Published:Updated:

ரூ.228 கோடி அபராதம்... அத்துமீறும் டோல்கேட்... கொந்தளிப்பில் மதுரை!

மதுரை  டோல்கேட்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை டோல்கேட்

10 வருடங்கள் ஆட்சியில் இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது நீங்கள் போராட்டம் நடத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளதே?

ரூ.228 கோடி அபராதம்... அத்துமீறும் டோல்கேட்... கொந்தளிப்பில் மதுரை!

10 வருடங்கள் ஆட்சியில் இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது நீங்கள் போராட்டம் நடத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளதே?

Published:Updated:
மதுரை  டோல்கேட்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை டோல்கேட்

‘கடந்த இரண்டு வருடங்களாக டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் சென்றிருக்கிறீர்கள். ஒரு வாரத்துக்குள் அபராதத்துடன் முழுத்தொகையைச் செலுத்தவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் பொதுமக்களுக்கு அனுப்பியிருக்கும் வக்கீல் நோட்டீஸை அடுத்து, ‘டோல்கேட் வசூல் அராஜகம்’ கோஷம் மதுரையிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது!

10 வருடங்களுக்கு முன்பு, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் டோல்கேட் அமைக்கப்பட்டது. அப்போதே இந்தத் திட்டத்தை மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டங்களின்போது, ‘உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது’ என்று டோல்கேட் நிர்வாகம் வாக்குறுதி அளித்தது. ஆனால், மீண்டும் வாக்குறுதியை மறந்து கட்டண வசூலில் ஈடுபட்டது. வாக்குறுதி தருவது, பின் அதை மறப்பது என்பது தொடர்கதையானது. இத்தனை ஆண்டுகளாகத் தொடந்துவந்த இந்தப் பிரச்னை, டோல்கேட் அனுப்பிய வக்கீல் நோட்டீஸால் உச்சமடைந்திருக்கிறது.

ஆர்.பி.உதயகுமார் கைதானபோது..
ஆர்.பி.உதயகுமார் கைதானபோது..

இந்தப் பிரச்னையில் தொடர்ச்சியாகப் போராடிவரும் கப்பலூர் சிட்கோ தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் ரகுநாதராஜா நம்மிடம் பேசினார். ‘‘இங்கு டோல்கேட் அமைப்பது விதி மீறலானது. நகராட்சியிலிருந்து 5 கி.மீ தூரத்துக்குள் டோல்கேட் அமைப்பதாக இருந்தால் நகராட்சி நிர்வாகத்திடமும், 10 கி.மீ தூரத்துக்குள் இருந்தால் மாநில அரசிடமும் அனுமதி வாங்க வேண்டும். திருமங்கலம் நகராட்சியிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்திருக்கும் கப்பலூர் டோல்கேட் எந்த அனுமதியும் பெறவில்லை. அதுபோல் ஒரு டோல்கேட்டிலிருந்து 60 கி.மீ தூரத்துக்குள் மற்றொரு டோல்கேட் அமைக்கக் கூடாது என்ற விதி இருக்கும்போது, கொடை ரோடு, மேலூர் சிட்டம்பட்டி, சாத்தூர் டோல்கேட்டுக்கு இடையில் கப்பலூரில் கேட் அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது.

‘உள்ளூர் மக்களுக்குக் கட்டண விலக்கு’ என்று முதலில் சொன்ன டோல்கேட் நிர்வாகம், பின்னர் கட்டணம் கேட்பதுவும், கலெக்டர் தலைமையில் அதற்குச் சமாதானக் கூட்டம் நடைபெறுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது. தற்போதைய கலெக்டர் அனீஸ் சேகரும் ‘உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்று கடந்த வருடமே உத்தரவு போட்டிருக்கிறார்.

ரூ.228 கோடி அபராதம்... அத்துமீறும் டோல்கேட்... கொந்தளிப்பில் மதுரை!

கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டைக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும். கலெக்டரிடம் முறையிட்டு 450 வாகனங்கள் கட்டணமின்றி சென்று வர அனுமதி வாங்கினோம். ஆனால், இப்போது அபராதத்துடன் பணம் கட்டச் சொல்லி எங்களுக்கும், திருமங்கலத்திலுள்ள நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் பொதுமக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், திருமங்கலம் வந்து செல்லும் டவுன் பஸ்களையும் 28 கோடி ரூபாய் அபராதம் கட்டச் சொல்லியிருக்கிறார்கள். அந்த பஸ்களின் மொத்த மதிப்புக்கூட அந்த அளவுக்கு இருக்காது. எனவே, இந்த டோல்கேட்டை அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசுதான் இனி முயற்சி எடுக்க வேண்டும்’’ என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, கப்பலூர் டோல் பிளாசா மேனேஜரிடம் பேசினோம். ‘‘இதில் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. எல்லாமே தலைமை அலுவலகத்திலிருந்து வரும் உத்தரவுப்படிதான் கட்டணம் வசூலிக்கிறோம். உள்ளூர் மக்களை இலவசமாக விடுவதற்கு எந்த விதியும் இல்லை. வேண்டுமென்றால், மாதம் 350 ரூபாய்க்கு பாஸ் எடுத்து வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு வருடக் கட்டணத்தைக் கட்டச் சொல்லி நாங்கள் நோட்டீஸ் அனுப்பவில்லை. எங்கள் தலைமை அலுவலகம் அனுப்பியிருக்கலாம்’’ என்றார்.

இதையடுத்து, ‘மதுரை - கன்னியாகுமரி டோல்வே லிமிடெட்’டின் வழக்கறிஞர் சசிகுமாரிடம் இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டோம். “இந்தியாவில் எந்த டோல்கேட்டிலும் உள்ளூர் மக்கள் கட்டணம் செலுத்தாமல் செல்லும் நடைமுறை இல்லை. உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாதென்று உத்தரவிட கலெக்டருக்கும் அதிகாரமில்லை. எனவே, திருமங்கலம் பகுதி மக்கள் இரண்டு வருடத்துக்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். அனைத்து அனுமதியும் பெற்றுத்தான் டோல்பிளாசா அமைக்கப்பட்டிருக்கிறது. நகராட்சி எல்லைக்குள் இருந்தால் கட்டணம் வாங்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. நகரங்கள் விரிவாகும்போது அனைத்து டோல்கேட்டுகளும் நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் வந்துவிடுவது இயல்பானது. எனவே, சட்டப்படிதான் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்” என்றார்.

ரகுநாதராஜா
ரகுநாதராஜா

கப்பலூர் டோல்கேட்டுக்கு எதிராகக் கையெழுத்துப் போராட்டம் நடத்தி கைதான முன்னாள் அமைச்சரும், தற்போதைய தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஆர்.பி.உதயகுமாரிடம் ‘‘10 வருடங்கள் ஆட்சியில் இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது நீங்கள் போராட்டம் நடத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளதே?’’ என்று கேட்டோம், “எங்கள் ஆட்சியின்போது, கப்பலூர் டோல்கேட்டால் உள்ளூர் மக்களுக்குப் பிரச்னை ஏற்படும்போதெல்லாம் பலமுறை சமாதானக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாதென்று எழுதி வாங்கியிருக்கிறோம். எனவே, அப்போது நிலைமை சுமுகமாக இருந்தது. ஆனால், இப்போதுதான் ஏழு நாள்களுக்குள் 228 கோடி ரூபாயைக் கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்பி மிரட்டுகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு ஒரு கோடி, 80 லட்சம் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். இதை எப்படி ஏற்றுக்கொள்வது... 60 கி.மீ-க்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த டோல்கேட்டை அப்புறப்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் மதுரை கலெக்டரின் கவனத்துக்கு தொடர்ச்சியாக எடுத்துச்சொல்கிறோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால்தான் கையெழுத்து இயக்கப் போராட்டம் தொடங்கினோம்’’ என்று சமாளித்தார்.

2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, “தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும்” என்று மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதி என்ன ஆனது?