Published:Updated:

50% ஊழியர்கள், ஆளில்லாத மெரினா, திறக்காத ரிச்சி தெரு... எப்படி இருக்கிறது சென்னை?

ரிச்சி தெரு
ரிச்சி தெரு

சென்னை நகரத்தில் இதுநாள் வரை அடைக்கப்பட்டிருந்த டீக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. பழையபடி, மக்கள் கண்ணாடி கிளாஸ்களில் டீ குடித்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நகரங்களில் சென்னையும் முக்கியமானது. எனினும், கிட்டத்தட்ட 54 நாள்களுக்குப் பிறகு சென்னையில் ஊரடங்கு ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னை எப்படியிருக்கிறது என்று பார்த்து வர நகர்வலத்துக்குப் புறப்பட்டோம். சென்னையில் மார்க்கெட்டுகளில் உள்ள அனைத்துக் கடைகளுமே கிட்டத்தட்டத் திறந்திருந்தன. மளிகைக் கடை முதல் எலெக்ட்ரானிக் கடைகள் வரை விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தன. தெருவோரங்களில் வங்கி லோனுக்கு வாடிக்கையாளர் தேடும் பிரதிநிதிகளை வெகுநாள் கழித்துப் பார்க்க முடிந்தது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில மக்கள்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில மக்கள்

சாலைகளில் சிக்னல்களுக்கு மீண்டும் உயிர் பெற்று பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் மாறி மாறி ஒளிர்ந்தன. முக்கியமாக ஆட்டோக்களின் இரைச்சல் மீண்டும் காதுக்குள் கேட்கத் தொடங்கின. சாலைகளில் ஆட்டோக்கள் `சர் சர்'ரென்று போய்க்கொண்டிருக்க, சாலைகளில் தென்பட்ட மக்களில் 99 சதவிகிதம் பேர் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததையும் காண முடிந்தது.

சென்னையின் முக்கிய அடையாளம் சென்ட்ரல் ரயில் நிலையம். லாக்டௌன் நேரத்தில் களை இழந்திருந்த, சென்ட்ரல் ரயில் நிலையத் தண்டவாளங்களில் இப்போது ரயில்கள் நின்று கொண்டிருந்தன. வட மாநிலத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லக் காத்திருந்த ரயில்கள் அவை. இந்த ரயில் சேவைக்காக காத்திருந்த வட மாநில மக்கள் எப்போது தங்களை ரயில் நிலையத்துக்குள் அனுப்புவார்கள் என்று ரயில் நிலைய வாயிலில் காத்திருந்தனர். அந்த மக்களின் முகத்தில் மாஸ்க் இருந்தாலும், சமூக இடைவெளி மட்டும் இல்லை.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி

வட மாநில மக்களிடத்தில் மட்டுமல்ல சென்னை முழுவதுமே மக்களிடத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற அக்கறை கிஞ்சித்தும் இல்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. தற்போது, ரயில் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. பிளாட்பாரத்தைத் தோண்டியெடுத்து, புதிய பிளாட்பாரங்களை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

சென்னை சாலைகளில் ஊழியர்களுக்காக ஆங்காங்கே பேருந்துகள் மீண்டும் ஓடத் தொடங்கியிருந்தன. பேருந்து பணிமனைகளில் பராமரிப்பாளர்கள் முதல் ஓட்டுநர், நடத்துநர் என அனைவர் முகத்திலுமே மாஸ்க் இருந்தது. மாநகரப் பேருந்துகளில் ஒரு இருக்கைக்கு ஒருவர் என்கிற ரீதியில்தான் பேருந்துகள் இயக்கப்பட்டன.

டீக்கடைகளில் சானிட்டஸைர் பாட்டில்கள்
டீக்கடைகளில் சானிட்டஸைர் பாட்டில்கள்

சென்னை நகரத்தில் இதுநாள் வரை அடைக்கப்பட்டிருந்த டீக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. பழையபடி, மக்கள் கண்ணாடி கிளாஸ்களில் டீ குடித்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. பஜ்ஜி, வடைகள் போன்றவையும் டீக்கடைகளில் விற்பனைக்கு இருந்தன. சில டீக்கடைகள் சிகரெட் விற்பதுபோல, இப்போது சானிட்டஸைர் பாட்டில்களையும் விற்பனை செய்கின்றன. பாரிஸ் பகுதியில் ஒரு டீக்கடையில் சானிட்டைஸர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. கடை உரிமையாளரிடத்தில் இது குறித்துப் பேசியபோது, ``இன்னும் 2 ஆண்டுக் காலத்துக்கு கொரோனா இருக்கும்னு சொல்றாங்க. இனிமேல், சானிட்டைஸர் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில்தான் கடையில் சானிட்டைஸர்களையும் விக்குறோம். பெரிதாக லாபம் வைத்து விற்கல'' என்றார்.

கடந்த 50 நாள்களாக வெயிலியில் ஒளிரும் பாறை போல கிடந்த காமராஜர் சாலையில் இப்போது வாகனங்கள் கூடுதலாக ஓடிக்கொண்டிருந்தன. மெரினா பீச்சில் மக்களை அனுமதிக்காத காரணத்தினால், மனிதத் தலைகள் தென்படவில்லை. அரசு அலுவலகங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததால், தலைமைச் செயலகத்துக்கு அதிகளவு ஊழியர்கள் வந்திருந்தனர்.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஊழியர்கள்
நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஊழியர்கள்

தலைமைச் செயலகத்தினுள்ளே அதிக வாகனங்கள் வந்து போய் கொண்டிருந்தன. நாமக்கல் கவிஞர் மாளிகையின் மெயின் வாசலிலேயே ஒரு நாய் ஹாயாக படுத்து உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது, `கொரோனா எல்லாம் மனிதப் பதர்களுக்குத்தான், எங்களுக்கெல்லாம் இல்லை ' என்று சொல்வதுபோல இருந்தது. தலைமைச் செயலக ஊழியர்கள் நீண்ட நாளுக்குப் பிறகு பணிக்கு வந்திருந்ததால், உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஊழியர்கள் பலர் கையுறையும், மாஸ்க்கும் கூட அணிந்திருந்தனர். அங்கிருந்த ஊழியரிடத்தில் பேசியபோது, ``என் வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் நடைபெறும் என்று நினைத்துப் பார்த்தே இல்லை. இப்போது உற்சாகத்துடன் பணியைத் தொடங்கியுள்ளோம். கொரோனா போக இன்னும் இரு ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால், எப்போதுமே இனிமேல் பணியிடங்களில் ஜாக்கிரதையாகப் பணியாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது'' என்றார்.

லாக்டௌன் காலத்தில் சலூன் கடைக்காரர்கள் போல மிகுந்த இன்னல்களை சந்தித்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். ஆட்டோ ஓட தடை இருந்த காரணத்தினால், இவ்வளவு நாளும் குடும்பத்தை ஓட்டவே அவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆட்டோக்களை அதிகளவு சாலைகளில் பார்க்க முடிந்தது. பேருந்துகள் அதிகம் ஓடாததால், ஆட்டோக்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். இது குறித்து ஆட்டோ டிரைவர் சண்முகம் கூறுகையில், ``இனிமேல் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் வேலை பார்த்தால் மட்டும்தான் எங்கள் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும். மக்களும் கஷ்டத்தில் இருப்பதால், முடிந்தளவு வாடகையை நியாயமாக வாங்குகிறேன். மற்ற ஆட்டோக்காரர்களுக்கும் நியாயமாக நடக்க வேண்டும்'' என்றார் சமூக அக்கறையுடன்.

ரிச்சி தெரு
ரிச்சி தெரு

பாரிஸ் பர்மா பஜாரில் ஆங்காங்கே ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. உயர்நீதிமன்ற வளாகச் சாலையில் சாலையோர செல்போன் கடைகள் அதிகளவில் திறந்திருந்தன. ஆனால், ஒரு கடையில் கூட சமூக இடைவெளியைக் காண முடியவில்லை என்பதுதான் வருத்தமாக இருந்தது. இதனால்தான் ரிச்சி தெருவில் உள்ள கடைகளைத் திறக்க அரசு அனுமதிக்கவில்லை.

`அருள்வாக்கு சொல்வார்.. அவர் எனக்கு சாமி மாதிரி!' - முறைதவறிய நட்பால் கொலைவழக்கில் சிக்கிய மருமகன்

இந்தியாவிலேயே குறைந்த விலையில் எலெக்ட்ரானிக் பொருள்கள் ரிச்சி தெருவில் கிடைக்கும். இதனால், ரிச்சி தெருவில் எப்போதுமே மக்கள் கூட்டம் அலை மோதும். ஆனால், ஊடரங்கு தளர்த்தப்பட்டாலும் ரிச்சி தெருவுக்கு மட்டும் தளர்த்தப்படவில்லை. இதனால், ரிச்சி தெரு வியாபாரிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு