Published:Updated:

ஜூ.வி ஆக்‌ஷன் - 600-க்கு 591 மார்க்... மாற்றுத்திறனாளி மாணவிக்கு சீட் தர மறுத்த கல்லூரி!

ஜான்சிராணி
பிரீமியம் ஸ்டோரி
ஜான்சிராணி

‘மகளுக்குக் கட்டணமில்லாத சீட் வேண்டும்’ என்று மனு கொடுங்கள். நாங்களும் வருகிறோம்” என்று ஆலோசனை சொன்னோம்.

ஜூ.வி ஆக்‌ஷன் - 600-க்கு 591 மார்க்... மாற்றுத்திறனாளி மாணவிக்கு சீட் தர மறுத்த கல்லூரி!

‘மகளுக்குக் கட்டணமில்லாத சீட் வேண்டும்’ என்று மனு கொடுங்கள். நாங்களும் வருகிறோம்” என்று ஆலோசனை சொன்னோம்.

Published:Updated:
ஜான்சிராணி
பிரீமியம் ஸ்டோரி
ஜான்சிராணி
ஜூ.வி ஆக்‌ஷன் - 600-க்கு 591 மார்க்... மாற்றுத்திறனாளி மாணவிக்கு சீட் தர மறுத்த கல்லூரி!

மாநகராட்சிப் பள்ளியில் படித்து, ப்ளஸ் டூ-வில் 600-க்கு 591 மார்க் எடுத்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு, ‘கட்டணமில்லா சீட்’ கொடுக்க மறுத்திருக்கின்றன அரசு உதவிபெறும் சில தனியார் கல்லூரிகள்!

மதுரை மாவட்டம், வலையங்குளத்தைச் சேர்ந்த கல்யாணிக்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள். கணவர் இறந்துவிட்டதால், மதுரையிலுள்ள கெமிக்கல் கம்பெனிக்குக் கூலி வேலைக்குச் சென்று பிள்ளைகளைப் படிக்கவைத்தார். மகன் கல்லூரியிலும், மகள் சக்தி ஜான்சிராணி மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா நாகம்மையார் பள்ளியிலும் படித்தனர். இரண்டு கைகளும் செயல்படாத மாற்றுத்திறனாளி மாணவியான ஜான்சிராணி குடும்ப வறுமையையும் தாண்டி, 600-க்கு 591 எடுத்தார். ‘மகள் சாதித்துவிட்டாள். காசு செலவில்லாமல் கல்லூரியிலும் இடம் கிடைத்துவிடும்’ என்று எண்ணிய மாணவியின் தாய், மதுரையின் பிரபல அரசு உதவிபெறும் தனியார் மகளிர் கல்லூரியை அணுகியிருக்கிறார். “பி.காமுக்கு கட்ஆஃப்-ஐவிட ஒரு மார்க் குறைகிறதே... செல்ஃப் ஃபைனான்ஸ் காலேஜுல சேர்க்குறீங்களா... 40 ஆயிரம் ஃபீஸ் வரும்...” என்று கேட்டிருக்கிறது கல்லூரி நிர்வாகம்.

ஜூ.வி ஆக்‌ஷன் - 600-க்கு 591 மார்க்... மாற்றுத்திறனாளி மாணவிக்கு சீட் தர மறுத்த கல்லூரி!

‘கட்டணமில்லா சீட் கிடைக்காவிட்டால், மகளைப் படிக்க வைக்கவே வேண்டாம்’ என்ற முடிவுக்கு கடைசியில் அந்தத் தாய் வந்திருக்கிறார். இப்போதுதான், ‘ஜான்சி ராணிக்கு உதவி செய்யுங்கள்’ என்று சிலர் ஜூ.வி-யிடம் கேட்டுக்கொண்டார்கள்.

“ஜூலை 1 அன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாமில், ‘மகளுக்குக் கட்டணமில்லாத சீட் வேண்டும்’ என்று மனு கொடுங்கள். நாங்களும் வருகிறோம்” என்று ஆலோசனை சொன்னோம். அதன்படி மனு கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் தேவையான உதவிகளை உடனே செய்யும்படி மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு உத்தரவிட்டார் கலெக்டர் அனீஸ் சேகர். மாணவியையும், அவரின் தாயையும் அங்கேயே இருக்கும்படி சொன்னார் அந்த அதிகாரி. ஆனால், கலெக்டர் முகாமிலிருந்து புறப்பட்டவுடன், ‘நீங்க கிளம்புங்க. உங்களுக்கு வீட்டுக்குத் தபால் வரும்’ என்று அலுவலர் கைவிரித்துவிட, அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்.

அவர்களை அழைத்துக்கொண்டு கலெக்டரை நேரில் சந்தித்து விவரங்களைச் சொன்னோம். உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரை அழைத்த கலெக்டர் அவரைக் கடிந்துகொண்டதுடன், உடனடியாக மாணவிக்கு அவருக்குப் பிடித்த கல்லூரியில் இலவச சீட் வழங்க, கடிதத்தைத் தயார் செய்ய உத்தரவிட்டார். அதன் பின்பு ஜரூராக வேலைகள் நடந்தன.

ஜூ.வி ஆக்‌ஷன் - 600-க்கு 591 மார்க்... மாற்றுத்திறனாளி மாணவிக்கு சீட் தர மறுத்த கல்லூரி!

தனக்கு சீட் மறுத்த கல்லூரியை வேண்டவே வேண்டாம் என்று மறுத்த மாணவி, மதுரை தியாகராசர் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் சீட் கேட்டார். ஒரு மணி நேரத்தில் ஜான்சிராணி விரும்பிய கல்லூரியில் ஒரு ரூபாய்கூட செலவில்லாமல் சீட் வழங்கும் உத்தரவுக் கடிதம் தயாரானது. நம் முன்னாலேயே மாணவியிடம் உத்தரவை வழங்கினார் கலெக்டர். அதை வாங்கும்போது ஜான்சிராணி முகத்தில் அவ்வளவு ஆனந்தம். அவருக்கு அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்துச் சலுகைகள், கைம்பெண்ணான அவரின் தாய்க்கு உதவித்தொகை கிடைக்கவும், இலவச வீட்டுமனை கிடைக்கவும் ஏற்பாடு செய்வதாகவும் கலெக்டர் உறுதியளித்தார்.

“எங்க கஷ்டத்தைக் கேள்விப்பட்டு, எங்களோட அலைஞ்சு திரிஞ்சு என் பொண்ணு விரும்பின காலேஜுல சீட் கிடைக்க வெச்சுட்டீங்க... ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையை என்றைக்கும் மறக்க மாட்டேன்” என்று குரல் தழுதழுக்கச் சொன்னார் தாய் கல்யாணி.

வாழ்த்தி விடைபெற்றோம்!