Published:Updated:

`படகு சவாரி; போட்டோ ஷூட்!’ - சென்னைவாசிகளின் கவனம் ஈர்க்கும் மாதவரம் தாவரவியல் பூங்கா

மாதவரம் தாவரவியல் பூங்கா
மாதவரம் தாவரவியல் பூங்கா

தமிழ்நாடு தோட்டக்கலை சார்பில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது பெரிய பூங்கா இதுவாகும்.

தமிழ்நாட்டில் தாவரவியல் பூங்கா என்றாலே நம் நினைவுக்கு வருவது, ஊட்டி தாவரவியல் பூங்காதான். ஊட்டி செல்வோர் கட்டாயம் பார்த்துச் செல்லும் டூரிஸ்ட் ஸ்பாட் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். தமிழ்நாடு தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த தாவரவியல் பூங்கா, தேசிய அளவில் புகழ் பெற்றதாக விளங்குகிறது, ஊட்டி போன்ற குளிர்ப் பிரேதேசங்களில் மட்டுமே இதுபோன்ற தாவரவியல் பூங்காக்கள் சாத்தியம் என்று நாம் எண்ணிக்கொண்டிருந்த நேரமும் உண்டு. ஆனால், சென்னையிலும் அப்படியொரு பூங்காவை சாத்தியப்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை.

மாதவரம் தாவரவியல் பூங்கா
மாதவரம் தாவரவியல் பூங்கா

சென்னை தேனாம்பேட்டையில், கடந்த 2010-ம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஒரு பூங்கா அமைக்கப்பட்டு, 'செம்மொழிப் பூங்கா' எனப் பேரிடப்பட்டது. சென்னையின் முதல் தாவரவியல் பூங்கா என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளது. 20 ஏக்கரில் பச்சைப் பசேல் செடி கொடிகளுடன் இன்றளவும் போட்டோ ஷூட்டுக்கு உகந்த ஸ்பாட்டாக விளங்கிவருகிறது.

சென்னையில் வேறு எங்கும் இதுபோன்ற தாவரவியல் பூங்கா இல்லை என்ற மக்களின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது, மாதவரம் தாவரவியல் பூங்கா. 2010-ம் ஆண்டிலேயே அடிக்கல் நாட்டப்பட்டாலும், இந்தப் பூங்கா திறக்கப்பட்டது 2018-ம் ஆண்டில்தான். முதலில் 28 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்காவைவிட பெரியதாக உருவாக்கத் திட்டமிடப்பட்டு, இறுதியில் சென்னை மாதவரம் பால்பண்ணை அருகில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது, இந்த தாவரவியல் பூங்கா.

மாதவரம் தாவரவியல் பூங்கா
மாதவரம் தாவரவியல் பூங்கா

தமிழ்நாடு தோட்டக்கலை சார்பில், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது பெரிய பூங்கா இதுவாகும். 400 வகை தாவரங்கள், 100-க்கும் மேற்பட்ட மருத்துவ குணமிக்க தாவரங்கள், வீட்டு வளர்ப்புச் செடிகள், கண்கவர் வண்ணப்பூக்கள், மூலிகைச் செடிகள் என மொத்தம் இந்தப் பூங்காவில் 800-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. மேலும், வேறு எங்கும் இல்லாத 27 நட்சத்திர மரங்களும் இந்தப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.

ஓலைக் கீற்றுகளின் மூலம் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள குடில்கள், மன அழுத்தத்தைக் குறைக்க பூங்காக்களை நாடும் மக்கள் ஒய்வெடுக்கப் பயன்படுகிறது. இந்தப் பூங்காவின் கூடுதல் சிறப்பம்சம், பரிசல் சவாரி. பூங்காவினுள் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில், பரிசலில் பயணம் செய்வது அலாதியான இன்பத்தை அளிக்கிறது. பசுமைப் புல்வெளியில் நடைப்பயணம் மேற்கொள்ள ஏதுவான சுற்றுச்சூழல், எங்கு பார்க்கிலும் ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்கள், அதன் பொந்துகளில் கீச்சிடும் பச்சைக்கிளி கூட்டம் என இந்த பூங்காவை அடிக்கடி விசிட் செய்ய பல காரணங்கள் உள்ளன.

மாதவரம் தாவரவியல் பூங்கா
மாதவரம் தாவரவியல் பூங்கா

மூலிகைத் தாவரங்களின் நடுவில், மனதை ஒருநிலைப்படுத்தி மெடிட்டேஷன் செய்ய அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், உண்டு மகிழ கேன்டீன், விளையாடி மகிழ விளையாட்டுச் சாதனங்கள் என குடும்பமாய் பொழுதைக் கழிக்க விரும்புவோரின் ஆகச் சிறந்த தேர்வாக மாதவரம் தாவரவியல் பூங்கா திகழ்கிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் இந்தப் பூங்காவில், பெரியவர்களுக்கு ரூபாய் 20, சிறியவர்களுக்கு ரூபாய் 10 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, மேலும் 15 நிமிட படகு சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூபாய் 40ம் சிறியவர்களுக்கு ரூபாய் 20ம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து, பூங்காவினுள் போட்டோஷூட் செய்வதற்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு