Published:Updated:

மதுரை விகடன்: ‘ஆத்தாடி’ ரகசியங்கள்!

மதுரை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை விகடன்

ஓவியம்: மனோகர் தேவதாஸ்

பாசக்கார பங்காளிகளையும், அருவா ஆறுமுகங்களையும் மதுரையின் அடையாளமாக தமிழ் சினிமாவுக்குத் தாரைவார்த்துத் தந்த டைரக்டர்கள்மீது மதுரை மக்கள் ஏக கடுப்பில்தான் இருக்கிறார்கள்.

``பின்னே என்ன பாஸு... மதுரைக்காரய்ங்கன்னாலே அருவாளை அக்குளில் வெச்சுக்கிட்டு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வாசல்ல ‘வாங்கடி மாப்ளைகளா!’ன்னு நிக்கிற மாதிரி சீனைப் போட்டுக் காட்டிப்புட்டாய்ங்கே... எங்களுக்கு வேலைக்குப் போகவும், பொழப்பு தலப்ப பார்த்துட்டு வீட்டுக்கு வரவுமே சரியா இருக்கு... இதுல எங்கிட்டு அருவாளைத் தூக்கிட்டு ஒரண்டைய இழுக்குறது. அட போங்கப்பு... எல்லாமே எங்க பேரைக்கேடுக்க வெளியூர்க்காரங்க பண்ணின பில்டப்பு!’’ என்று ரைமிங்காய்ப் பொருமுகிறார்கள்.

சரி... மதுரையின் இருண்ட பக்கமும், `இரவு’ பக்கமும் எப்படியிருக்கும்... தெரிஞ்சுக்க ஊருக்குள் குந்தாங்கூறாகப் பயணித்தோம்.

மதுரை விகடன்:  ‘ஆத்தாடி’ ரகசியங்கள்!

பொதுவாக தூங்காநகரமான மதுரையில் இரவு நேரங்களில் பெரியார், சிம்மக்கல், ஆரப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதி, பூ மார்க்கெட் , காய்கறி பழ மார்க்கெட் பகுதிகள் பிஸியாக இருக்கும். பரோட்டோ சால்னா, டீ வாசத்தோடு உழைப்பின் வாசம் வீசும் ஏரியாக்கள் இவை. இதில் சில பகுதிகளில் மல்லிகைப்பூவின் வாசமும் கலந்து அடிக்கிறது. இரவு நேரங்களில் ரயில் நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் இருள் சூழ்ந்த பகுதிகளில் மனிதர்கள் நடமாடமுடியாத அளவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள். சில சமூக விரோதிகள், சபலப்படும் இளைஞர்களை ஆசைகாட்டி வரவழைத்து அடித்து உதைத்து பொருள்களைப் பறித்து அனுப்பும் சம்பவங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

பெண்கள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் அடிக்கடி ரெய்டு நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டாலும், காரணமானவர்கள் அரசியல்வாதிகளின் விசிட்டிங் கார்டுகளை தங்கள் பாக்கெட்டுகளில் வைத்திருப்பதால் சிட்டாகப் பறந்துவிடுகிறார்கள்.

ஒரு காலத்தில் புறநகர்ப் பகுதிகளிலும், வைகை ஆற்றங்கரைப் பகுதிகளில் மட்டும்் கள்ளத்தனமாக விற்பனையாகி வந்த கஞ்சா வாசனை, நகரெங்கும் வீசத் தொடங்கியுள்ளது. மதுரையின் இரவுநேரக் குற்றங்களில் முக்கியப் பங்காக கஞ்சா போதை உள்ளது. இரவு நேரங்களில்் ‘கஞ்சா ஆம்லேட்’ மதுரையின்் ரகசிய ஏரியாக்களில் பிரபலம்!

இரவுப்பொழுதில் நடந்தோ, டூவிலரிலோ தனியாகச் செல்லும் ஆட்களை மறித்துத் தாக்கி பணத்தை, மொபைலைப் பிடுங்கும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. அதிலும் பெரியாரிலிருந்து எல்லீஸ் நகருக்குச் செல்லும் இரட்டைப் பாலப்பகுதி டேஞ்சர் ஜோனாக மாறிவிட்டது.

அது சரி... இதெல்லாம் இல்லாத ஊர் எது என்கிறீர்களா? உண்மைதான். இன்னும் மனதில் ஈரம் ஒட்டியிருக்்கும் மனிதர்களையும் தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளையும் கொண்ட ஊர் மதுரை. அதிலிருக்கும் குட்டிக் குறைபாடுகள்தான் இவை. இவற்றை தகுந்தோருக்குக் கவனப்படுத்துவதே நம் நோக்கம்.