Published:Updated:

“சிறைவாசிகளின் குடும்பத்தினர் என் உறவினர்கள்!”

சிறைவாசிகளின் குடும்பத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
சிறைவாசிகளின் குடும்பத்தினர்

ஏதோ ஒரு சாதாரண தகராறில், அல்லது வாக்குவாதத்தில் உணர்ச்சிவசப்பட்டுக் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டதைப் பலரும் சொல்லி அழுதார்கள்

“சிறைவாசிகளின் குடும்பத்தினர் என் உறவினர்கள்!”

ஏதோ ஒரு சாதாரண தகராறில், அல்லது வாக்குவாதத்தில் உணர்ச்சிவசப்பட்டுக் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டதைப் பலரும் சொல்லி அழுதார்கள்

Published:Updated:
சிறைவாசிகளின் குடும்பத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
சிறைவாசிகளின் குடும்பத்தினர்

ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டுச் செய்த குற்றத்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் வாடியபடி குடும்பத்தை நினைத்து நிம்மதியற்றுத் தவிக்கும் சிறைவாசிகள் பலர். அவர்களின் குடும்பங்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிவருகிறார், மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் நோவா.

சிறைவாசிகளின் பிரச்னைகளைக் கேட்பது, அவர்களின் நியாயமான தேவைகளைச் செய்துகொடுப்பது, சிறையிலிருந்தபடியே அவர்களை பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை படிக்க வைப்பது, விடுதலையாகி வந்ததும் அரசு அல்லது தனியார்துறையில் வேலை பெற உதவுவது என்று ஒரு பக்கம் அவர்களுக்கும் சேவை புரிகிறார். இன்னொரு பக்கம் வெளியில் கண்ணீருடன் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறைவாசிகளின் குடும்பத்தினரையும், சமூகத்தோடு இணைய வைப்பது, தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது, அதிலும் குறிப்பாக அவர்களின் பிள்ளைகளுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்து திருமணத்தை நடத்தி வைப்பது, சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் ஆற்றுப்படுத்துவது என ‘அன்புக்கரங்கள்’ என்ற அமைப்பின் மூலம் தொடர்ந்து செயல்பட்டு வரும் நோவாவின் பணிகள் மலைக்க வைக்கின்றன.

நோவா
நோவா

87 வயதாகும் நோவாவைச் சந்திக்கச் சென்றபோது, விஸ்வநாதபுரத்தில் சிறைவாசிகள் குடும்பத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு விருந்து வைபவத்துடன், சீர்ப் பொருள்கள் கொடுத்துத் திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தார். வந்திருந்த ஒவ்வொரு புதுமண ஜோடியும் உருக்கமான ஒரு கதையை வைத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் வந்து மணமக்களையும், பேராசிரியர் நோவாவையும் வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.

நோவாவிடம் பேசினேன். ‘‘எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி. படித்து முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தேன். 1979-ல் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்புக்காக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டேன். மதுரை மத்திய சிறையில் இருந்த 15 நாள்களில் சிறையைப்பற்றியும், அங்கிருந்த சிறைவாசிகள் பிரச்னைகள் பற்றியும் அறிந்து அதிர்ந்துபோனேன்.

“சிறைவாசிகளின் குடும்பத்தினர் என் உறவினர்கள்!”

பல சிறைவாசிகளின் கதைகள் எனக்குக் கவலையை ஏற்படுத்தின. ஏதோ ஒரு சாதாரண தகராறில், அல்லது வாக்குவாதத்தில் உணர்ச்சிவசப்பட்டுக் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டதைப் பலரும் சொல்லி அழுதார்கள். அது மட்டுமல்லாமல், இதனால் தங்கள் குடும்பமும், கொல்லப்பட்டவரின் குடும்பமும் கதியற்று நிற்பதையும் சொல்லிப் புலம்பினார்கள்.

இது ஒருபக்கமென்றால், பணத்துக்காகக் குற்றங்களில் ஈடுபடும் தாதாக்கள், ரவுடிகள் போன்றவர்கள், சாதாரண குற்றத்தில் தண்டனை அனுபவித்து வருபவர்களை மூளைச்சலவை செய்தோ, மிரட்டியோ தங்கள் நோக்கத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள முயல்வதையும் அறிந்தேன்.

வெளியே வந்த பிறகு சிறைவாசிகளின் குடும்பத்தினருக்கு சிறு சிறு உதவிகளைச் செய்தேன். உள்ளே உள்ளவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், அவர்களின் குடும்பத்துக்கு நிரந்தரமாக உதவ வேண்டும் என முடிவு செய்தேன். சிறைக்குள் சென்று கைதிகளைச் சந்திக்க அனுமதி கேட்டு அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்குக் கடிதம் எழுதினேன். 1982-ல் எம்.ஜி.ஆர் தமிழகத்திலேயே முதல் முறையாக எனக்கு அனுமதி வழங்கினார்.

மதுரைச் சிறையிலிருந்து பணியைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் சிறைவாசிகள் என்னை நம்பவில்லை. சந்தேகப்பட்டார்கள். சிறைக்காவலர்களுடன் கைதிகளைச் சந்திக்கச் செல்லும்போது பலவிதமான அனுபவங்கள் கிடைக்கும். சிலர் மகிழ்வார்கள், சிலர் அழுவார்கள், இன்னும் சிலரோ திட்டுவார்கள். ஒருமுறை சிறைவாசி ஒருவர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். ஏனென்று விசாரித்ததற்கு அவருக்கு தண்டனை வழங்கிய நீதிபதிபோல நான் இருந்ததாகக் கூறினார். இப்படிப் பல அனுபவங்கள். ‘அனைத்தும் கடவுளால் நடத்தப்படுகின்றன’ என்பதை திடமாக நம்புகிறவன் என்பதால் இதெல்லாம் ஒரு பிரச்னையாகத் தெரியாது.

“சிறைவாசிகளின் குடும்பத்தினர் என் உறவினர்கள்!”

சிறைவாசிகளுக்கு முதலில் நான் கொடுக்க விரும்பியது கல்வியை. எனக்குத் தெரிந்த பேராசிரியர்களை அழைத்துச் சென்று ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரைக்குமான பாடங்களை நடத்தினோம். ஆங்கிலத்தைத் தனியாகச் சொல்லிக் கொடுத்தோம். கற்பதற்குத் தேவையான புத்தகங்கள், பொருள்களை அவர்களுக்கு வழங்கினோம். சிறை நூலகத்துக்கு அதிகமான புத்தகங்களைக் கொடுத்தோம். சிறை வளாகப் பள்ளிகளைத் தொடங்கினோம். அஞ்சல் வழியில் மேற்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தோம்.அதில் சிறந்த மதிப்பெண் எடுத்தவர்கள், வெளியில் வந்து இன்று நல்ல அரசுப்பணி, தனியார் பணியில் இருக்கிறார்கள். தொழிலதிபராக, பேராசிரியராக, வழக்கறிஞராகப் பலர் பணியாற்றிவருகிறார்கள். இதுபோல் பலனடைந்தவர்களும் என்னுடன் சேர்ந்து சிறைவாசிகளின் மேம்பாட்டுக்காகப் பங்காற்றி வருகிறார்கள். துணைவேந்தர்களைச் சிறைக்கே அழைத்து வந்து பட்டமளிப்பு விழாக்களை நடத்தி மற்ற சிறைவாசிகளையும் படிப்பதற்கு மோட்டிவேட் செய்தோம். டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் பயிற்சி, டைலரிங், உணவுப்பொருள் தயாரித்தல் உள்ளிட்ட தொழிற்கல்வியைக் கற்றுக்கொடுத்து அதன் மூலம் பலர் வெளியில் வந்து தொழில்துறையில் சிறப்பாக இருக்கிறார்கள்.

சிறைவாசிகளின் பிள்ளைகள் கல்வி கற்க அனைத்து உதவிகளையும் செய்தோம். இதன் மூலம் தீவிரமான அரசியல் கொள்கைகளைக் கொண்ட சிறைவாசிகளும் மனம் திருந்தினார்கள். காந்திய சிந்தனையாளர்கள் மூலம் அவர்களுக்கு காந்தியக் கல்வியைக் கற்றுக்கொடுத்து அதில் தேர்வு வைத்துச் சான்றிதழ் வழங்கினோம்.

இதை அறிந்து புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா முதல் டெல்லி திகார் சிறை வரை சேவை செய்ய அழைப்பு வந்து அங்கும் சேவையாற்றினேன். நாங்கள் ஆரம்பித்து வைத்த பணி தற்போது பல சிறைகளிலும் தொடர்கிறது.

இதில் முக்கியமான பணி, திருமணம் செய்து வைப்பது. பொதுவாக கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களின் குடும்பங்களில் சம்பந்தம் செய்துகொள்ள பலர் தயங்குவார்கள். அதுபோல் தந்தை, தாய் அல்லது சகோதரன் கொலை செயப்பட்ட குடும்பத்தில், பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வசதியின்றித் தவிப்பார்கள். அவர்கள் பாதிக்கப்படக் காரணமான சிறைவாசியிடம் பேசுவேன். தான் செய்த குற்றத்துக்கு சட்டம் தந்த தண்டனை ஒருபக்கம் இருந்தாலும் பரிகாரமாக தன் மகனையோ, மகளையோ அக்குடும்பத்தில் சம்பந்தம் செய்ய விரும்புவார்கள். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தால் திருமணம் செய்து வைக்கிறோம். இதன் மூலம் இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பகையும் மறைகிறது. இப்படி 2,000 திருமணங்களை இதுவரை நடத்தி வைத்துள்ளோம். எனக்கு மிகுந்த மனநிறைவு தரும் பணி இது.

“சிறைவாசிகளின் குடும்பத்தினர் என் உறவினர்கள்!”

நான் சிறைகளுக்குச் செல்லும்போது உதவிய சிறை அதிகாரிகள் பலர், தங்கள் ஓய்வுக்குப் பின் என்னுடன் இணைந்து பணியாற்றிவருகிறார்கள் என்பதே மகிழ்ச்சியாக உள்ளது. அதுபோல் சிறைவாசிகளின் குடும்பத்தினர் எனக்கு உறவினர்களாக மாறிவிட்டார்கள்.

சிறைக்குச் செல்பவர்கள் திருந்தி வாழ வேண்டும். செய்த குற்றத்தால் அவர்கள் குடும்பமும், பாதிக்கப்பட்ட குடும்பமும் கவலை அடையக்கூடாது. குற்றங்கள் குறைய வேண்டும், பகை உணர்ச்சி தொடரக்கூடாது என்பதுதான் நோக்கம். இந்த உதவிகளைச் செய்ய அரசிடமோ, வெளிநாட்டிலோ பணம் பெறுவதில்லை. எனக்கென்று பெரிய நண்பர்கள் வட்டம் உண்டு. அவர்கள் ஆளுக்கொரு செலவை ஏற்கிறார்கள். அவர்கள் மூலம் நான் பார்த்திராத நல்ல உள்ளங்கள் உதவி வருகிறார்கள். லயன்ஸ், ரோட்டரி போன்ற அமைப்புகளும் உதவுவார்கள். நாற்பது வருடமாக சிறைச்சாலைகளுக்கும், சிறைவாசிகளின் வீடுகளுக்கும் செல்வதை என் மனைவி ஏனென்று கேட்டதில்லை. நல்ல விஷயத்துக்காகச் செயல்படுகிறேன் என்பது அவருக்குத் தெரியும். இந்தச் செயல்களை நான் செய்ய வேண்டும் என்று கடவுள் என்னைப் படைத்திருக்கிறார். அவர் நினைத்தால் அடுத்த ஆண்டும் என் பணிகள் தொடரும்’’ என்று நிறைந்த மனத்துடன் சொல்லி முடிக்கிறார் நோவா.

துன்பச்சிறைகளில் அன்பு மலரச் செய்யும் சேவை உன்னதமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism