என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: இது வடக்கம்பட்டி கோமாளி ஆட்டம்!

வடக்கம்பட்டி கோமாளி ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
வடக்கம்பட்டி கோமாளி ஆட்டம்

ஹரிணி ஆனந்தராஜன்

மதுரை மாவட்டம், கருமாத்தூர் வடக்கம்பட்டியைச் சேர்ந்த கோமாளி ஆட்டக் கலைஞர்களின் ஆட்டம், மதுரை சுற்றுவட்டார கிராமங்களில் மிக பிரபலம். இவர்களைப் பரவலாக ‘வடக்கம்பட்டி கோமாளி’ என்று கூறுவார்கள். பெரும்பாலும் துக்க வீடுகளில் ஆடும் நடனக் கலைஞர்களான இவர்களின் குழுவில் 6 இசைக் கலைஞர்கள், 2 ஸ்த்ரீ பாட்டு பாடுபவர்கள், 4 ஆட்டக்காரர்கள். அவர்களிடம் பேசினோம்.

‘`சுமார் 8 மணி நேரம் ஆடுவோம். ராஜா, ராணி ஆட்டத்துல தொடங்கி குறவன், குறத்தி ஆட்டம், அதைத் தொடர்ந்து மூக்காயி ஆட்டம், பேயாட்டம், நல்லதங்காள் ஆட்டம், கடைசியா சாமி ஆட்டத்துல முடிப்போம். ஆம்பளைங்க பொம்பள வேஷம்போட்டு தெம்மாங்கு இசைக்கு ஆடுறது வழக்கம். தவில், உருமி, நாதஸ்வரம்னு இசைக் கருவிகளைப் பயன்படுத்துறோம்.

2K kids: இது வடக்கம்பட்டி கோமாளி ஆட்டம்!
2K kids: இது வடக்கம்பட்டி கோமாளி ஆட்டம்!

துக்க வீடுகள்ல உயிர் பிரிஞ்சு கிடக்குறவங் களோட வாழ்க்கையைப் பாட்டா பாடுவோம், கதையா சொல்லுவோம். கல்யாணம், காட்சி, கழனி, புள்ளைங்கனு இந்தப் பாட்டுங்க எல்லாம் எல்லாருக்கும் பொதுவாதான் இருக்கும். அதனால, இதையெல்லாம் பாட எல்லாருக்கும் ஒரே மாதிரி வரிகள்தான். அது தவிர்த்து, செத்துப்போனவங்களுக்கு புள்ளை இருக்கா, எத்தனை புள்ளைங்க, ஆண் எத்தனை, பொண்ணு எத்தனை, அவங்களோட துணை யாரு, என்னன்னு அந்த வீட்டு ஆளுங்ககிட்ட கேட்டுக்கிட்டு சேர்த்துப் பாடுவோம். உக்காந்து யோசிச்சுலாம் எதுவும் எழுதிக்கிறதில்ல. குரலெடுத்தா தானா வரும்.

துக்க வீடுகள்ல மட்டுமல்ல, கோயில் விசேஷங்கள்லயும் நாங்க ஆடுவோம். மகா சிவராத்திரி அன்னிக்கு கருமாத்தூர் பக்கம் பரவலா ‘மாசிப்பச்சை’ திருவிழா நடக்கும். அதுல எங்க நடனத்துக்கும், எங்க பங்காளிகளான வடக்கம்பட்டி கொட்டுக்காரங்களோட தவிலுக்கும் தனி இடமுண்டு. குலதெய்வ வழிபாட்டுல ஏற்பட்ட பிரச்னையால, எங்க சனங்களுக்குள்ள ஒரு பிளவு ஏற்பட்டு, எங்கள்ல இருந்து பிரிஞ்சுபோன பங்காளிங்க கூட்டம்தான் இந்த வடக்கம்பட்டி கொட்டுக்காரங்க.

எல்லாரையும் ரசிக்க வைப்போம், சிரிக்க வைப்போம். கைக்கு ஒண்ணும் பெருசா கிடைக்கிறதில்ல. ஆனாலும் இந்த ஆட்டத்தைவிட்டு வெளியேறி வேற வேலையைப் பார்த்துட்டுப் போக எங்களுக்கு மனசு இல்ல. மனுசப்பய சாகுறப்போவும் அங்க தேவைப்படுற ஒரு கலை இதுங்கிறதுல எங்களுக்குப் பெருமை.

2K kids: இது வடக்கம்பட்டி கோமாளி ஆட்டம்!

முன்னயெல்லாம் பொண்ணுங்க எங்க நடனத்துல ஆட வர மாட்டாங்க. ஆம்பளைங்க தான் பொம்பளைங்க வேஷம் போட்டு ஆடுவோம். இப்போ சில பொண்ணுங்க ஆட வர்றாங்க. கூட்டத்துலதான் எங்க பொழப்புங்கிற நிலையில, இந்தக் கொரோனா பொது முடக்கத்தால, ஒரு வருஷமா எந்த வாய்ப்பும் வருமானமும் இல்லாம நாங்க படுற பாடு கொஞ்ச நஞ்சமில்ல. உலகம் சீக்கிரம் மீண்டு வரணும், எங்க ஆட்டம் சபைக்கு வரணும்!”

- பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்ட ஆடை, அலங்காரப் பொருள்களைப் பெருமூச்சுடன் காட்டுகிறார்கள் வடக்கம்பட்டி கோமாளிக் கலைஞர்கள்.

2K kids: இது வடக்கம்பட்டி கோமாளி ஆட்டம்!

``சினிமாவுல நடிச்சிருக்கேன்!”

‘வடக்கம்பட்டி கோமாளி’ குழுவில் இருக்கும் கலைஞர்களில் ஒருவர் ராமன். ‘`எங்க வீட்டுல நாலாவது தலைமுறையா ஆடுற ஆளு நான். 25 வயசுலயிருந்து மதுரை சுத்துப்பட்டு கிராமம் முழுக்க ஆடிட்டு வர்றேன். என்னைத் தொடர்ந்து என் மகனுங்க நாகராஜ், ஜெயக்குமார் ரெண்டு பேரும் இப்போ ஆடிட்டு இருக்காங்க. நான் ‘மதயானைக்கூட்டம்’, ‘விகடகவி’னு சில படங்கள்ல எங்க நடனத்தை ஆடியிருக்கேன். இன்னிக்கு எல்லாரும் எது எதுக்கோ யோசிக்காம செலவு செய்யுறாங்க. கலைஞர்களுக்குக் கொடுக்கும்போது மட்டும் கறாரா கணக்குப் பார்க்குறாங்க. ‘ஆட்டத்துக்கு இம்புட்டு காசு கொடுக்கிறதா..?’னு நெனைக்கிறாங்க. உங்களுக்குத்தான் அது ஒரு நாள் கூத்து, எங்களுக்கு அதுதானே பொழப்பு?!”