Published:Updated:

“உணவும் தண்ணீரும் உடனடியாகத் தருகிறோம்!”

பிரியா பாபு
பிரீமியம் ஸ்டோரி
பிரியா பாபு

பேரிடர்க் காலங்களில் உணவு கொடுப்பதை ஒரு சடங்குபோலச் செய்யக் கூடாது. யாருக்கு உணவு தேவையோ அவர்களைத் தேடிப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் திட்டம்.

“உணவும் தண்ணீரும் உடனடியாகத் தருகிறோம்!”

பேரிடர்க் காலங்களில் உணவு கொடுப்பதை ஒரு சடங்குபோலச் செய்யக் கூடாது. யாருக்கு உணவு தேவையோ அவர்களைத் தேடிப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் திட்டம்.

Published:Updated:
பிரியா பாபு
பிரீமியம் ஸ்டோரி
பிரியா பாபு

"சிறிய அளவில் உணவு கொடுக்க ஆரம்பிச்சோம். அந்த சேவை இப்ப கொஞ்சம் கொஞ்சமா பெருசாகிட்டு வருது. உதவி பெறுபவர்கள் எங்களை உறவினர்களாக நினைக்க ஆரம்பிச்சது பொறுப்பை அதிகமாக்கியுள்ளது” என்று சொன்னபடி, வாகனத்தில் வந்த உணவுப்பொருள் பொதிகளைச் சுமந்து சென்று வீட்டில் ஓரமாக அடுக்கிவைக்கிறார் பிரியா பாபு.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகள், முதியவர்கள், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், சாலையோரத்தில் வாழும் ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு உதவிவருகிறார், மதுரையைச் சேர்ந்த திருநங்கை பிரியா பாபு. கடந்த காலங்களில் மூன்றாம் பாலினத்தவர்களை இழிவாகவும் ஏளனமாகவும் பார்த்த சமூகத்தின் உளவியலை மாற்றியமைத்தவர்களில் பிரியா பாபுவும் முக்கியமானவர். திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலாளர்கள் என்று பார்க்கப்படுவதைக் கடந்து அவர்களைப் படிக்க வைக்கவும், பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்க ஊக்குவிப்பவராகவும் இருக்கிறார். ஆவணப்படம் இயக்கியும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய பிரியா பாபு எழுதிய புத்தகங்கள் கல்லூரிகளில் பாடமாக உள்ளன. திருநங்கைகளின் வரலாறு மற்றும் வாழ்வியல் பற்றிய ஆவணக் காப்பகத்தை மதுரையில் நிர்வகித்துவருகிறார்.

“உணவும் தண்ணீரும் உடனடியாகத் தருகிறோம்!”
“உணவும் தண்ணீரும் உடனடியாகத் தருகிறோம்!”

பிரியா பாபுவிடம் பேசினேன். ‘‘பேரிடர்க் காலங்களில் உணவு கொடுப்பதை ஒரு சடங்குபோலச் செய்யக் கூடாது. யாருக்கு உணவு தேவையோ அவர்களைத் தேடிப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் திட்டம். கடந்த ஆண்டு ஊரடங்கின்போது எட்டு லட்சம் ரூபாய் வரைக்கும் உதவிகள் செய்தோம்.

இந்த இரண்டாவது அலை ஊரடங்கில் கஷ்டப்படுபவர்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. தற்போது ஒரு மாதத்தைக் கடந்து உதவிகள் செய்துவருகிறேன். முதலில் சாலையோர ஆதரவற்றோர்களைத் தேடிச் சென்று உணவு, தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் போன்றவற்றைக் கொடுத்தோம். அதன்பின் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள், திருநங்கை, திருநம்பிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கிவருகிறோம். ஆரம்பத்தில் உதவிசெய்ய தன்னார்வலர்கள் இல்லாமல் சிரமப்பட்டேன். என்னுடன் இருக்கும் 3 பேர் உதவியுடன் வேலை செய்தோம். பிறகு கல்லூரி மாணவர்கள், நண்பர்கள் உதவிக்கு வந்தனர். நாங்கள் செய்யும் சேவையின் நேர்மையைப் புரிந்துகொண்ட நன்கொடையாளர்கள் உதவ ஆரம்பித்தார்கள். இன்னும் நிறைய நன்கொடையாளர்கள் தேடி வருகிறார்கள். ஆனால், களத்தில் செல்வதற்கு தன்னார்வலர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். கொரோனா ஊரடங்கு காலம் மட்டுமல்லாமல் எல்லாக் காலங்களிலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

“உணவும் தண்ணீரும் உடனடியாகத் தருகிறோம்!”
“உணவும் தண்ணீரும் உடனடியாகத் தருகிறோம்!”

இந்த சேவை மூலம் புதிய உறவுகள் கிடைத்துள்ளன. சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உள்ளது. அதைக் கேட்டு அவர்களை ஆற்றுப்படுத்துகிறோம். தங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஆதரவற்றவர்களும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நன்றாக வாழ்ந்துவிட்டு, பிள்ளைகளால், உறவினர்களால் துரத்தி விடப்பட்டவர்களும், ஏதோ ஒரு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஆதரவில்லாமல் வாழ்பவர்களும் அதிகம் உள்ளனர். இவர்களைத் தேடிப் பிடித்து உணவு தருகிறோம்.

சிலர், ‘எங்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அழுக்காக இருப்பதால் யாரும் குடிக்க தண்ணீர்கூடத் தர மாட்டேன் என்கிறார்கள். இரவில் பசிக்கிறது. அதற்கும் ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கேட்டபோது எங்களுக்கு வேதனையாகிவிட்டது. அதன்பிறகு உணவுடன் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகள் கொடுக்கத் தொடங்கினோம். மக்கள் நடமாட்டமுள்ள முக்கிய இடங்களில் குழுமி இருப்பவர்களை நாங்கள் தேடிச் செல்வதில்லை. காரணம், அங்கு வேறு சிலர் உணவு கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். அதனால், உதவி சென்று சேராத இடங்களாகப் பார்த்து அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்குகிறோம். ஆதரவற்றவர்களில் மிக நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். ‘எனக்கு வேறொருவர் சாப்பாடு கொடுத்துவிட்டார். அதோ அவருக்குக் கொடுங்க’ என்று மனிதாபிமானத்துடன் மற்றவரைக் கைகாட்டுவார்கள்.

“உணவும் தண்ணீரும் உடனடியாகத் தருகிறோம்!”
“உணவும் தண்ணீரும் உடனடியாகத் தருகிறோம்!”

சாலையோரத்தில் வசிப்பவர்களை அரசு விடுதிகளில் சேர்க்கலாம் என்றால், அவ்வளவு பேரும் தங்க அங்கு வசதியில்லை. அது மட்டுமல்லாமல் இந்த ஊரடங்கால் ஆதரவற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. உதாரணத்துக்கு, கடந்த வருடம் பூக்கட்டிப் பிழைத்த பெண்மணி ஒருவர், கடன் தொல்லையால் இந்த ஊரடங்கில் ஆதரவற்று வீதிக்கு வந்து உணவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இதுபோல் பல கொடுமையான கண்ணீர்க் கதைகளைக் கேட்க நேர்ந்தது.

“உணவும் தண்ணீரும் உடனடியாகத் தருகிறோம்!”

டிரை சைக்கிள் ஓட்டுபவர்கள், செருப்பு தைப்பவர்கள் என்று எளிய தொழில்களைச் செய்து பிழைத்த பலர் இப்போது வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவிகள் வழங்குகிறோம். இன்னொரு முக்கிய விஷயம், ஒரு இடத்தில் நாம் உணவு வழங்கிய ஆதரவற்றவர்கள் அங்குள்ளவர்களால் விரட்டப்பட்டு வேறொரு இடத்துக்குப் போய்விடுவார்கள். அவர்களையும் தேடிப்பிடித்து உணவு வழங்குகிறோம். எங்கள் நோக்கம் ஒன்றுதான், உணவும் தண்ணீரும் கிடைக்காத ஆதரவற்றவர்களுக்கு அவை தினமும் கிடைக்கவேண்டும்’’ என்றார் பிரியா பாபு.

சமூக ஒதுக்குதலின் வலியை நன்கு அறிந்தவர் என்பதால், ஆதரவற்றவர்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார் பிரியா பாபு.