Published:Updated:

`மக்களுக்காக உழைப்பவர்களுக்கு நான் செய்யும் சேவை இது!' - கவனம் ஈர்த்த மதுரை மெக்கானிக் சேகர்

மெக்கானிக் சேகர்
மெக்கானிக் சேகர்

தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக இருசக்கர வாகனங்களைப் பழுது பார்த்து தரும் மதுரை, அலங்காநல்லூரைச் சேர்ந்த மெக்கானிக் சேகரின் முயற்சிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

கொரோனாவின் அசுர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், மருத்துவத் துறையினர், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் சேகர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் எனக் கொரோனா தடுப்புப் பணியில் உள்ளவர்களுக்கு இலவசமாக டூவீலர் சர்வீஸ் செய்து தருகிறார்.

சேகர்
சேகர்

அத்தியாவசியப் பொருள்கள், மளிகைக் கடைகள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்கு திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் இரு சக்கர வாகனங்களில் பழுது ஏற்பட்டால் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் சிரமப்படுகிறார்கள் என்ற நோக்கில் இலவசமாகப் பழுதுபார்த்து வருகிறார்.

4 மீட்டர் காற்றில், ஷூக்களில்... கொரோனா பரவலாம்! புதிய ஆய்வு #FightCovid19

சேகரிடம் பேசினோம். ``அலங்காநல்லூரில் டூவீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறேன். தற்போது கொரோனா தொற்றால் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். என்னால் அவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என யோசிக்கையில் நான் செய்யும் தொழிலையே அவர்களுக்கு இலவசமாகச் செய்யலாம் எனத் தீர்மானித்தேன்.

ஊரடங்கு நீடித்துள்ள இந்தச் சமயத்தில் அவர்கள் இருசக்கர வாகனங்களையே பயன்படுத்தி வருகிறார்கள். அதில் கோளாறு ஏற்பட்டால் பழுது பார்ப்பதற்குப் போதிய வசதி இல்லை. எனவே, நான் இலவசமாக பழுதுபார்த்து தருகிறேன்.

தூய்மைப் பணியாளர்களுக்குச் இலவச சேவை
தூய்மைப் பணியாளர்களுக்குச் இலவச சேவை

சமூக வலைதளங்கள் மூலம் எனது போன் நம்பரைப் பகிர்ந்து உதவி தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ள வழி செய்தேன். அந்தவகையில் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு வருகிறார்கள். வண்டியை இங்கே கொண்டுவர முடிகிறவர்கள், இங்கே வந்து சரிசெய்துகொள்கிறார்கள். வண்டி எடுக்க முடியாத அளவுக்குப் பழுதாகி இருந்தால், அவர்கள் இருக்கும் இடத்துக்கு நான் சென்று பழுதுபார்த்து வருகிறேன்.

காவலர்கள் அதிகமாகத் தொடர்புகொள்கிறார்கள். இலவசமாகச் சரிபார்த்து தருவதால் அவர்கள் வண்டியில் உள்ள குறைகளைச் சொல்லத் தயங்கினாலும் நான் வற்புறுத்திக் கேட்டு சரிசெய்து தருகிறேன். வருடம் முழுவதும் இந்த வேலையைத்தான் பார்த்து வருகிறேன். ஆனால், கடந்த சில நாள்களாக இவர்களுக்கு இலவசமாக டூவீலர் சரி செய்து தருவதுதான் மனதுக்குத் திருப்தியைத் தருகிறது. என்னால் என் தொழிலைக் கொண்டு செய்யமுடிந்த உதவியைச் செய்துதருகிறேன்" என்றார் மகிழ்ச்சியுடன்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள டூவீலர் மெக்கானிக் சேகர் என்பவர் காவல்துறையினர், மருத்துவர்கள்,...

Posted by Vikatan EMagazine on Tuesday, April 14, 2020

பணத்தைக் கொண்டுதான் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி, தன் தொழிலைக் கொண்டு உதவி செய்து வரும் சேகர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு