லோக்கல் போஸ்ட்!

அழையா விருந்தாளியாக நாள் தவறாமல் ரேஷன் கடைக்கு விசிட் அடிக்கும் ஒரு கரடியைச் சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிவருகிறார்கள். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள கிளன்டேல் தனியார்த் தேயிலைத் தோட்டக் குடியிருப்புப் பகுதியில், அரசின் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ரேஷன் கடைக்கு, நாள் தவறாமல் இரவில் வரும் ஒரு கரடி, கதவுகளை உடைத்து உள்ளே சென்று அரிசி, பருப்பு, சர்க்கரை‌ உள்ளிட்டவற்றை எடுத்து விடிய விடிய‌ நிதானமாக உண்டுவிட்டு காலையில் சென்றுவிடுகிறது. கடை ஊழியர்கள் ஒன்றுக்கு இரண்டாகப் பூட்டுகளைப் போட்டுப் பூட்டியும், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறது. அடுத்தகட்டமாக இரும்பு பேரல்கள், தகரத்திலான தடுப்புகள், பெரிய பாறாங்கற்களைக்கொண்டு அடைத்துப் பார்த்திருக்கிறார்கள். அவற்றையும் தகர்த்துக்கொண்டு சுலபமாக உள்ளே நுழைந்திருக்கிறது அந்தக் கரடி. சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்த பெரும்பாலான பழ மரங்களை வெட்டி மொட்டையடித்ததாலேயே கரடிகள் தங்களுக்கு உணவின்றி இதுபோல ஊருக்குள் நுழைவதாக மக்கள் சொல்கிறார்கள். #கரடியின் பக்கமும் நியாயம் இருக்கே!

லோக்கல் போஸ்ட்!
லோக்கல் போஸ்ட்!

கல்குவாரிக்கு அனுமதி... சாமி கும்பிட அனுமதியில்லையா?

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியிலிருக்கிறது பறம்புமலை. பல்வேறு இயற்கை வளங்கள்கொண்ட இந்த மலையின் பெரும்பகுதி தனியார் வசமுள்ளது. இந்தநிலையில், மலை உச்சியிலுள்ள முருகன் கோயிலில் ‘தைப்பூசம்’ விழாவைக் கொண்டாடும்விதமாக பொங்கல்வைக்க இயக்குநர் கெளதமனும், ‘பறம்புமலை பாதுகாப்பு இயக்கம்’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மலையேற முயன்றிருக்கிறார்கள். அப்போது, அவர்களைக் காவல்துறையினர் தடுத்து, ‘மலையேறக் கூடாது!’ என்று எதிர்ப்பு தெரிவிக்க, பரபரப்பானது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டார்கள். ‘‘பறம்புமலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு ஆளுமைகளும், அமைப்புகளும், மக்களும் குரல் கொடுத்துவருகிறார்கள். ஆனால், பறம்புமலையில் கல் குவாரி அமைக்க அனுமதி தந்திருக்கும் அரசு, சாமி கும்பிட அனுமதி மறுக்கிறது. இப்படித் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவது வேதனையளிக்கிறது’’ என்கிறார்கள் அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும். #வேலை வைத்துதான் அரசியலே நடக்கிறது... வேலனை வழிபடத் தடையா?

கடலையில் இருக்கும் ஆர்வம் பணியில் வேண்டாமா?

‘அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருக்கும் துறை’யின் உயர் அலுவலர் ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு பட்டாசு மாவட்டத்திலிருந்து தென்கடலோர மாவட்டம் ஒன்றுக்கு மாற்றப்பட்டார். பெரும்பாலான நாள்கள் தன் அலுவலகத்துக்கு வராமலேயே மட்டம் போட்டுவிடும் அந்த அதிகாரி, முறையான விடுப்பும் எடுப்பதில்லையாம். தப்பித் தவறி மாவட்டத் தலைநகரில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்கூட, அலுவலகப் பணி முடியும் நேரத்தில் மட்டும் தன் அறைக்கு வந்து தலைகாட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். அவ்வாறு வரும் நேரங்களில்கூட, அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தாமல், தனக்கு வேண்டப்பட்ட பெண்மணி ஒருவரிடம் செல்போன் வழியாகக் கடலை போடுவதிலேயே குறியாக இருக்கிறாராம் அந்த ஜெகஜ்ஜால அதிகாரி. தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில்கூட, தனது பணியில் ஆர்வமின்றி இருக்கும் அவரால், நொந்து நூலாகிப்போகிறார்களாம் அலுவலகப் பணியாளர்கள். #கடலையோடு சேர்த்துக் கொஞ்சம் கடமையையும் பார்க்கலாமே!

நீதிமன்றத்தை எப்போ சார் திறப்பீங்க?

லோக்கல் போஸ்ட்!

நாகப்பட்டினத்தில் 188 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமைவாய்ந்த கட்டடத்தில்தான் மாவட்ட நீதிமன்றம் இயங்கிவருகிறது. இங்கு போதுமான இடவசதி இல்லாததால், மகிளா நீதிமன்றம், சிறார் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் ஆகியவை ஆங்காங்கே வாடகைக் கட்டடங்களில் இயங்கிவருகின்றன. இந்தநிலையை மாற்ற, தி.மு.க ஆட்சியில் ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்குத் திட்டமிட்டார்கள். அதன் பிறகு அ.தி.மு.க ஆட்சியில் ரூ.30 கோடியில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்களாகின்றன. “வாடகைச் செலவுகளையும், மக்களின் வீண் அலைச்சலையும் குறைக்க, புதிய நீதிமன்றக் கட்டடம் விரைவில் திறக்கப்பட வேண்டியது அவசியம்’’ என்கிறார்கள் நீதித்துறை ஊழியர்கள். #ஆட்சியர்கள் உணர்வார்களா?