Published:Updated:

மதுரை : விமானத்தில் நடந்த திருமணம்; கொரோனா விதிமீறல் சர்ச்சை - விசாரணைக்கு உத்தரவு!

முகக் கவசம், இடைவெளி இல்லாமல் விமானத்துக்குள் உறவினர்கள்
முகக் கவசம், இடைவெளி இல்லாமல் விமானத்துக்குள் உறவினர்கள்

விமானத்தில் கொரோனா விதிமீறலுடன் திருமணம் நடந்திருப்பது சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இந்தச் சம்பவத்தை விசாரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவு.

கொரோனா பேரிடர்கால கட்டுப்பாட்டை மீறி, மதுரையைச் சேர்ந்த ஜோடிக்கு விமானத்தில் பறந்தபடி திருமணம் நடத்தப்பட்ட சம்பவம் நேற்று வைரலான நிலையில், இந்தச் சம்பவத்தை விசாரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

திருமண ஜோடி
திருமண ஜோடி

கொரோனாப் பேரிடரின் இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கும், பொதுமக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், திருமணத்துக்காக வெளியூர் செல்வதற்குப் பல கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

தளர்வுடன்கூடிய ஊரடங்கு இருந்தபோது, குறிப்பிட்ட நேரத்தில் எளிமையாகத் திருமணங்கள் நடந்துவந்தன. இந்தநிலையில், மே 24 முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த 23-ம் தேதி முழு நாளும் ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டது.

திருமண ஜோடி
திருமண ஜோடி

அந்த ஒரு நாளில் ஏகப்பட்ட திருமணங்கள் தமிழகத்தில் எளிமையாக நடந்து முடிந்தன. இந்தநிலையில், மதுரையில் நடந்த ஒரு திருமணம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராகேஷ் - தீக்‌ஷனா ஜோடியின் திருமணத்தை அனைவரும் கவனிக்கும்படி நடத்த நினைத்த இரண்டு குடும்பத்தினரும், ஏஜென்சி மூலம் தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் உறவினர்கள் 130 பேரை அழைத்துச் சென்று, விமானம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் மேலே பறந்தபோது திருமணத்தை நடத்தியுள்ளனர். புரோகிதரையும் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு பல லட்சத்தை இருவீட்டாரும் செலவழித்துள்ளனர்.

இந்தத் திருமண நிகழ்வை திருமண வீட்டார் பெருமையாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

ஆனால், இந்தத் திருமண நிகழ்ச்சி, கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கும், விமான போக்குவரத்து இயக்ககத்துக்கும் புகார் சென்றுள்ளது.

கொரோனா அச்சம் - தனி விமானத்தில் வெளிநாடு பறக்கும் தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள்!

மதுரையிலுள்ள ஓர் அரங்கில் திருமண நிகழச்சியை நடத்தியவர்கள், எதற்காக மீண்டும் விமானத்தில் திருமணத்தை நடத்தினார்கள் என்றும், விமானத்தை வாடகைக்கு எடுப்பது நடைமுறையில் உள்ளதுதான் என்றாலும், கொரோனா விதிகளை மதிக்காமல் 130 நபர்களை எப்படி விமானத்துக்குள் அனுமதித்தார்கள் என்றும், விமானத்தில் பயணித்தவர்கள் முகக்கவசம் அணியாததை விமான ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துதுறை இயக்ககம், ஸ்பைஸ் ஜெட் விமான நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. அன்று பணியாற்றிய ஊழியர்கள் மீது விமான நிறுவனம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கொரோனா விதிகளை மீறிக் கூட்டம் சேர்த்த திருமண வீட்டார் மீது மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு