Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: லாக்டெளன் விதிகளால் அதிருப்தி - வியாபாரிகள் போராட்டம்; அரசுக்கு 24 மணி நேரம் கெடு!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

மகாராஷ்டிராவில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருப்பதால் வியாபாரிகளும் கடைக்காரர்களும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் வரும் 30-ம் தேதி வரை இரவு 8 மணியிலிருந்து காலை 7 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பகலிலும் ஏராளமான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள், மருந்துக்கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டுமென்றும், மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை இரவு 8 மணியிலிருந்து இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்தக் கட்டுப்பாடுகளுக்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வியாபாரிகளும் கடைக்காரர்களும் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராவி தடுப்பூசி மையம்
தாராவி தடுப்பூசி மையம்

கோலாப்பூர், புனே போன்ற நகரங்களில் அரசின் உத்தரவை மீறி கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. இதனால் போலீஸாருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாக்பூர், மும்பை போன்ற நகரங்களில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மகாராஷ்டிரா முழுவதும் 750வியாபாரிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவில்லையெனில் 8-ம் தேதியிலிருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மகாராஷ்டிரா அரசை எச்சரித்துள்ளனர்.

இந்த வர்த்தக அமைப்புகளில் மொத்தம் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அரசு விதிகளை தளர்த்தவில்லையெனில் கடைகளைத் திறந்துவைத்திருப்போம் என்றும் கடை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். அரசின் புதிய உத்தரவால் மாநிலத்தில் 90 சதவிகித ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. ஹோட்டல் தொழில் பேரழிவைச் சந்தித்துவருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

மகாராஷ்டிரா அரசின் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ``வாராந்தர விடுமுறை நாள்களில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த பொதுமுடக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வார நாள்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் பொதுமுடக்கத்தைப் போன்று இருக்கின்றன. இதனால் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சிறிய கடைகள், சிறிய உணவு விடுதிகள், சலூன்களை அடைக்க வேண்டும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

இதற்கிடையே கட்டுப்பாடுகள் குறித்து அரசு சில விளக்கங்களை அளித்திருக்கிறது. அதன்படி, ``வீட்டு வேலை செய்ய வருபவர்கள், பேப்பர் போட வருபவர்கள், டிரைவர்கள், டெலிவரிபாய்கள், குப்பை எடுக்க வருபவர்கள் நேரடியாக கட்டடத்துக்குள் செல்வதைத் தடுக்க வேண்டும். அவர்கள் முகக் கவசம் அணிந்து, கையைக் கழுவி, சானிட்டைஸரைத் தெளித்து, கையுறை அணிந்து செல்வதைக் கட்டட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளும் பெரியவர்களும் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வரக் கூடாது. வெளியில் இரண்டு அல்லது மூன்று பேராக வருபவர்கள் ஆறடி இடைவெளிவிட்டு இருக்க வேண்டும். லிஃப்ட் பட்டன்களைக்கூட கையுறை அணிந்து அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டுதான் அழுத்த வேண்டும். கார்கள் மற்றும் வாகனங்களை வெளியில் எடுத்துச் செல்வதாக இருந்தால் அவற்றுக்கு சானிட்டைஸர் அடித்த பிறகே வெளியில் எடுக்க வேண்டும்" போன்ற கட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

மேலும், கொரோனா விதிகளை மீறும் கட்டடங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இதற்கிடையே அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனும் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அதன் அடிப்படையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

புதிய பாய்ச்சலில் கொரோனா... தாக்குப்பிடிக்குமா தமிழகம்?

மும்பையில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு:

மும்பையில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்துக்கும் குறைவான தடுப்பூசி மட்டுமே கையிருப்பு இருப்பதாக மும்பை மேயர் கிஷோரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே, மத்திய அரசிடமும், முதல்வரிடமும், எதிர்க்கட்சி தலைவர்களிடமும் பேசியிருப்பதாகத் தெரிவித்தார். மும்பையில் தினமும் 10,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது. மகாராஷ்டிரா அரசு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு