Published:Updated:

ஆலயத்தில் தகர்ந்தது ஆதிக்கம்!

கருப்பசாமி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
கருப்பசாமி கோயில்

21 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோயில் திருவிழா, இந்த வட்டாரத்தில் ரொம்ப பிரபலம். லட்சகணக்கில் மக்கள் கூடுவார்கள்

ஆலயத்தில் தகர்ந்தது ஆதிக்கம்!

21 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோயில் திருவிழா, இந்த வட்டாரத்தில் ரொம்ப பிரபலம். லட்சகணக்கில் மக்கள் கூடுவார்கள்

Published:Updated:
கருப்பசாமி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
கருப்பசாமி கோயில்

“எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து எங்களைக் கோயிலுக்குள்ள போய் கும்பிட அனுமதிச்சதே இல்லை. அசிங்கப்படுத்துவாங்க, அடிப்பாங்க. நொந்துபோய்க் கெடந்தோம். இந்தக் கோயிலுக்குள்ள போயி கும்பிடாமலேயே போய்ச் சேர்ந்துருவேன்னு நெனைச்சேன். இப்ப ஊருல உள்ள இளைஞர்கள்தான் இதற்காகப் போராடி ஜெயிச்சிருக்காங்க. அன்னைக்கு கருப்பசாமி கோயிலுக்குள்ள போய் முதல் முறையா சாமி கும்பிட்டபோது உடம்பெல்லாம் சிலிர்த்தது. எங்க குலசாமி எங்களைக் காப்பாத்திருச்சு’’ என்று கண்கலங்குகிறார் அந்தப் பெரியவர்.

ஆலயத்தில் தகர்ந்தது ஆதிக்கம்!

சமீபத்தில் ஆ.கொக்குளம் பேக்காமன் கருப்பசாமி கோயிலின் உள்ளே சென்று வழிபட்டவர்களில் இவரும் ஒருவர். இவரைப் போல வேதனை, வலியுடன் பல வருடங்களாக வாழ்ந்து வந்தவர்களின் முகத்தில் இப்போதுதான் மகிழ்ச்சியின் வெளிச்சத்தைப் பார்க்க முடிகிறது.

தங்கள் முன்னோர்கள் உருவாக்கிய கோயிலின் உள்ளே சென்று வழிபடும் உரிமையை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இழந்திருந்த ஆ.கொக்குளத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள், ஜூலை 30-ம் தேதி தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டினர். உரிமையைப் பெற்ற விடுதலை உணர்வு அவர்கள் முகங்களில் தெரிந்தது.

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகேயுள்ளது ஆ.கொக்குளம். இங்குள்ள பேக்காமன் கருப்பசாமி கோயில் பிரசித்தி பெற்றது. 21 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோயில் திருவிழா, இந்த வட்டாரத்தில் ரொம்ப பிரபலம். லட்சகணக்கில் மக்கள் கூடுவார்கள். இக்கோயிலின் புரவியெடுப்பு, பன்றிகுத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் பட்டியலின மக்கள் பங்கெடுத்தாலும், பட்டியல் இனத்தவரே பூசாரிகளாக இருந்தாலும், ஊரிலுள்ள பட்டியலின மக்களுக்கு மட்டும் கோயிலுக்குள் சென்று வழிபட உரிமை மறுக்கப்பட்டு வந்தது.

ஆலயத்தில் தகர்ந்தது ஆதிக்கம்!

இந்நிலையில்தான் ‘கருப்பசாமி கோயிலில் உள்ளே சென்று வழிபடும் உரிமை வேண்டும்’ என்று அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட ஆரம்பித்த மக்கள், பின்பு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். விசாரணை செய்த நீதிபதிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்கள்.

‘கோயிலில் அனைத்து சாதியினரும் வழிபட உரிமை உள்ளது. இது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமான கோயில் அல்ல’ என்று அதிகாரிகள் சொன்னதை ஆதிக்கச்சாதியினர் ஏற்கவில்லை. இந்நிலையில்தான் ‘ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவோம்’ என்று அறிவித்தார்கள் பட்டியலின மக்கள். அதைத் தொடந்து நடைபெற்ற சமாதானக் கூட்டங்களுக்குப் பிறகும் ஆதிக்கச் சாதியினர் ஒத்துவராததால், ஜூலை 30-ம் தேதி காவல்துறையினர் பாதுகாப்புடன் பட்டியலின மக்களைக் கோயிலுக்குள் சென்று வழிபட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நாளை வெற்றி தினமாகப் பார்க்கிறார்கள் பட்டியலின மக்கள். சட்டப்படி இந்த நிகழ்வு நடந்தாலும், ஆதிக்கச்சாதியினர் மத்தியில் இன்னும் சலசலப்புகள் உள்ளதால், ஆ.கொக்குளத்திலும் கோயில் வளாகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாகத் தொடர்ந்த இந்தப் பிரச்னையில் பட்டியலின மக்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரும்போதெல்லாம், உள்ளூர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி சமரசம் பேசி நீர்த்துப் போக வைத்து வந்தார்கள். இம்முறை இதற்கு முடிவு கட்டியவர் அன்பழகன் என்ற இளைஞர்தான். பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் அன்பழகனிடம் பேசினேன்.

‘‘படித்து, நல்ல வேலையில் அமர்ந்து நகரங்களில் மரியாதையாக வாழ்ந்தாலும், சொந்த ஊரில் சமத்துவம் இல்லாத சூழலே நிலவுகிறது. ஒருமுறை ஊருக்கு வந்திருந்த சமயத்தில் கருப்பசாமி கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது, கோயிலுக்குள் விடாமல் தடுக்கப்பட்டேன். ஏன் என்று கேட்டதற்கு ‘ஒங்க சாதிக்கு அனுமதி இல்லை, வெளியே நின்னு கும்பிட்டுட்டுப் போ’ன்னு சொன்னாங்க. மீறிச் சென்றதற்குத் தாக்கினார்கள். அதன் பின்புதான் இந்தக் கொடுமையைத் தொடர விடக்கூடாதுன்னு ஊரில் உள்ளவர்களிடம் பேசி சட்டப் போராட்டம் நடத்தத் தயாரானோம்’’ என்றார்.

ஆலயத்தில் தகர்ந்தது ஆதிக்கம்!

நம்மிடம் பேசிய தமிழ் முதல்வன், ‘`ஒரு காலத்தில் பட்டியலின மக்கள் அதிகம் வாழ்ந்த ஊர் இது. இப்போது ஆதிக்க சாதியினர் 400 குடும்பங்களும், எங்கள் மக்கள் 200 குடும்பங்களும் இங்கு இருக்கிறார்கள். விவசாய நிலங்கள் எங்கள் மக்களிடம்தான் அதிகம் இருந்தது. நாளடைவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் கைவிட்டுப்போயின. அதுபோல எங்கள் குலதெய்வமான கருப்பசாமி கோயிலும் எங்கள் கட்டுப்பாட்டிலிருந்து போய்விட்டது. இத்தனைக்கும் கருப்பசாமி கோயிலில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் பரம்பரைப் பூசாரிகளாக இருந்து கோயிலுக்கு அருகிலேயே வசிக்கிறார்கள்.

ஆரம்பக்காலங்களில் எல்லா மக்களும் எந்தப் பாகுபாடும் இல்லாமல்தான் வழிபட்டு வந்துள்ளார்கள். முதலில் எங்களை அப்புறப்படுத்த, கோயிலைச் சுற்றிச் சுவர் கட்டுவதாகக் கிளம்பினார்கள். அதிலும் எங்கள் மக்களின் பங்களிப்பும் இருந்தாலும் அவர்கள்தான் கோயிலை நிர்வாகம் செய்வதுபோல் நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். சுவரை எழுப்பி எங்கள் மக்களை சுவருக்கு வெளியே நிற்க வைத்துவிட்டார்கள். அன்று முதல் சுவரைத் தாண்டி கோயிலுக்குள் சென்று வழிபட எங்கள் மக்கள் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தாலும், அவர்கள் வைத்ததே சட்டம் என்றாகிவிட்டது. பூசாரிகள் எங்கள் சாதியாக இருந்தபோதும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள் மூலமே எங்களை கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொல்ல வைத்துவிட்டார்கள். அரசுப் பதிவேடுகளில் ‘கருப்பசாமி கோயில்’ என்றுதான் இருக்கிறது. பேக்காமன் என்கிற பெயரை இடையில் சேர்த்துவிட்டார்கள்.

அவ்வப்போது கோயிலுக்குள் நுழைய எங்கள் மக்கள் முயற்சி செய்வார்கள். அவர்கள் தடுப்பார்கள், தாக்குதல் நடத்துவார்கள். காவல்துறையினரும் ‘ஊர்க்காரர்கள் சொல்வதைக் கேட்டு நடங்கள்’ என்று பாதிக்கப்பட்ட எங்களுக்கே அறிவுரை சொல்வார்கள். இந்நிலையில்தான் அன்பழகன் கோயிலுக்குப் போனபோது தாக்குதல் நடத்தினார்கள். ‘இந்தச் சம்பவமே கடைசியா இருக்கட்டும். இனி யாரும் தாக்கப்படக் கூடாது, கோயிலுக்குள் நுழைவதுதான் இதற்குத் தீர்வாக இருக்கும்’னு முடிவெடுத்தோம். எங்கள் ஊர்ப் பெண் கமலா, உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அதன் விளைவாகத்தான் கோயில் நுழைவு சாத்தியமானது’’ என்றார்.

தமிழ் முதல்வன், கமலா, அன்பழகன்
தமிழ் முதல்வன், கமலா, அன்பழகன்

கமலாவிடம் பேசினோம். ‘`வீட்டில் நல்ல நிகழ்ச்சி நடந்தாலோ, தொழில் தொடங்கினாலோ, குழந்தை பிறந்தாலோ குலசாமி கோயிலுக்குப் போய் வழிபட முடியாத நிலை இருந்தது. இது எல்லோருக்கும் பெரும் மன வேதனையைக் கொடுத்தது. எல்லோருமே உழைப்பாளிகள்தான். அப்புறம் என்ன ஏற்றத்தாழ்வு? எங்க ஆட்கள் ரொம்ப காலம் இதை சகிச்சுக்கிட்டு வந்துட்டாங்க. இனிமேலும் இந்தக் கொடுமை தொடரக்கூடாதுன்னுதான் வழக்கு போட்டோம். இப்ப எங்க மக்கள் கோயிலுக்குள்ள போனதைப் பார்த்த பிறகுதான் மனசு லேசாகியிருக்கு’’ என்றார் அவர்.

ஆ.கொக்குளம் பட்டியலின மக்களின் மகிழ்ச்சி தொடரவேண்டும்.