அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி... மிரள வைக்கும் மதுரை மாநகராட்சி கணக்கு!

மதுரை மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை மாநகராட்சி

நான் பொறுப்பேற்பதற்கு முன்பான செலவுக் கணக்குகள் இவை. சில மேஜர் ரிப்பேர்களை வெளியில் சரிபார்க்கவேண்டியிருப்பதால், வாகனப் பராமரிப்புக்கு அதிகமாகவே செலவாகிறது

ஐந்து ஆண்டுகளில் வாகனப் பராமரிப்புக்காக ரூ.51.64 கோடியும், வக்கீல், ஆடிட்டர் ஃபீஸாக தலா 3.5 கோடி, 4.44 கோடி ரூபாயும் செலவிட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கணக்கு காட்டியிருப்பது மதுரையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது!

இது குறித்து சமூக ஆர்வலர் ஹக்கீம் நம்மிடம் பேசும்போது, “தூய்மைப் பணியாளர் ஊதியம் தொடங்கி ஸ்மார்ட் சிட்டி நிதிவரை ஊழல் சர்ச்சையில் சிக்கிய மதுரை மாநகராட்சி இப்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் 2015 முதல் 2020 வரையிலான வரவு செலவுக் கணக்கு விவரங்களைப் பார்க்கும்போது, அதிகாரிகள் ‘காந்தி கணக்கு’ எழுதியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

வாகன ரிப்பேர் செலவு ரூ.51.64 கோடி... மிரள வைக்கும் மதுரை மாநகராட்சி கணக்கு!

கடந்த 2016-2020 நிதியாண்டுகளில் மாநகராட்சியின் மொத்த செலவீனம் ரூபாய் 2,228.76 கோடி. இதில், ஊழியர்களின் சம்பளம், தினசரிப் பணிகள் உள்ளிட்ட முக்கியச் செலவுகள் போக, கணக்கில் காட்டியிருக்கும் மற்ற செலவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மாநகராட்சியில் மொத்தமே 200 வாகனங்கள்தான் இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் வாகனப் பழுது நீக்கச் செலவு மட்டும் 51.64 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டிருக் கிறார்கள். இந்தத் தொகைக்கு 100 புதிய கார்களையே வாங்கியிருக்கலாம். தெருவிளக்குகள் பழுது பார்க்க மட்டும் 4.59 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக எழுதி யிருக்கிறார்கள். இதேபோல, பினாயில், கொசு மருந்து வாங்க ரூ.9 கோடியும், வழக்கறிஞர் கட்டணமாக ரூ.3.5 கோடியும், ஆடிட்டர் ஃபீஸாக ரூ.4.44 கோடியும், விளம்பரச் செலவு ரூ.3.75 கோடியும் ‘கணக்கு’ காட்டப் பட்டிருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால், வாகனங்களைப் பராமரிக்க மாநகராட்சியே பணிமனை களை வைத்திருக்கிறது. தெருவிளக்கு அமைக்க ஒப்பந்தம் போடும்போதே பராமரிப்புக்கும் சேர்த்தே டெண்டர் கொடுக்கப்படும். அதேபோல மாநகராட்சிக் கென்றே வழக்கறிஞர்களும் ஆடிட்டர்களும் இருக்கிறார் கள். எனவே, இதில் பெரிய அளவுக்கு முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

ஹக்கீம்
ஹக்கீம்
சிம்ரன்ஜீத் சிங் கலோன்
சிம்ரன்ஜீத் சிங் கலோன்

இது குறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் கலோனிடம் கேட்டதற்கு, “நான் பொறுப்பேற்பதற்கு முன்பான செலவுக் கணக்குகள் இவை. சில மேஜர் ரிப்பேர்களை வெளியில் சரிபார்க்கவேண்டியிருப்பதால், வாகனப் பராமரிப்புக்கு அதிகமாகவே செலவாகிறது. வழக்குகளைப் பொறுத்தவரை அவற்றின் தன்மைக்கேற்ப 5,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை கட்டணமாக வழக்கறிஞருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் கணக்குகளைச் சரிபார்க்க தனியார் ஆடிட்டரையும் பயன்படுத்துகிறோம். அனைத்து வரவு செலவு அறிக்கையும் கமிஷனர் பார்வைக்கு வந்த பிறகே ஒப்புதலாகும். என்னைப் பொறுத்தவரை மாநகராட்சி கணக்குகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். இனிமேல் இது குறித்துப் புகார்கள் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

போன நிதி போனதுதானா?!