Published:Updated:

லாக்டௌன்:`சாலையில் சுற்றித் திரிந்தால் திருக்குறள் எழுதணும்!’ - நெல்லை போலீஸாரின் நூதன தண்டனை

விழிப்புணர்வு சுவர் ஓவியம்
விழிப்புணர்வு சுவர் ஓவியம்

ஊரடங்கு விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டு சாலைகளில் அவசியமின்றி சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பிடித்த நெல்லை மாநகர காவல்துறையினர், அவர்களுக்கு திருக்குறள் எழுதும் நூதன தண்டனை வழங்கினார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவதுடன் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் நிலவுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்திருக்கிறார்கள். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுவர் ஓவியம்
சுவர் ஓவியம்

அத்தியாவசிய உணவுப் பொருள்களை காலை 10 மணிக்குள் வாங்கிச் செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அவசியம் இல்லாமல் சாலைகளில் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் எச்சரித்திருந்தார்.

திருக்குறள் எழுதும் தண்டனை!

நெல்லை மாநகரம் முழுவதும் சாலைகளின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் தடுப்புகளை அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவசியம் இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்கு நூதன தண்டனை கொடுத்து எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஓவியம் வரையும் அதிகாரி
ஓவியம் வரையும் அதிகாரி

ஆனாலும் கூட இளைஞர்கள் பலரும் சரியான காரணமின்றி சாலைகளில் சுற்றித் திரிகிறார்கள். காவல்துறையினர் கண்காணிக்கும் பகுதிகளை அவர்கள் தெரிந்து வைத்திருப்பதால் சிறிய தெருக்களுக்குள் நுழைந்து யார் கண்ணிலும் படாமல் சுற்றுகிறார்கள்.

இந்த நிலையில், நெல்லை மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் சிலரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில இளைஞர்கள் பிடிபட்ட இடத்துக்குச் சென்ற மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன், அவர்களிடம் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறி, அவசியமில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்தார்.

நூதன தண்டனை குறித்து எச்சரிக்கும் துணை ஆணையர்
நூதன தண்டனை குறித்து எச்சரிக்கும் துணை ஆணையர்

அவசியமின்றி சாலைகளில் சுற்றியவர்களை 5 திருக்குறள்களை எழுதும்படி துணை ஆணையர் சீனிவாசன் நூதன தண்டனை வழங்கினார். இளைஞர்கள் பலரும் சிறு வயதில் படித்த திருக்குறளை நினைவுகூர்ந்து எழுதினார்கள். சிலருக்கு திருக்குறள் தெரியாததால் தவிப்புடன் மொபைல் போனில் திருக்குறளைப் படித்து மனப்பாடம் செய்த பின்னர் எழுதிக் கொடுத்துவிட்டு வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்!

நெல்லை மாநகரப் பகுதிகளில் உள்ள சுவர்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் மட்டும் அல்லாமல் சமுதாய தலைவர்களின் படங்கள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதனால் சில இடங்களில் மாற்று சமுதாயத்தினருடன் மோதல் உருவாகும் நிலைமை ஏற்பட்டது.

விழிப்புணர்வு ஓவியம்
விழிப்புணர்வு ஓவியம்

அதனால், மின் விளக்குக் கம்பங்களில் சமுதாயக் கொடிகளின் வர்ணங்களை வரைவது, அரசு மற்றும் தனியார் சுவர்களில் சமுதாயத் தலைவர்களின் படங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என நெல்லை மாநகர காவல்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சுவர்களில் இருந்த சர்ச்சைக்குரிய படங்கள் மற்றும் கருத்துகளை அழிக்கும் பணி நடைபெற்றது.

கொரோனா காலத்தில் நோய்த் தொற்றின் தீவிரம் பற்றியும், அதைத் தடுக்க முன்களப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும் வகையில் அரசு சுவர்களில் விழிப்புணர்வு படங்கள் வரையும் பணிகள் நடந்து வருகின்றன.

ஓவியம் வரையும் துணை ஆணையர் சீனிவாசன்
ஓவியம் வரையும் துணை ஆணையர் சீனிவாசன்

நெல்லை மாநகர காவல்துறை, நெல்லை மாவட்ட ஓவியர் தொழிலாளர்கள் சங்கம், அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன. சாதி, மற்றும் மதம் சார்ந்த சுவர் விளம்பரங்களுக்குப் பதிலாகச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கொரோனா விழிப்புணர்வு, நெல்லையின் சிறப்புகள் குறித்து வரையப்படும் இந்த ஓவியங்களில் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு