Published:Updated:

போதை மறுவாழ்வு மையம் அருகே மதுக்கடை!

போதை மறுவாழ்வு மையம்
பிரீமியம் ஸ்டோரி
போதை மறுவாழ்வு மையம்

கொண்டுவரத் துடித்த அதிகாரிகள்... தடுத்து நிறுத்திய உயர் நீதிமன்றம்

போதை மறுவாழ்வு மையம் அருகே மதுக்கடை!

கொண்டுவரத் துடித்த அதிகாரிகள்... தடுத்து நிறுத்திய உயர் நீதிமன்றம்

Published:Updated:
போதை மறுவாழ்வு மையம்
பிரீமியம் ஸ்டோரி
போதை மறுவாழ்வு மையம்

க்களைப் பற்றிக் கவலைப்படாமல், மது விற்பனையின் மூலம் வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் செயல்படும் தமிழக அரசு, போதை மறுவாழ்வு மையம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அருகிலேயே மதுக்கடையைத் திறக்க முயற்சி செய்த சம்பவம், மதுரையில் அரங்கேறியுள்ளது. நல்லவேளையாக... இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டுத் தடுத்து நிறுத்தவே, மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

பழைய மதுக்கடை
பழைய மதுக்கடை

பா.ம.க உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கால், உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டன. அப்படி அடைக்கப்பட்ட மதுக்கடைகள், வெவ்வேறு இடங்களிலும் புற்றீசல்போல் முளைத்துவருகின்றன. இதுமட்டுமன்றி, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் லைசென்ஸ் பெற்ற தனியார் பார்களும் பெருகிவருகின்றன.

பல்வேறு ஊர்களிலும் வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, சந்தை என விதிகளைக் கொஞ்சமும் மதிக்காமல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுவருகின்றன. மதுரை அழகர்கோயில் செல்லும் வழியில் நாயக்கன்பட்டியில் ஏற்கெனவே மூடப்பட்ட மதுக்கடையை, புதிய இடத்தில் திறப்பதாகச் சொல்லி, போதை மறுவாழ்வு மையம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் திறக்க முயற்சி செய்ய, விவகாரம் உயர் நீதிமன்றம் வரையில் சென்றது. வழக்கு தாக்கல் செய்த எம்.ஏ.வி.எம்.எம். பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேசினோம், ‘‘எங்கள் கல்லூரியில் 1,025 மாணவர்களும், 130 மாணவிகளும் படிக்கின்றனர். விடுதியில் 120 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். எங்கள் கல்லூரிக்கு அருகில் போதை மறுவாழ்வு மையம் உள்ளது. அங்கு 60 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகத்தான், இந்தக் கல்லூரியை நடத்திவருகிறோம். இந்த நிலையில் எங்கள் கல்லூரி அருகில் மதுக்கடை திறக்க அதிகாரிகள் முயற்சி செய்ததை அறிந்து, மதுரை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போதை மறுவாழ்வு மையம்
போதை மறுவாழ்வு மையம்

இரண்டு வருடங்களுக்கு முன் இதே பகுதியில் திறந்த மதுக்கடையை மூடச்சொல்லி அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே மதுரை தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான அண்ணாதுரை தலைமையில் இந்தப் பகுதி மக்கள் கடையை மூடச்சொல்லி போராட்டம் நடத்தினர். அதில், கடையைச் சேதப்படுத்தியதாக அண்ணாதுரை, கல்லூரி முதல்வர் பாண்டியன் உட்பட பலர்மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில்தான் முன்பு இருந்த கடைக்குக் கொஞ்சம் தள்ளி புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்டி, கடை திறக்க தயாராகிவந்தனர். அப்படித் திறந்தால், எங்கள் கல்லூரி மாணவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்ல வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, இந்தப் பகுதியில் கும்பல் கூடி பல பிரச்னைகள் உண்டாகும். போதையில் இருந்து மீண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள், மீண்டும் மதுப்பழக்கத்துக்கு ஆளாகும் நிலையும் ஏற்படும்.

கல்லூரி வளாகத்தின் பின்புறம் திறக்கப்பட இருந்த புதிய மதுக்கடை
கல்லூரி வளாகத்தின் பின்புறம் திறக்கப்பட இருந்த புதிய மதுக்கடை

இவ்வளவு பாதிப்புகள் இருக்கும் என்று தெரிந்தும், அரசு அதிகாரிகள் இங்கு மதுக்கடையைத் திறக்க ஆர்வம்காட்டலாமா என்ற ஆதங்கம் ஏற்பட்டது. அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. எனவேதான், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டோம்’’ என்றார்கள் நிம்மதியுடன்.

போதை மறுவாழ்வு மையத்தினரிடம் பேசியபோது, ‘‘போதைக்கு அடிமையான ஒருவரைத் திருத்துவது எவ்வளவு பெரிய விஷயம். அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பக்கத்திலேயே மதுக்கடையைக் கொண்டுவரத் துடிக்கும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது?’’ என்று வருத்தப்பட்டார்கள்.

‘‘மதுக்கடை வரக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தாலும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் சிலர் மதுக்கடை வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். மதுக்கடையைத் திறந்தால், பார் மூலம் வருமானம் பார்க்கலாம் என்பதுதான் அவர்களின் ஆர்வத்துக்குக் காரணம். அழகர்கோயில் திருவிழா நேரத்தில் இந்தப் பகுதியில் கூட்டம் அதிக அளவில் வரும். இங்கே மதுக்கடையைத் திறக்க முயற்சி செய்ததற்கு அதுவும் ஒரு காரணம்’’ என்றனர் ஊர்மக்கள்.

மதுக்கடை திறக்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், ‘‘மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் எத்தனை? சட்டவிரோத மதுபானக் கூடங்கள் எத்தனை? போதை நபர்களின் தொல்லையைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? மதுபானக் கூடங்கள் சுகாதாரமாகச் செயல்படுகின்றனவா?’’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, பதில் மனு தாக்கல் செய்ய டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பொருந்தாத இடத்தில் அமையவிருந்த ஒரு மதுக்கடை, கல்லூரி நிர்வாகத்தின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு ஊர்களிலும் இப்படி பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் வழிபாட்டுத்தலம் ஆகியவற்றின் அருகே மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளனவே... அவற்றை எல்லாம் மூட, உயர் நீதிமன்றத்தை அணுகினால்தான் தீர்வு கிடைக்குமா? அப்படியென்றால், இந்த அரசும் அரசு நிர்வாகமும் கொஞ்சமும் பொறுப்பின்றி, வருவாய் ஒன்றை மட்டுமே பிரதான குறிக்கோளாகக்கொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism