Published:Updated:

“தமிழக முதல்வர் ஐயா... நீங்கதான் எங்களுக்கு உதவணும்!”

சுரேஷ் - ஜெயசுதா
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ் - ஜெயசுதா

- லாக்-அப் கொடூரம்... கதறும் தாய்! - FOLLOW UP

“தமிழக முதல்வர் ஐயா... நீங்கதான் எங்களுக்கு உதவணும்!”

- லாக்-அப் கொடூரம்... கதறும் தாய்! - FOLLOW UP

Published:Updated:
சுரேஷ் - ஜெயசுதா
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ் - ஜெயசுதா

அழுகிப்போன கால்களோடு மருத்துவமனை படுக்கையைவிட்டு எழ முடியாத கணவன், பள்ளியில் படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு கை இல்லாத நிலையில் வறுமையின் பிடியில் அல்லாடும் ஒரு தாய்... நீதிக்காக, உதவிக்காக அவர் சிந்தும் கண்ணீர்... நம் நெஞ்சை உலுக்குகிறது!

கடந்த 6.2.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘ஊட்டியை உறையவைக்கும் லாக்-அப் கொடூரம்! மூடிமறைத்த அதிகாரிகள்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஊட்டி காந்தள் புறநகர் காவல் நிலைய போலீஸார், சுரேஷ் என்பரை டீசல் மோட்டாரைத் திருடியதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி செய்த கொடூரச் சித்ரவதை குறித்தும், அதன் விளைவால் சுரேஷின் குடும்பம் படும் துயரத்தையும் அதில் பதிவுசெய்திருந்தோம். கால்கள் சிதைந்த நிலையில் இன்னும் மருத்துவமனையில் கிடக்கிறார் சுரேஷ். பள்ளியில் படிக்கும் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கும் வீட்டுக்குமிடையே அல்லாடிவருகிறார் மாற்றுத்திறனாளியான சுரேஷின் மனைவி ஜெயசுதா. தாக்குதல் நடத்திய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனரே தவிர, அவர்கள்மீது கைது போன்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காவல்துறை மற்றும் அரசுத் தரப்பிலிருந்து அந்தக் குடும்பத்துக்கு எந்த நீதியும் உதவியும் கிடைக்கவில்லை. இது காவல்துறைமீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கிறது.

“தமிழக முதல்வர் ஐயா... நீங்கதான் எங்களுக்கு உதவணும்!”

நமது இதழில் கட்டுரை வெளியானதை அடுத்து, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி தலைமையில் விசாரணை நடந்துவருகிறது. மார்ச் 8, 9 தேதிகளில் ஜெயசுதாவிடம் விசாரித்த வருவாய் கோட்டாட்சியர், 21 பக்க அறிக்கையைத் தயார் செய்திருக்கிறார். அவரிடம் பேசினோம்... “இன்னும் நிறைய நபர்களை விசாரிக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம்‌ கால அவகாசம் தேவைப்படலாம்” என்று முடித்துக்கொண்டார்.

சுரேஷ்
சுரேஷ்
ஜெயசுதா
ஜெயசுதா

கோவை மருத்துவமனையில், தன் இரு மகள்களோடு கலங்கிய கண்களுடன் நின்றிருந்த ஜெயசுதாவிடம் பேசினோம்... “இந்த ரெண்டு பொண்ணுங்களை வெச்சுக்கிட்டு சாப்பாட்டுக்கே வழியில்லாம அல்லாடுறேன். இவருக்கு உடம்பு எந்த அளவுக்கு குணமாகும்னு தெரியலை. நான்தான் மாற்றுத்திறனாளியா போயிட்டேன்... இப்ப இவரையும் அநியாயமா அப்படி ஆக்கிட்டாங்க. தயவு செஞ்சு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயாகிட்ட வேண்டிக்கிறேன்... என் ரெண்டு பொண்ணுங்களோட படிப்புச் செலவையும் அரசாங்கம் ஏத்துக்கணும். எங்களுக்கான நீதியை நீங்கதான் வாங்கித் தரணும். என் கணவருக்குத் தரமான சிகிச்சை தர்றதுக்கு ஏற்பாடு செய்யணும்... எங்களுக்கு உதவுங்க” என்றவர், அதற்கு மேல் பேச முடியாமல் கலங்கினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கப் போராடிவரும் சி.பி.எம் ஊட்டி வட்டச் செயலாளர் நவீன், “சுரேஷைத் தாக்கிய ஐந்து போலீஸாரைக் கைதுசெய்ய வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுரேஷின் மனைவி ஜெயசுதாவுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். போலீஸ் தரப்பிலிருந்து அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், உரிய பாதுகாப்பு தர வேண்டும்” என்றார்.

நிர்க்கதியாக நிற்கும் இந்தத் தாயின் கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism