Published:Updated:

`தனியார் கொரோனா சிகிச்சைக் கட்டணத்தைத் திரும்ப வழங்குங்கள்!' -புதுச்சேரி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

புதுச்சேரி அரசின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகள் கட்டணங்களை செலுத்தியிருந்தால் அதற்கான ரசீதுகளை சுகாதாரத்துறையில் சமர்ப்பித்து அந்தத் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது சுகாதாரத்துறை. அத்துடன், தங்கள் பரிந்துரையின் பேரில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளிடம் எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை மீறி, சுகாதாரத்துறை மூலம் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் மருந்துகள் வாங்குவதற்கும், இ.சி.ஜி, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்திடக் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாகவும் அரியூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மீது புகார்கள் எழுந்தன.

புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனை
புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனை

இந்த விவகாரத்தை கையில் எடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் ஆனந்த், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார். அந்த வழக்கு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ``அரசு பரிந்துரைத்த நோயாளிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மருத்துவமனை 8 வாரத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்" என்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ஆனால் அதன் பிறகும் நோயாளிகள் செலுத்திய கட்டணத்தை திருப்பித் தருவதற்கான எந்த நடவடிக்கையும் மருத்துவமனை நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லை.

பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்துங்கள்!

இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், ``இந்த ஒரு மருத்துவமனையில் மட்டுமல்லாமல், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசு பரிந்துரைத்த நோயாளிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை நோயாளிகளுக்கு சுகாதாரத்துறை திரும்பச் செலுத்த வேண்டும்" என்று புதுச்சேரி அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

இந்தப் பொதுநல வழக்கைத் தொடர்ந்த ஆனந்திடம் பேசினோம். ``தன் கணவரையும், மாமியாரையும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் ஓர் இளம்பெண். அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்ட நிலையில், இவருக்கும் தொற்று ஏற்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உறவுகளை இழந்து நிராதரவாக நின்ற அந்தப் பெண்ணிடம் 60,000 ரூபாயை கறாராக வசூலித்திருக்கிறது அந்த மருத்துவமனை நிர்வாகம். இது குறித்து கடந்த மே மாதம் நாங்கள் தாக்கல் செய்த வழக்கு ஜூன் 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் ஆனந்த்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் ஆனந்த்

அப்போது, `அரசு பரிந்துரையின் பேரில் ஸ்ரீவெங்கடேஸ்வரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள், மருத்துவமனை சிகிச்சைக்காக செலவு செய்த மருந்து சீட்டுகள், பரிசோதனை ரசீதுகள் ஆகியவற்றை கொடுத்து மருத்துவமனையில் தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு சார்பில் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும், அப்படி வரும் நோயாளிகளுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்' என்றும் உத்தரவிட்டது.

அரசின் உத்தரவை மதிக்காத ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவமனை!

ஆனால், மாநில அரசு அப்படி எந்த விளம்பரத்தையும் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் நாங்கள் வெளியிட்ட தகவலையடுத்து, பாதிக்கப்பட்ட 10 நோயாளிகள் எங்களை அணுகி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்திய ஆதாரங்களைக் கொடுத்தனர். அதனை புதுச்சேரி அரசிடமும், நீதிமன்றத்திடமும் சமர்ப்பித்தோம். இந்நிலையில்தான் நேற்று நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது” என்றார்.

இந்தப் பொதுநல வழக்கிற்காக வாதாடும் வழக்கறிஞர் சுமதியை தொடர்புகொண்டோம்.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவிட் சிகிச்சை... உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ!

``கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததும் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் கையகப்படுத்திய புதுச்சேரி அரசு, தங்கள் பரிந்துரையின்படி அங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை மீறி வெங்கடேஸ்வரா மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளிடம் பல்வேறு விதத்தில் கட்டணத்தை வசூலித்துவிட்டுத்தான் சிகிச்சையையே கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் எடுத்துச் சென்றோம். அப்போது, நோயாளிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டதாக மருத்துவனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

குட்டு வைத்த நீதிமன்றம்!

இந்த மருத்துவமனைகளைக் கண்காணிக்க அரசு நியமித்திருந்த நோடல் ஆபீசரும், ஆய்வுகளை மேற்கொண்டு வெங்கடேஸ்வரா மருத்துவமனை நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்திருப்பதை உறுதி செய்து அரசுக்கு அறிக்கை கொடுத்திருந்தார். ஆனாலும் அரசு அந்த மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களுடன் அந்த நோடல் ஆபீசரின் அறிக்கையையும் நீதிமன்றம் எடுத்துக்கொண்டது. இந்நிலையில், அரசு கொரோனா சிகிச்சை நோயாளிகளுக்காக தங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை இன்னும் அளிக்கவில்லை என தனியார் மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள், அதற்கான கட்டண ரசீதுகளை மாநில சுகாதாரத் துறையிடம் சமர்ப்பித்து அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அப்படி மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் தொகையை கழித்துக்கொண்டு மீதம் உள்ள தொகையை அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

நேற்று வந்த விசாரணையில், நோயாளிகள் சமர்ப்பித்த ரசீதுகளை சரிபார்ப்பதற்கு புதுச்சேரி அரசு கால அவகாசம் கேட்டது. இதையடுத்து, வெங்கடேஸ்வரா மருத்துவமனை மட்டுமல்லாமல் மற்ற தனியார் மருத்துவமனைகளில் இப்படி பாதிக்கப்பட்ட நோயாளிகளும் அரசை அணுகி ஆவணங்களைக் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தி தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

புதுச்சேரி: `சில்லறை மதுக்கடைகள், சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி!’ - தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

பொதுமக்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்!

தொடர்ந்து இதனை மூன்று மாதத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று கூறி விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் புதுச்சேரி அரசின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகள் கட்டணம் செலுத்தியிருந்தால், அதற்கான ரசீதுகளை சுகாதாரத்துறையில் சமர்ப்பித்து அந்தத் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு