Published:Updated:

``ஒவ்வொருவருக்கும் கண்ணீரால் நன்றி சொல்லிக்கிறேன்!" - விகடன் வாசகர்களால் நெகிழும் மகாலிங்கம்

மகாலிங்கம் குடும்பம்
News
மகாலிங்கம் குடும்பம்

``என்னால பேச முடியாது என்பதால, எங்களுக்கு உதவி செஞ்ச ஒவ்வொருவருக்கும் கண்ணீரால் நன்றி சொல்றேன். உதவி செய்த எல்லோருக்கும் எங்க குடும்பத்தினர் அனைவரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்பவரை, கண்ணீர் இடைமறிக்கிறது.

`கொதிக்கும் வெண்கலக் குழம்பு தொண்டை வழியே நம் உடலுக்குச் சென்றால்..?' - நினைத்துப் பார்க்கவே பயங்கரமான அந்த நிகழ்வுதான் மகாலிங்கத்துக்கு நிஜத்தில் நடந்துள்ளது. அந்த விபத்தால், மகாலிங்கத்துக்கு வாழ்க்கையே முடங்கிப்போனது. திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்த இவரது கண்ணீர்க் கதை, விகடன் இணையதளத்தில் சமீபத்தில் வெளியானது. அதைப் படித்த விகடன் வாசகர்கள் பலரும், தங்களால் இயன்ற பண உதவியை அளித்து நெகிழச் செய்தனர்.

குடும்பத்துடன் மகாலிங்கம்
குடும்பத்துடன் மகாலிங்கம்

வெளிநாட்டிலுள்ள விகடன் வாசகர்களும் அதிகளவில் உதவிகள் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். இவற்றின் மூலம் இதுவரை 6,81,766 ரூபாய் பண உதவி கிடைத்துள்ளது. முந்தைய பேட்டியில், சுயதொழில் செய்ய உதவி செய்யுமாறு மகாலிங்கத்தின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி, வாசகர்கள் வாயிலாகக் கிடைத்த உதவித்தொகையில் மகாலிங்கத்தின் மனைவி இசக்கியம்மாள் வீட்டுக்கு அருகிலேயே புதிதாக டெய்லரிங் கடை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அவர் நம்பிக்கையுடன் சுயதொழில் தொடங்கியுள்ளார். அதற்கும், குடும்ப அத்தியாவசியத் தேவைகளுக்கும் 1,81,766 ரூபாய் செலவாகியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தவிர, இசக்கியம்மாள் மற்றும் மகனின் எதிர்கால நலன் கருதி, 5 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வட்டி, மகாலிங்கத்தின் மாதாந்தர மருத்துவச் செலவுக்கு உதவும். மகாலிங்கத்தின் மகன் கல்லூரி முடிக்கும் வரையிலான மொத்தப் படிப்புச் செலவுகளையும், வெளிநாட்டு விகடன் வாசகி ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். வாசகர்களின் நெஞ்சார்ந்த உதவியால், மகாலிங்கத்தின் குடும்பம் புத்துயிர் பெற்றுள்ளது.

மகாலிங்கம் குடும்பம்
மகாலிங்கம் குடும்பம்

இதுகுறித்து எழுத்துபூர்வமாகக் கூறும் மகாலிங்கம், ``அந்த விபத்துக்குப் பிறகு, ஒருநாள்கூட நிம்மதியில்லாம மொத்தக் குடும்பமும் தவிப்போடு இருந்தோம். எஞ்சிய வாழ்நாளுக்கான நம்பிக்கை இல்லாமல் இருந்தபோது, கொஞ்சமும் எதிர்பாராத நிலையில் விகடன்ல எங்க பேட்டி வெளியாச்சு. அதைத் தொடர்ந்து கிடைச்ச உதவிகளால், இழந்த மகிழ்ச்சி மீண்டும் எங்களுக்குத் திரும்பியது. பண உதவிகள் செய்ததோடு, நிறைய வாசகர்கள் ஆறுதலாவும் பேசினாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிலையான வருமானமும், அதற்கான எந்த உத்தரவாதம் இல்லாம இருந்தோம். எங்க பேட்டியில், தொழில் தொடங்க யாராச்சும் உதவினா பயனுள்ளதா இருக்கும்னு சொல்லியிருந்தோம். கொரோனா சூழலால் பெரும்பாலான மக்கள் சிரமத்தில் இருக்காங்க. இந்தச் சூழல்ல பெரிய அளவில் உதவி கிடைக்கும்னு நாங்க எதிர்பார்க்கலை. ஆனா, மக்களின் கருணை, உதவி செய்யும் மனப்பான்மையால் கணிசமான உதவி கிடைச்சு ரொம்பவே நெகிழ்ச்சியாகிட்டோம். என் மனைவி டெய்லரிங் யூனிட் தொடங்கி வேலை செய்றாங்க. வீட்டில் இருந்தபடியே என்னாலான உதவிகளைச் செய்றேன்.

என் உடல்நிலைக்கு, வெளி வேலைக்குப் போக முடியாது. இதனால, என் மனைவி, மகனின் எதிர்காலம் பத்தி தினமும் வருத்தப்படுவேன். இப்போ என் மகன் ஸ்கூல் போறான். அவன் நல்லா படிச்சு, என் மனைவியைக் காப்பாத்திடுவான்னு உறுதியா நம்பறேன். விதையிலிருந்து புது செடி முளைச்ச மாதிரி எங்க வாழ்க்கை இப்போ புதுமையாவும் உற்சாகமாவும் மாறியிருக்கு. முன்னேற முடியும்ங்கிற தன்னம்பிக்கை கிடைச்சிருக்கு. இதெல்லாம் விகடனாலும், விகடன் வாசகர்களாலும்தான் சாத்தியமாகியிருக்கு. என்னால பேச முடியாது என்பதால, எங்களுக்கு உதவி செஞ்ச ஒவ்வொருவருக்கும் கண்ணீரால் நன்றி சொல்றேன். உதவி செய்த எல்லோருக்கும் எங்க குடும்பத்தினர் அனைவரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்பவரை, கண்ணீர் இடைமறிக்கிறது.

புது வாழ்க்கை கிடைத்த மகிழ்ச்சியில் பேசும் இசக்கியம்மாள், ``விகடனில் வந்த பேட்டிக்குப் பிறகு, எங்க வாழ்க்கையே புதுசா மாறியிருக்கு. இந்த உதவிகள் கிடைக்காட்டி, எங்க வாழ்க்கை தொடர்ந்து சிரமமாதான் இருந்திருக்கும். இவ்வளவு உதவிகள் கிடைக்கும்னு நாங்க எதிர்பார்க்கலை. பையனை ஸ்கூலுக்கு அனுப்ப என்ன பண்றதுனு தெரியாம தவிச்சோம். வெளிநாட்டிலிருந்து உதவிய மேடம் ஒருவரால், இப்ப எங்க பையன் எல்.கே.ஜி படிக்கிறான். இப்போ பையன் ரைம்ஸ் பேசுறதைப் பார்த்து பூரிச்சுப்போறோம்.

மறுவாழ்க்கை கிடைச்ச மாதிரி இருக்கு. உதவி செய்த விகடன் வாசகர்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. இப்ப நான் மட்டும்தான் துணி தெக்கறேன். இன்னொரு வேலையாளை நியமிக்கணும். இந்தத் தொழிலை விரிவுபடுத்தி மேலும் வளரணும். எங்களை மாதிரி சிரமப்படும் மக்கள் சிலருக்கு நாங்க உதவி செய்ற நிலைக்கு வளரணும்" என்கிறவருக்கு ஆனந்தக் கண்ணீர்!