Published:Updated:

மோசடியாகப் பதிவு செய்யப்பட்டதா மீனாட்சியம்மன் கோயில் சொத்து?

மீனாட்சியம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
மீனாட்சியம்மன் கோயில்

90 வருடங்களை தாண்டிய உயில்... 58 கோடி ரூபாய் சொத்துகள்...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உயில் எழுதி வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சுமார் 58 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, தனி நபர்கள் பத்திரப்பதிவு செய்ததாக வாட்ஸ்அப் பதிவு ஒன்று பகிரப்பட்டுவருகிறது. அந்தச் சொத்து குறித்தோ, மோசடியாகப் பதிவுசெய்ய முயன்றவர்கள் குறித்தோ எந்த விவரமும் இல்லாமலேயே தகவல் மட்டும் பரப்பப்பட்டுவந்த நிலையில், இதன் பின்னணி என்ன என்று களத்தில் இறங்கி விசாரித்தால், 90 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி நம்மை அழைத்துச் சென்றார்கள்!

முதலில் நாம் மீனாட்சியம்மன் கோயிலின் இணை ஆணையாளர் செல்லத்துரையிடம் இந்த விஷயம் உண்மைதானா என்று கேட்டோம்... ‘‘கோயிலுக்காக உயில் எழுதப்பட்ட அறக்கட்டளை சொத்தை மோசடியாகச் சிலர் பத்திரப்பதிவு செய்தது உண்மைதான். இந்தத் தகவல் எங்களுக்குத் தெரிந்ததை அடுத்து பதிவை ரத்து செய்திருக்கிறோம். உயில் எழுதி வைத்தவர்களின் உறவினர்கள் சிலர் நீண்டகாலமாக அந்தச் சொத்தில் உரிமை கொண்டாடிவருகிறார்கள். அதனால், அந்தச் சொத்து சம்பந்தமாக எந்தப் பத்திரப்பதிவையும் செய்யக் கூடாது என்று மதுரை மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்திருந்தோம். ஆனாலும் சிலர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் பதிவுசெய்து, பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்துவிட்டனர். இந்தத் தகவல் எங்களுக்குத் தெரிந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்திருக்கிறோம். இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் பதிவுத்துறைத் தலைவருக்குப் புகார் அனுப்பியுள்ளோம். மோசடியில் ஈடுபட்டவர்கள்மீது காவல்துறையிலும் புகார் அளித்துள்ளோம்’’ என்று அதிரவைத்தவர், மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விவரம் சொல்ல மறுத்துவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சார்பதிவாளர் திருப்பதியிடம் பேசியபோது, ‘‘பதிவு நடந்தபோது நான் இல்லை. சமீபத்தில்தான் பொறுப்பேற்றிருக்கிறேன். மீனாட்சியம்மன் கோயில் சொத்து முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர், திண்டுக்கல் மாவட்டப் பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது’’ என்றவர், பதிவுசெய்தவர்கள் குறித்த தகவலைத் தர மறுத்துவிட்டார்.

மோசடியாகப் பதிவு செய்யப்பட்டதா மீனாட்சியம்மன் கோயில் சொத்து?

மோசடியான பத்திரப்பதிவு தடுத்து நிறுத்தப்பட்டதாகச் சொன்னாலும், ‘அதைச் செய்தவர்கள் யார்... அவர்களுக்கும் இந்தச் சொத்துக்கும் என்ன தொடர்பு... சொல்லிவைத்ததுபோல அதிகாரிகள் அனைவரும் அவர்களை அடையாளம் காட்ட மறுப்பது ஏன்?’ என்றெல்லாம் வரிசையாகக் கேள்விகள் எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி முதற்கட்டமாக, கோயில் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘புதுக்கோட்டை ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி பல்லவராயர் என்பவருக்குச் சொந்தமாக மதுரை பி.பி.குளம் அருகிலிருக்கும் இரண்டேகால் ஏக்கர் சொத்தை, 1930-ல் யசோதா அம்மாள் என்பவர் உயில் எழுதி, மூன்று வக்கீல்களை டிரஸ்ட்டிகளாக நியமித்து, அறக்கட்டளையை ஏற்படுத்தினார். மேற்கண்ட சொத்தின் மூலம் வரும் வருமானத்தில், தினமும் மீனாட்சியம்மனுக்கு ஒரு படி தயிர்சாத நைவேத்தியம், சித்திரைத் திருவிழாவில் அம்மனுக்குப் பட்டு, சாமிக்கு வேட்டி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அழகர்கோயிலில் நைவேத்தியம், சிதம்பரம் கோயிலில் திங்கள்தோறும் ஒருபடி அரிசிச் சாத நைவேத்தியம், முக்குறுணி விநாயகருக்கு சதுர்த்தியில் சுண்டல் நைவேத்தியம், நன்றாகப் படிக்கும் ஏழை மாணவருக்குக் கல்லூரியில் படிக்கக் கல்விக் கட்டணம், தங்களின் திதிக்கு 100 ஏழைகளுக்கு அன்னதானம் ஆகியவற்றுக்குச் செலவுசெய்ய வேண்டும் என்று உயிலில் எழுதியிருந்தாகச் சொல்கிறார்கள்.

கடந்தகாலங்களில் இந்த அறக்கட்டளையை நிர்வகித்தவர்கள், இதற்குண்டான தொகையைச் செலுத்திவந்தார்கள். காலப்போக்கில் டிரஸ்ட்டிகள் மூவரும் இறந்துவிட, ஜமீன் வகையறாவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி பல்லவராயர் மனைவி ராமாயி ஆயி உட்பட வாரிசுகள் 10 பேர், அந்தச் சொத்துக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்த ஆவணத்தைவைத்து கடந்த 2016-ல் சொத்தைத் தங்கள் பெயருக்குப் பட்டா மாற்ற முயன்றபோதுதான் கோயில் நிர்வாகத்துக்கு விஷயம் தெரிந்தது. அந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு, பட்டா மாற்றம் செய்ய உதவிய தாசில்தார், வி.ஏ.ஓ மீது அப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2020-ல் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்தது. தொடர்ந்து, கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட இந்தச் சொத்தை மதுரை மாவட்டத்தில் எங்கும் பதிவுசெய்யக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது.

மோசடியாகப் பதிவு செய்யப்பட்டதா மீனாட்சியம்மன் கோயில் சொத்து?

இந்த நிலையில்தான், ராமாயி ஆயி தரப்பினர் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும், திருவள்ளூரைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் பவர் பத்திரம் பதிவுசெய்திருக்கிறார்கள். பிறகு திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் வாங்கிய இளையராஜா தன் மனைவி கவிதாவுக்கும், அனீஸ் தன் தந்தை பிரகாஷுக்கும் கிரையம் செய்திருக்கிறார்கள். இந்தத் தகவல் கோயில் நிர்வாகத்துக்குத் தெரிந்ததும், அந்தப் பதிவும் ரத்துசெய்யப்பட்டது. முறைகேடுக்கு துணைபோன சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்குப் புகார் அனுப்பப்பட்டது. மோசடியாகப் பத்திரப்பதிவு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க, மதுரை மாநகர காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சொத்தில் கண்காணிப்பு நிர்வாகி என்ற பெயரில் ராஜூ என்பவரும் உரிமை கொண்டாடிவருகிறார். இந்த விவகாரம் கோயில் நிர்வாகத்துக்குத் தெரிவதற்கு முன்பே அந்தச் சொத்தில் 80 சென்ட் அளவு நிலம் தனியார் பள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது’’ என்றார்கள் விலாவாரியாக.

அடுத்ததாக, புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதியில் வசிக்கும் ராமாயி ஆயியின் மகன் ராஜேந்திரனைச் சந்திக்கச் சென்றோம். அவர் சார்பாக அவரின் உறவினரும், பவர் எழுதி வாங்கியவருமான இளையராஜா நம்மிடம் பேசினார். ‘‘2016-ம் வருஷம், அந்தச் சொத்து ஆவணங்களைக் காட்டி வெள்ளைச்சாமி பல்லவராயரின் வாரிசுகள் பேருல பட்டா வாங்கிட்டாங்க. அப்ப, கோயில் நிர்வாகம் ஆட்சபேனை தெரிவிச்சதால, டி.ஆர்.ஓ-கிட்ட சீராய்வு மனு கொடுத்தோம். அதை விசாரிச்ச டி.ஆர்.ஓ., ரெண்டு தரப்பிலும் ஆவணங்களை ஒப்படைக்கச் சொன்னார். கோயில் நிர்வாகம் தரப்புல எந்த ஆவணத்தையும் கொடுக்கலை. நாங்க எல்லா ஆவணங்களையும் ஒப்படைச்சோம். இதுல எங்க பக்கம் எல்லாம் சரியா இருந்ததால, பழைய நிலைக்கே கொண்டுபோகச் சொல்லி ஆர்.டி.ஓ-க்கு உத்தரவு போட்டு 10 பேருக்கும் பட்டா வழங்கினாங்க” என்றவர், அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களையும் விளக்கினார்...

“அதோட பிரச்னை முடியலை... ஆர்.டி.ஓ கோர்ட்டுல இது சம்பந்தமான வழக்கு இன்னும் நடந்துக்கிட்டிருக்கு. இந்த நிலையிலதான் அந்த பட்டாவைவெச்சு பவர் கொடுத்தாங்க. பவர் கொடுத்த இடத்தைப் பத்திரம் போட ரிஜிஸ்டர் ஆபீஸுக்குப் போகும்போதுதான், ராஜூங்கிறவர் பதியக் கூடாதுன்னு புகார் கொடுத்து வெச்சிருந்தார். இவர் உயில் எழுதப்பட்டதா சொல்லப்படுற கட்டளையின் நிர்வாகின்னு சொல்லிக்கிட்டு சில ஆவணங்களைத் தயார் செஞ்சுருக்காரு. அந்தக் காலத்துலயே அவரோட உறவினர்கள், வாரிசுங்கிற பேருல எங்களுக்குத் தெரியாமலேயே இந்தச் சொத்துல 84 சென்ட்டை தனியார் பள்ளிக்கு வித்திருக்காங்க.

செல்லத்துரை
செல்லத்துரை

தட்சிணாமூர்த்தி பல்லவராயர் 1928-ம் வருஷம் இறந்துட்டாரு. அவர்கிட்ட வேலை பார்த்தவங்கதான் யசோதா. அவங்களும் 1930-ல இறந்துட்டாங்க. சட்டப்படி சொத்துல உரிமையே இல்லாத யசோதா உயில் எழுதுனதாச் சொல்றாங்க. அப்படியே அந்த உயில் செல்லும்னு வெச்சுக்கிட்டாக்கூட அதுல எழுதியிருக்குறபடி சாமிக்கு நைவேத்தியம், பட்டு, கல்லூரிக் கட்டணம், திதிக்கு அன்னதானம் ஆகியவற்றைத்தான் செய்யணும். உயில்ல எங்கேயுமே இந்தச் சொத்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்டதா சொல்லப்படலை. கோயில் பதிவேட்டிலும் இந்தச் சொத்து பத்தின விவரம் இல்லை. மொத்தத்துல ஜமீனுக்குச் சம்பந்தமில்லாத சிலர் சொத்தை வித்திருக்காங்க. ஆனா, சொத்துக்கு உரிமையானவங்க விக்க நினைச்சா அதைத் தடுத்து, பொய்ப் புகார் சொல்றாங்க...” என்று முடித்தார்!

மீனாட்சியம்மன் கோயில், சொத்து உரிமையாளர், அறக்கட்டளை தொடர்புடையவர்கள் என்று மூன்று தரப்புகளுக்கு இடையே நிலவும் முக்கோணப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. செய்வார்களா?