Published:Updated:

என்னைப்போய் ஆர்.எஸ்.எஸ் என்கிறார்கள்... நியாயமா? - வருந்தும் மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை ஆதீனம்

மடாதிபதிகள் பிச்சையெடுத்துச் சாப்பிட வேண்டும் என்று கம்யூனிஸ்ட்காரர் சொன்னார். காலையில் மூன்றரை மணிக்கு எழுந்து பூஜைகள் பண்றேன்

என்னைப்போய் ஆர்.எஸ்.எஸ் என்கிறார்கள்... நியாயமா? - வருந்தும் மதுரை ஆதீனம்

மடாதிபதிகள் பிச்சையெடுத்துச் சாப்பிட வேண்டும் என்று கம்யூனிஸ்ட்காரர் சொன்னார். காலையில் மூன்றரை மணிக்கு எழுந்து பூஜைகள் பண்றேன்

Published:Updated:
மதுரை ஆதீனம்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை ஆதீனம்

ஆன்மிகம் தாண்டி, தமிழக அரசியல் தளத்தில் திடீரெனப் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் `மதுரை ஆதீனம்’ என்றழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். பட்டினப்பிரவேசத் தடை குறித்தான பேச்சு, மதுரையில் நடைபெற்ற துறவியர் மாநாட்டுப் பேச்சு... எனத் தடதடத்துவரும் ஆதீனத்தைச் சந்தித்தோம். ‘‘நான் தமிழர்களுக்காகப் பாடுபடுபவன். இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். ராஜபக்சேவைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். அப்படிப்பட்ட என்னையே விமர்சிக்கிறார்கள். தமிழர்களுக்காக நான் சாகவும் தயார்’’ என்று உணர்ச்சிவசப் பட்டவரை ஆசுவாசப்படுத்தி, கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘அமைச்சர் சேகர் பாபுவுக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?’’

‘‘என் வாயைக் கிளறுறீங்க... போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும். நான் பாதிக்கப்பட்டவன். என் கடன் பணி செய்வதே... உள்ளதைச் சொன்னேன்.’’

‘‘தமிழ்நாட்டின் முக்கிய ஆதீனங்கள் தி.மு.க அரசை `ஆன்மிக அரசு’ என்று பாராட்டுகிறார்கள். நீங்கள் மட்டும் எதிர்த்துவருகிறீர்கள். திராவிடக் கட்சிகளை ஆரம்பத்திலிருந்தே பிடிக்காதா?’’

‘‘மற்றவர்கள் பாராட்டட்டும். நான் சின்ன வயதிலிருந்தே ஆன்மிக ஈடுபாட்டோடு வளர்ந்தவன். விவேகானந்தா மன்றம், தெய்வீகப் பேரவை என்று செயல்பட்டவன். வாரியார், காமராஜர், காந்தியடிகள் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்தவன். எல்லை காந்தி பாளையங்கோட்டை வந்தபோது ஊரிலிருந்து நடந்துபோய்ப் பார்த்தேன். நாத்திகச் சிந்தனை வந்ததில்லை. எல்லாக் கோயில்களுக்கும் சர்ச்சுக்கும் போவேன். பைபிள், குர்ஆன் படித்திருக்கிறேன். திருவாசகத்தில் ‘எங்கள் நாயகமே’ என்று வருகிறது. இஸ்லாமியர்கள் ‘நபிகள் நாயகம்’ என்கிறார்கள். நாங்களோ ‘ஆதீனகர்த்தா’ என்கிறோம். கிறிஸ்தவர்கள் ‘கர்த்தர்’ என்கிறார்கள். அனைத்து மத விஷயங்களையும் தெரிந்துவைத்திருக்கிறேன். அவர்களும் நம் ஆலயங்களை மதிக்க வேண்டும் என்கிறேன்.’’

‘‘உங்களை ‘ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்’ என்று சொல்கிறார்களே..?”

‘‘காஞ்சிபுரம் தி.க தலைவர் அசோகன் வீட்டு நிகழ்ச்சியிலும், சிவகங்கையில் தி.க நிர்வாகி வீட்டு விசேஷத்திலும் கலந்துகொண்டு சாப்பிட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் தமிழுணர்வு. தமிழ் குடமுழுக்குகளுக்கு அதிகம் போகிறேன். என்னை எப்படி ‘ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்’ என்று சொல்கிறார்கள்?’’

‘‘கம்யூனிஸ்ட்டுகள் உங்களை விமர்சனம் செய்ய என்ன காரணம்?’’

‘‘மடாதிபதிகள் பிச்சையெடுத்துச் சாப்பிட வேண்டும் என்று கம்யூனிஸ்ட்காரர் சொன்னார். காலையில் மூன்றரை மணிக்கு எழுந்து பூஜைகள் பண்றேன். ஆறு மணி வரைக்கும் எதுவும் சாப்பிடுவதில்லை. காலையில் ரெண்டு தோசை, மதியம் கொஞ்சம் சோறு, இரவு ராகி சாப்பிடுகிறேன். என்னைப்போல நீங்கள் சாப்பிட்டால் ஒரு வாரத்தில் படுத்துடுவீங்க. வெளியில் போனால் அவங்க சொன்ன மாதிரி பிச்சைதான் எடுக்கிறேன்.’’

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

‘‘தற்போது சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களுக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி..?’’

‘‘சிதம்பரம் கோயிலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்... என்னை ஒருமுறை திருவாசகம் ஓதவிடவில்லை. அதிலிருந்து நானும் அங்கே போறதில்லை. தமிழ் இல்லாத இடத்தில் நமக்கென்ன வேலை... என்னை திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல... பிராமணர்களும் எதிர்க்கிறாங்க. ஆனால், என்னைப்போய் ஆர்.எஸ்.எஸ் என்கிறார்கள்... நியாயமா?

தமிழ் அர்ச்சனை, தமிழ் குடமுழுக்கை ஆதரிக்கிறேன். மடத்தில் பொறுப்பேற்றதும் தேவாரப் பாடசாலை தொடங்கினேன். நல்ல சம்பளத்தோடு ஓதுவாரை நியமித்திருக்கிறேன். தமிழ் மொழியில் தேர்வில் முதலிடம் வரும் மாணவர்களுக்குப் பரிசு வழங்குகிறேன். தமிழ் வளர்ப்பவர்களுக்கு விருது வழங்குகிறேன். சைவத் தமிழ் மாத இதழ் நடத்துகிறேன். ஏகப்பட்ட தமிழ்ப் பணிகள் செய்கிறோம். ஆர்.எஸ்.எஸ்-காரனாக இருந்தால் தமிழுக்குப் பாடுபடுவேனா... தினமும் `விடுதலை’ நாளிதழ் படிக்கிறேன். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் என்னை விமர்சிக்கிறார்கள்.’’

‘‘உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் என்று கூறியிருந்தீர்கள். சமீபத்தில் பிரதமரைச் சந்தித்தபோது இது குறித்துத் தெரிவித்தீர்களா?’’

‘‘என் வாயைக் கிளறுறீங்க...’’

‘‘தொடர்ந்து இதேபோல்தான் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவீர்களா?’’

‘‘வ.உ.சி., கட்டபொம்மன், பாரதியார், வாஞ்சிநாதன் பிறந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன். அதனால் வீரம் நிறைந்தவன். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லாதவன். 7-ம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் அரசர்களைத் திருத்தியிருக்கிறார்கள். இந்த மடத்துடன் அரசியல் சம்பந்தப்பட்டிருக்கிறது. சாதிகளை ஒழித்து, புரட்சி செய்தது இந்த மடம். ஆரம்ப காலத்தில் சிதம்பரத்தில் தமிழுக்காகப் போராடியிருக்கிறேன். இந்த அரசு என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.’’

‘‘உங்கள் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதால், முதல்வரைச் சந்தித்து விளக்க முயன்றீர்களா?’’

‘‘இல்லை... அதேநேரம் கலைஞரை மூன்று முறை சந்தித்திருக்கிறேன். அவர் முதலில் வெற்றிபெற்ற குளித்தலையைச் சேர்ந்த இளமுருகு பொற்செல்வி மூலம் பழக்கம். அவர் கையால் பரிசு வாங்கியிருக்கிறேன். செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறேன். என்னைப் பார்த்தவுடன் எழுந்து நின்று வரவேற்பார். அவருக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். ஆனால், இப்போதுள்ளவர்களுக்கு அது தெரியவில்லை!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism