Published:Updated:

லோக்கல் போஸ்ட்

லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

லோக்கல் போஸ்ட்

- தேன்மொழி

Published:Updated:
லோக்கல் போஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
லோக்கல் போஸ்ட்
லோக்கல் போஸ்ட்

சர்ச்சையைக் கிளப்பும் ‘அர்ஜன் காலனி’ பெயர்ப் பலகை!

நீலகிரி மாவட்டம், மசினகுடி ஊராட்சியில் இருக்கிறது மாவனல்லா கிராமம். ஆதிதிராவிடர் மக்கள் வாழ்ந்துவரும் இந்தக் கிராமத்தில் ஊராட்சி சார்பில், 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இதை அறிவிக்கும் வகையில் கிராமத்தின் முகப்பில் அறிவிப்புப் பலகை ஒன்றும் அரசுத் தரப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில், கிராமத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல், ‘மாவனல்லா அர்ஜன் காலனி செல்லும் சாலை மேம்பாடு செய்தல்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். (அரிஜன் என்பதைத்தான் பிழையாக அப்படி எழுதியுள்ளனர்). தெருக்களில்கூட சாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது என்று மாற்றுவதற்கு உத்தரவிட்டுவரும் அரசே, இப்படி அப்பட்டமாக அறிவிப்புப் பலகை வைத்திருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரே ஏரியாவில் 7 டாஸ்மாக் கடைகள்!

வேலூர் மாநகராட்சி 28-வது வார்டு காகிதப் பட்டறை பகுதியில் அடுத்தடுத்து ஏழு டாஸ்மாக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. சி.எம்.சி மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய பிரதான வழித்தடம் இது என்பதால், இங்கு விற்பனையும் அதிகம். இதையறிந்த ‘கரூர்’ கும்பலும் அங்கே திருட்டுத்தனமாகக் கடைவிரித்து 24 மணி நேரமும் மதுபானங்களை சப்ளை செய்துவருகிறது. ‘டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்கிறோம் என்று சொன்ன அரசே, இப்படி வரிசையாகக் கடை விரித்திருப்பது கவலை தருகிறது. குடித்துவிட்டு வீடுகளுக்கு முன்பு விழுந்து கிடக்கும் குடிமகன்களை அப்புறப்படுத்துவதும், நொறுங்கிக்கிடக்கும் மதுபாட்டில்களைச் சுத்தம் செய்வதும்தான் எங்களின் தினசரி வேலையாக இருக்கிறது’ என்று புலம்புகின்றனர் அந்தப் பகுதி மக்கள்!

லோக்கல் போஸ்ட்

‘‘கொஞ்சம் தலையைக் குனிங்க சார்!’’

ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் தனித்தனியே முகாமிட்டிருந்தனர். நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை ஆய்வு செய்துமுடித்த துரைமுருகன், கே.என்.நேரு நடத்திய ஆய்வுக் கூட்ட அரங்கத்துக்குச் சென்றார். துரைமுருகனோடு சபாநாயகர் அப்பாவுவும் சென்றார். இதையடுத்து இருவருக்கும் கே.என்.நேரு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்தார். சபாநாயகர் அப்பாவு உயரமாக இருந்ததால், அவருக்கு சால்வை அணிவிக்க முடியாமல் திணறிய கே.என்.நேரு, ‘‘சபாநாயகர் சார், கொஞ்சம் குனிங்க... உங்க அளவுக்கு நான் உயரமா இல்லைல்ல?” என்று சத்தமாகச் சொல்ல... சபாநாயகரும் சிரித்துக்கொண்டே குனிந்து, சால்வையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு, ஆய்வுக்கூட்டத்தின் இறுக்கத்தைக் கலைத்து, கலகலப்பாக்கியது.

வேட்டைத்தடுப்பிலுமா, ‘அவுட் சோர்ஸிங்?’

வனத்துறையில் வேட்டைத் தடுப்புக் காவலர்களும், ஆர்.ஆர்.டி பிரிவைச் சேர்ந்தவர்களும்தான் கடைநிலை ஊழியர்கள். இரவு, பகல் பாராது காட்டில் உயிரைப் பணயம்வைத்துப் பணியாற்றிவரும் தற்காலிக ஊழியர்களான இவர்களுக்கு, வனத்துறைதான் ஊதியம் வழங்கிவந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக வனத்துறைக்கு ஆதரவாக இருக்கும் என்.ஜி.ஓ-க்கள் மூலம் ஊதியம் வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, ‘‘வனத்துறை மூலம் ஊதியம் பெற்றுவரும் தற்காலிக ஊழியர்களைக் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அனுபவத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யவேண்டிய கட்டாயநிலை ஏற்படும். அதைத் தவிர்க்கும்விதமாகவே பரீட்சார்த்த முயற்சியாக, கோவையில் இந்த ‘அவுட் சோர்ஸிங்’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த முறை அமல்படுத்தப்படவிருக்கிறது’’ என்கின்றனர் விஷயமறிந்தவர்கள். ‘எங்களுக்கு விடியலே கிடையாதா?’ என்று கலங்குகின்றனர் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்.

லோக்கல் போஸ்ட்

பைசா கோபுரம் ஸ்டைலில், மின்கம்பம்!

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள முத்துசேர்வாமடம் என்ற கிராமத்தில் ‘ஆயிரம் குட்டை’ என்ற குளம் இருக்கிறது. ஐந்து ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் குளத்தை அப்பகுதி மக்கள் குளிக்கப் பயன்படுத்துகிறார்கள். கால்நடைகளும் நீர் அருந்துகின்றன. இந்த நிலையில், குளத்தின் கரையிலேயே எந்நேரம் வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்துவிடக்கூடிய அபாய நிலையில், மின்கம்பம் ஒன்று பைசா கோபுரம் ஸ்டைலில் நிற்கிறது. ‘ஆபத்து நிகழ்வதற்கு முன்பு மின்கம்பத்தைச் சரிசெய்யுங்கள்’ என அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்தும், மின்வாரிய அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. பருவமழை தொடங்கிவிட்ட தற்போதைய சூழலில், ‘மின்கம்பம் விழுந்து அசம்பாவிதம் நிகழும் முன், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கின்றனர் கிராம மக்கள்.