Published:Updated:

ஓர் அடையாளத்துக்கான ஒன்பது ஆண்டு போராட்டம்!

முருகன்
பிரீமியம் ஸ்டோரி
முருகன்

இந்நாட்டில் ஒடுக்கப்படும் சமூகத்தில் பிறந்து, சிறு வயதிலிருந்தே சாதி அடிப்படையில் இழிவுகளையும் தாக்குதல் களையும் சந்தித்துவரும் லட்சக்கணக்கான விளிம்புநிலை மனிதர்களில் ஒருவர்தான் முருகன்.

ஓர் அடையாளத்துக்கான ஒன்பது ஆண்டு போராட்டம்!

இந்நாட்டில் ஒடுக்கப்படும் சமூகத்தில் பிறந்து, சிறு வயதிலிருந்தே சாதி அடிப்படையில் இழிவுகளையும் தாக்குதல் களையும் சந்தித்துவரும் லட்சக்கணக்கான விளிம்புநிலை மனிதர்களில் ஒருவர்தான் முருகன்.

Published:Updated:
முருகன்
பிரீமியம் ஸ்டோரி
முருகன்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முதல் வாயிலில் நுழைந்தால், வலப்பக்கம் வேப்ப மரத்தடியில் முருகன் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். எந்நேரமும் ஏதேனும் ஒரு மனுவை எழுதிக்கொண்டிருப்பார். உள்ளங்கையெல்லாம் பேனா மைக்கறை படிந்திருக்கிறது. மக்களின் கோரிக்கைகளுக்காகவும், அதிகாரவர்க்கத்தின் ஊழல் கறைகளைக் களைவதற்காகவும் மையம்கொண்டுள்ள ‘மை’ அது! நான்கைந்து பழைய சட்டை பேன்ட்கள், ஒரு அரதப்பழசான சைக்கிள், நைந்துபோன ஒரு பையில் ஏராளமான மனுக்கள், செய்தித்தாள் சேகரிப்புகள், கொஞ்சம் ரீஃபில் பேனாக்கள்... இவையே முருகனின் சொத்துகள். சமூக அநீதிகளுக்கு எதிராகப் புகார் செய்யும் ஒரு சாமானியனின் அடிப்படை உரிமை, அதிகாரத்தால் எப்படியெல்லாம் நசுக்கப்படுகிறது என்பதற்கு முருகனின் வாழ்க்கை ஓர் உதாரணம்.

மனு எழுதிக் கொடுப்பதால் கிடைக்கும் சொற்ப வருமானமே முருகனின் வாழ்வாதாரம். முருகனிடம் மனு எழுதி வாங்கிய ஆயிரக்கணக்கான பேர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை பெற்றிருக்கிறார்கள். ஆனால், தானொரு இந்திய நாட்டின் பிரஜை என்கிற அடையாளத்தைப் பெறத் துடிக்கும் முருகனின் ஒன்பது ஆண்டுப் போராட்டங்களுக்குக் கொஞ்சமும் காது கொடுக்காமல் இருக்கிறது இந்த அரசு. ஆம், முருகனிடம் குடும்ப அட்டை தொடங்கி வாக்காளர் அடையாள அட்டை வரை எதுவுமே இல்லை.

இந்நாட்டில் ஒடுக்கப்படும் சமூகத்தில் பிறந்து, சிறு வயதிலிருந்தே சாதி அடிப்படையில் இழிவுகளையும் தாக்குதல் களையும் சந்தித்துவரும் லட்சக்கணக்கான விளிம்புநிலை மனிதர்களில் ஒருவர்தான் முருகன். ‘மக்கள் எழுச்சிப் பேரவை’ என்ற அமைப்பைத் தனி ஆளாக நடத்திவரும் முருகன், புதிரை வண்ணார் சமூகத்துக்கு தி.மு.க ஆட்சியில் நல வாரியம் அமைத்தபோது, அதில் அலுவல் சாரா உறுப்பினராகச் சில காலம் இருந்தார். தன்மீதான ஒடுக்குதல்களை எதிர்த்துப் போராடுவதுடன், சமூகத்தில் நடக்கும் ஊழல்களை, சக மனிதர்கள்மீதான ஒடுக்குதலைக் களையப் போராடுவதுதான் முருகனைத் தனித்து அடையாளம் காட்டுகிறது.

ஓர் அடையாளத்துக்கான ஒன்பது ஆண்டு போராட்டம்!

ஒரு மதிய நேரத்தில் சற்றே ஓய்ந்திருந்த முருகனிடம் பேசினோம். களைத்த முகத்தைத் துடைத்துக்கொண்டு பேசினார். “சிவகங்கை மாவட்டம், பொன்னெழில் கிராமம்தான் பூர்வீகம். மிகவும் ஒடுக்கப்பட்ட புதிரை வண்ணார் சமூகத்தில் பிறந்தவன் நான். அதனாலேயே, 6-ம் வகுப்பு வரை முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்ற நான், ‘தொடர்ந்து படிக்கக் கூடாது’ என்று ஆதிக்கச் சாதியினரால் தடுக்கப்பட்டேன். ஏட்டுக் கல்வியைத்தானே அவர்களால் பறிக்க முடியும், என் சமூகக் கல்வியைப் பறிக்க முடியாதல்லவா... வீட்டைவிட்டு வெளியேறினேன். ஊர் ஊராகச் சென்று கிடைத்த வேலைகளைச் செய்தேன். அப்போதுதான் விளிம்புநிலை மக்களுக்காகப் போராடும் சில அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பினேன். சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக நடந்த போராட்டங்களில் பங்கெடுத்தேன். எங்கள் சமூக மக்கள் எதிர்கொள்ளும் சமூகக் கொடுமைகள் பற்றி அரசுக்கு தொடர்ச்சியாகப் புகார்கள் அனுப்பினேன். சிவகங்கை ஆதிதிராவிட நல அலுவலர் உதவியுடன், 2009-ம் ஆண்டு புதிரை வண்ணார் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர் ஆனேன். சென்னையில் நடந்த நல வாரியத்தின் கூட்டத்தில் எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பதிவு செய்தேன்.

இதனால் கோபமடைந்த ஊர்க்காரர்கள் சிலர், எங்களை ஊரைவிட்டுத் துரத்த வேண்டும் என்று திட்டமிட்டார்கள். ஒரு கொடுமையான நாளில் என்னையும் என் குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கினார்கள். படுகாயமடைந்தோம். எங்களது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த நேரத்தில் வழக்கறிஞர் ரத்தினம், பகத் சிங், ராகுல் ஆகியோர் வந்து எங்களை மீட்டனர்; சட்ட உதவிகளைச் செய்தனர்.

சொந்த ஊரில் இனி இருக்க முடியாது என்ற நிலையில்தான், சிவகங்கை அருகிலேயே வெவ்வேறு கிராமங்களில் குடிபெயர்ந்தோம். செல்லுமிடமெல்லாம் துரத்தியது தீண்டாமை. கடைசியாக 2010-ல் மதுரைக்கு வந்தோம்” என்று இடைவெளிவிட்டு, கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார்.

ஓர் அடையாளத்துக்கான ஒன்பது ஆண்டு போராட்டம்!


தொடர்ந்து, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றுக்கு எப்படி அலைக்கழிக்கப்பட்டார் என்ற சோகத்தையும் பகிர்ந்தார்,

“கடந்த 2011, நவம்பர் 15-ம் தேதி குடும்ப அட்டை கேட்டு மதுரை வடக்கு தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன்; எந்த பதிலும் இல்லை. நினைவூட்டல் கடிதம் அனுப்பினேன்; மீண்டும் எந்தப் பலனும் இல்லை. இரண்டு ஆண்டுகளாக அலைந்ததுதான் மிச்சம். 2013, ஏப்ரல் 30-ம் தேதி மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தேன். அதை அவர், மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பினார். அங்கிருந்தும் எந்த பதிலும் இல்லை. ஒருகட்டத்தில் எனக்கு குடும்ப அட்டையின்மீதே வெறுப்பு வந்துவிட்டது. ‘ச்சீய்...’ என்று விட்டுவிட்டேன்.

சரி, அடையாளத்துக்கென்று ஓர் ஆதாரமாவது வேண்டுமே... `வாக்காளர் அடையாள அட்டையாவது வாங்குவோம்’ என்று தேர்தல் பிரிவு அலுவல கத்தில் விண்ணப்பித்தேன். கிணற்றில்போட்ட கல்லானது அந்த விண்ணப்பம். 2018 ,நவம்பர் 30-ம் தேதி, தமிழகத் தேர்தல் ஆணையருக்கு மனு அனுப்பியும் பதில் வரவில்லை. போராடிப் போராடி ஒரு கட்டத்தில் ஓய்ந்துவிட்டேன். அடையாளம் இல்லாத ஒரு மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த கொரோனா காலத்தில், சுத்தமாக வருமானம் நின்று போனது. குடும்ப அட்டை இருந்தாலாவது அரசு கொடுக்கும் இலவச அரிசி, மளிகைப் பொருள்களை வாங்கிச் சாப்பிடலாம். என்னிடம்தான் எதுவுமே இல்லையே... என்னைப்போல் எத்தனை பேர் இருப்பார்கள்... ‘கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் புதிரை வண்ணார் சமூக மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று அரசுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். கடந்த ஏப்ரல் 27-ம் தேதி என்னை அழைத்த கிராம நிர்வாக அலுவலர், ‘நல வாரிய அட்டை உள்ளவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குகிறது, பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளது’ என்று தகவல் தெரிவித்தார். ஆவலுடன் ஓடிச் சென்று பார்த்தால், ‘பட்டியலில் பெயர் இருக்கிறது, ஆனால், பொருள்களைப் பெற குடும்ப அட்டை, ஆதார் அட்டை வேண்டும்’ என்று சொல்லி திருப்பியனுப்பிவிட்டார்கள். கண்ணெதிரே உணவுப் பொருள் இருக்கிறது, அதுவும் என் பெயரில் இருக்கிறது. அதைத் தொடக்கூட என்னால் முடியவில்லை. இதையெல்லாம் மனுவாக எழுதி, கடந்த ஜூலை 27-ம் தேதி மதுரை ஆட்சியருக்கு அனுப்பினேன். தொடர்ந்து, தமிழக ஆதிதிராவிட நல ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் அனுப்பியிருக்கிறேன். இதுவரை எந்த பதிலும் இல்லை” என்றார்.

‘‘உங்களை அதிகாரிகள் இப்படி இழுத்தடிக்க அப்படியென்ன காரணம்?” என்று கேட்டோம்.

“சில வருடங்களுக்கு முன்னர், மதுரை ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது. அது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் அனுப்பினேன். அதிகாரிகள் கடுப்பாகி என்மீது பொய்ப் புகார் கொடுத்தார்கள். காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று என்னை மிரட்டினார்கள். பகத் சிங் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வந்து என்னைக் காப்பாற்றினார்கள். அதன் பிறகும் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டுத்தான் என்னை விடுவித்தார்கள். அதிலிருந்தே வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் என்மீது வெறுப்பில் இருக்கிறார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டு நான் கலெக்டர் அலுவலக வாளகத்துக்குள் அமர்ந்து மனு எழுதிக் கொடுக்கக் கூடாது என்று தல்லாகுளம் காவல்துறையினர் மூலம் வெளியே பிடித்துத் தள்ளினார்கள். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, நீதிமன்ற உத்தரவால் இப்போது இங்கு மனு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் குறித்துப் புகார் செய்வதோடு, பத்திரிகையாளர்களுக்கும் தகவல் அனுப்புவேன். இவையெல்லாம் அதிகாரி களுக்கு இன்னும் என்மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. எல்லாவற்றையும் சமாளித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறேன். ‘போராடுகிறவன்’ என்ற அடையாளம் மட்டுமே என்னிடமிருக்கிறது’’ என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “யப்பா, ஆதரவற்றோர் பென்ஷன் வருதில்ல... ஒரு மனு எழுதிக் கொடுப்பா...” என்று வந்து நின்றார் ஒரு மூதாட்டி.

அனிச்சையாக எழுதத் தொடங்கியது முருகனின் ‘போராட்ட’ பேனா!

“ஆவணங்களை அனுப்புங்கள்!” - மதுரை ஆட்சியர் பதில்

“முருகனுக்கு குடும்ப அட்டை கொடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்?” என்று மதுரை மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரியிடம் கேட்டோம். “எனக்கு அப்படி எந்தப் புகாரும் வரவில்லை; எதனால் நிராகரிக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. அவரை என்னிடம் பேசச் சொல்லுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

இது குறித்து மதுரை ஆட்சியர் வினய்யிடம் பேச முயன்றோம். தொடர்ச்சியான கூட்டங்களில் கலந்துகொண்டிருப்பதால் நேரில் சந்திக்க முடியவில்லை. எனவே, முருகனின் பிரச்னை குறித்து ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கும் மின்னஞ்சலுக்கும் அனுப்பிவைத்தோம். வாட்ஸ்அப்பில் பதில் அனுப்பிய ஆட்சியர், “இந்தப் பிரச்னை பற்றிக் கூடுதல் விவரங்களை அனுப்புங்கள்; நடவடிக்கை எடுக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம்.

இனியாவது முருகனுக்கு குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தருவார்கள் என்று நம்புவோம். இல்லையெனில், முருகன் சொல்கிற ‘அதிகாரிகளின் உள்நோக்கம்’ என்பதை அவர்களே ஒப்புக்கொண்டதுபோலாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism