Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

Published:Updated:
லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

கால்நடைகளுக்கும் தடுப்பூசி தடுப்பாடு!

நீலகிரியில் மாடுகளுக்கு கோமாரி நோய்த் தாக்குதல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள். நீலகிரியில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால்நடைத்துறை சார்பில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால், மாடுகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு அதிகரித்துவருகிறது. நோய்த் தாக்கத்தால், கால்நடைகள் சில நாள்கள் சோர்ந்த நிலையில் இருந்து உயிரிழக்கின்றன. கோமாரி தடுப்பூசிக்கும் பற்றாக்குறை இருப்பதால், நீலகிரி கால்நடைத்துறை அதிகாரிகள் தவியாகத் தவிக்கிறார்கள். ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்பட்டுவரும் நிலையில், கால்நடைகளுக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு என்ற செய்தியால், நீலகிரி மக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

லோக்கல் போஸ்ட்

‘மேலிடத்துக்கும் பங்கு கொடுக்கணும்!’

டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆறு, பாசன வாய்க்கால்களைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதைக் கண்காணிப்பதற்காக ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். பணிகள் தரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக அரசு இதைச் செய்திருக்கிறது. ஆனால், லோக்கல் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலரும் தூர்வாரும் பணியை எடுத்திருக்கும் ஒப்பந்ததாரர்களிடம், ‘மேலிடத்துக்கும் பங்கு கொடுக்கணும்’ எனக் கூறி 35 சதவிகிதம் வரை கமிஷன் வாங்கிவிட்டார்களாம். அதேசமயம், பணிகளைப் பார்வையிடச் செல்லும் அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலமாக, தூர்வாருவதைக் கண்காணிக்கிறார்கள். ‘‘கமிஷனையும் வாங்கிக்கிட்டு வேலையையும் ஒழுங்கா பாருங்கன்னு சொன்னா எப்படி?’’ என்று ஒப்பந்ததாரர்கள் புலம்பிவருகிறார்கள்.

லோக்கல் போஸ்ட்

பாதுகாக்கப்பட்ட வலசைப் பாதை!

கோவை யானை வலசைப் பாதை பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்துவந்த நிலையில், 1,049.93 ஹெக்டேர் நிலத்தை வன நிலங்களாக அறிவித்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் நாகராஜன். கோவையில் மனித–விலங்கு எதிர்கொள்ளலைத் தடுக்க இதற்கு முன்பு பல்வேறு கமிட்டிகள் அமைத்தும் தீர்வு கிடைக்கவில்லை. தனது மேஜைக்கு வந்த ஆவணங்களைச் சரிபார்த்து ஒரே மாதத்தில் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் நாகராஜன். கோவையிலிருந்து தான் மாற்றப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இவர் பிறப்பித்த இந்த உத்தரவு, மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கல்லார் வலசைப் பாதைக்கு நடுவே உள்ள 50.79 ஹெக்டேர் நிலத்தை, தனியார் வனமாக அறிவித்திருக்கிறார். பாதுகாக்கப்பட்ட வனங்களுக்கான விதிமுறைகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். தமிழ்நாடு தனியார் வனநிலங்கள் பாதுகாப்பு சட்டப்படி, கல்லார் யானை வலசைப் பாதைதான் மாநிலத்திலேயே முதன்முறையாக அறிவிக்கப்பட்ட தனியார் வனம்!

லோக்கல் போஸ்ட்

பிரசன்னத்தில் வெடிக்குமா விவகாரங்கள்?

கன்னியாகுமரி மாவட்டத்தில், பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் ஜூன் 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அதையடுத்து அங்கு பிரசன்னம் பார்க்க கேரள ஜோதிடர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் பிரசன்னம் நடக்கவிருக்கிறது. ஏற்கெனவே பக்தர்கள் சங்கம் மூலம் 2018-ம் ஆண்டில் பிரசன்னம் பார்க்கப்பட்டபோது, கோயிலில் நடந்த சில தவறுகள் குறித்துக் கூறப்பட்டதால் பிரசன்னம் பார்க்கும் நிகழ்வை முழுமையாக முடிக்காமல் ஒரு வழியாகச் சமாளித்து அனுப்பினார்கள். இந்த முறை பிரசன்னம் முழுமையாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், என்னென்ன விவகாரங்கள் வெடிக்கப்போகின்றனவோ என அறநிலையத்துறை உயரதிகாரிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

இந்தச் சுவர் இனி காவு வாங்காது!

சின்ன நெருப்பும் பட்டாசு மாதிரி பற்றிக்கொள்ளும் நெல்லை மாவட்டத்தில், அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் பலரும் சர்ச்சைக்குரிய வகையில் விளம்பரங்களை எழுதிவந்தனர். சமுதாய மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களில், சர்ச்சைக்குரிய கருத்துகள் எழுதப்படுவதால், மக்களிடம் வெறுப்பும் பகையும் வளர்க்கப்பட்டன. இதைத் தவிர்க்கும் வகையில், நெல்லை மாநகரக் காவல்துறை, அன்னை தெரசா அறக்கட்டளை, நெல்லை மாவட்ட ஓவியர் தொழி லாளர் சங்கம் ஆகியவை இணைந்து சுவர் ஓவியங்களை வரைந்துள்ளன. நகரின் முக்கியச் சுவர்களில் நெல்லை மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் கோயில்கள், மணிமுத்தாறு அருவி, மலைகள், பறவைகள், விலங்குகள் என அழகு ஓவியங்களை வரைந்துள்ளனர். இவற்றின் மீது மீண்டும் யாராவது எதையாவது எழுதிவிடாமல் காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

லோக்கல் போஸ்ட்

முரட்டு உடன்பிறப்பாக மாறிய டீன்!

அ.தி.மு.க-வுக்கு விசுவாசமாக இருந்ததால் கடந்த ஆட்சியில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு டீனாக நியமிக்கப்பட்ட டாக்டர் ரவீந்திரன், ஆட்சி மாறியதும் முரட்டு உடன்பிறப்பாகவே மாறிவிட்டார். ‘முதல்வரை அப்பா மாதிரி பார்க்கிறேன். பணியை விட்டுவிட்டு கட்சியில் சேர்ந்துவிடலாம் என்று நினைக்கிறேன்’ என்றெல்லாம் கலைஞர் தொலைக்காட்சியில் பேசியும், மற்ற ஊடகங்கள் அவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதனால், அவராகவே ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களைப் பதிவேற்றிவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism