Published:Updated:

காவல்துறை யாருக்கு நண்பன்?

கஸ்டடி மரணம்
பிரீமியம் ஸ்டோரி
கஸ்டடி மரணம்

மனித உரிமைகள் என்றால் என்ன, அவற்றை மீறாமல் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் காவலர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்

காவல்துறை யாருக்கு நண்பன்?

மனித உரிமைகள் என்றால் என்ன, அவற்றை மீறாமல் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் காவலர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்

Published:Updated:
கஸ்டடி மரணம்
பிரீமியம் ஸ்டோரி
கஸ்டடி மரணம்

‘இன்னுமொரு கஸ்டடி மரணம்: இது ஆட்சியா? ஆட்டம் போடும் அவலமா?’ - 2020 ஜூலை 22 அன்று தென்காசியில் நடந்த லாக் அப் மரணத்தைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கையின் தலைப்பு இது. இதே கேள்வி இன்று தமிழ்நாட்டின் முதல்வராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவரை நோக்கித் திரும்பியிருக்கிறது.

விக்னேஷ்
விக்னேஷ்

சென்னை மெரினாவில் குதிரைச் சவாரி தொழில் செய்துவந்த விக்னேஷ் என்ற 25 வயது இளைஞர், ஏப்ரல் 18 அன்று இரவு வாகனச்சோதனையின்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்காகத் தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மறுநாள் அவர் மர்மமான முறையில் இறந்திருப்பதும் அதை மூடி மறைக்கக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளும், முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைமீது கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவையே உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ்-பெனிக்ஸ் லாக் அப் மரணங்களுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் இப்படியான சம்பவங்கள் தொடர்வது, யார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், காவல்துறை தனி அரசாங்கம் நடத்துகிறதோ என்ற கேள்விக்கு இட்டுச் செல்கிறது.

சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இந்த லாக் அப் மரணம் நிகழ்ந்திருந்தாலும், அது சட்டமன்றத்தை எட்டுவதற்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு விளக்கமளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “இது சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகளை முறையாக அரசு எடுத்துவருகிறது. உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படைக் காவலர் தீபக் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேல் விசாரணைக்காக இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என அறிவித்தார். விக்னேஷ் மரணம் தொடர்பான விவாதத்தின் சூடு ஆறுவதற்கு முன்பாகவே, திருவண்ணாமலையில் விசாரணைக் கைதியாக இருந்த தங்கமணி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது.

காவல்துறை யாருக்கு நண்பன்?

“சாத்தான்குளம் நிகழ்வு காவல்துறையினரிடம் ஒருவித பயத்தை உருவாக்கியிருந்தது. அதையும் மீறி இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்துவந்தாலும், இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் காவல்துறை இதை மறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேலைப்பளு, அதனால் உண்டாகும் மன உளைச்சல் என இதற்குக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், காக்கி உடை தனக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்குவதாகப் பெரும்பாலான காவலர்கள் கருதுவதே பிரச்னையின் அடிப்படை. ஆனால், அந்த அதிகாரம் யார்மீது செலுத்தப்படுகிறது என்பது கவனத்துக்குரியது. அடித்தால் கேட்க ஆளில்லாத, எந்தப் பின்புலமும் இல்லாத எளியவர்களே சித்ரவதைக்கு உள்ளாகிறார்கள், இறந்தும் போகிறார்கள். அந்தக் காவலரும் ஒரு எளிய பின்புலத்திலிருந்து வந்தவ ராகத்தான் இருப்பார். அவரும் திட்டமிட்டு அடிப்பது இல்லை; தனக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவர் நம்பும் அதிகாரத்தை இப்படியான நபர்கள்மீது செலுத்துகிறார்” என்கிறார், முன்னாள் காவலரும், ‘டாணாக்காரன்’ பட இயக்குநருமான தமிழ்.

காவல்துறையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று 7 முக்கிய உத்தரவுகளைக் குறிப்பிட்டு செப்டம்பர் 2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காவல்துறைமீது பொதுமக்கள் புகார் அளிக்க, மாநில காவல் புகார்கள் ஆணையம் (SPCA) அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. ஆனால், நாட்டின் எந்த மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும் அந்த உத்தரவு முழுமையாக நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கவில்லை என்று காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு (CHRI) 2020-ல் நடத்திய ஆய்வில் கண்டறிந்திருக்கிறது.

“காவல் சித்திரவதை, லாக் அப் மரணம் என்பவை காவல்துறையோடு மட்டும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அல்ல. நீதித்துறை, மருத்துவத்துறை, சிறைத்துறை ஆகியவையும் இந்தச் சிந்தனையை உள்வாங்கியிருக்கும் அமைப்புகளாக மாறியிருக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கிறது. சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகு சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய நீதித்துறை அகாடமி ஜூன் 2020 முதல் இப்போதுவரை இதுசம்பந்தமாக ஒரு அமர்வைக்கூடக் கூட்டியிருக்கவில்லை. 25-ம் ஆண்டை நிறைவு செய்திருக்கும் மாநில மனித உரிமை ஆணையத்தில் இப்போது 22,000 வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன” என்று கொந்தளிக்கிறார், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன்.

தமிழ்நாட்டின் அனைத்துக் காவல் நிலையங் களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2014-ம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த தமிழகக் காவல்துறை, அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் 1,567 காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. சிசிடிவி கேமராப் பதிவுகளை ஓர் ஆண்டு அல்லது 18 மாதங்கள் வரை சேமித்து வைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது எந்த அளவுக்குச் செயல்வடிவம் கண்டிருக்கிறது என்பது ஆய்வுக்குரியது.

“தமிழ்நாட்டில் காவல்துறை - பொதுமக்கள் விகிதம் மிகக் குறைவு. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள ஒருவர் வாரம் 72 மணிநேரம் வரை பணியாற்றும் நிர்பந்தத்தில் இருக்கிறார். இந்தக் கடும் பணிச்சுமையினால், காவலர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஐபிசி, சிஆர்பிசி, தடயவியல், விசாரணைமுறை, உளவியல் என ஏராளமானவற்றைக் குறுகிய காலத்தில் அறிய வேண்டிய அளவுக்குக் காவலர்களின் பயிற்சிக் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படியான பயிற்சிகளோடு, ஏராளமான அதிகாரமும் அவர்களுக்குக் கையளிக்கப்படுகிறது. அந்த அதிகாரத்தை யார்மீது, எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

திலகவதி, ஹென்றி டிபேன், தமிழ்
திலகவதி, ஹென்றி டிபேன், தமிழ்

ஒருவர் கைதுசெய்யப்படும்போது மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளை, புகழ்பெற்ற டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வகுத்துக் கொடுத்திருக்கிறது. எனவே, கைது செய்வதையே ஒரு தண்டனையாக மாற்றக்கூடாது. கைது செய்யப்படும் நபருக்கோ தனக்கிருக்கும் உரிமைகளைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. அப்படியான நபர்கள்தான் லாக் அப் மரணம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். 1980-களில் இது சார்ந்து ஆய்வுசெய்த அருண் சௌரி, ஏழைகள், வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளவர்கள், சிறுபான்மையினர் ஆகியோரே பெரும்பாலும் இதுபோன்ற சித்ரவதைகளுக்கு ஆளாகிறார்கள் என்று கண்டறிந்தார். இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. நீதித்துறையின் ஒத்துழைப்பு காவல்துறையினர் இதுபோன்ற குற்றங்களிலிருந்து தப்பிக்க வழிவகுப்பது துரதிர்ஷ்டவசமானது.

மனித உரிமைகள் என்றால் என்ன, அவற்றை மீறாமல் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் காவலர்களுக்குச் சொல்லித் தரவேண்டும். பொதுமக்களுக்குத் தங்கள் உரிமைகள் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும்; பள்ளிகளில் மனித உரிமை சம்பந்தமான பாடங்களை உள்ளடக்க வேண்டும். காவல்துறை மட்டும் தனித்து அல்லாமல், ஒரு சமூகமாக ஒன்றிணைந்து நாம் மேலெழ வேண்டும்” என்று வலியுறுத்துகிறார், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.திலகவதி.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பது தமிழ்நாடு காவல்துறையின் பிரகடனமாக இருக்கிறது. ஆனால், யாருக்கு என்பதை, காவல்துறை நிகழ்த்தும் இதுபோன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் அரசு தெளிவுபடுத்த வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism